அக்னி வசந்த மகாபாரத விழா!

Draupadi amman
Draupadi amman
Published on

தமிழகத்தின் வட பகுதியில் திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் ‘அக்னி வசந்த மகாபாரத விழா’ நடத்தப்பட்டு வருகிறது. சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில், இவ்விழா முதன்மையானது.

இந்த விழாவை, நான்கைந்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நடத்துகின்றனர். அந்த ஊர்களில் இருப்பவர்களின் விருப்பத்தையும், பொருளாதார வளத்தையும் பொறுத்து, இவ்விழா பத்து முதல் பதிமூன்று நாட்கள் வரை நடத்தப்பெறுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா நடக்கும் நாட்களில் பகலில் ஊர்ப் பொது இடத்திலோ அல்லது பாரத கோயில் என்ற இடத்திலோ மகாபாரதச் சொற்பொழிவு நடக்கும். இரவில் அது கூத்தாக நடத்தப்படும். இத்திருவிழாவின் சிறப்பம்சமானது, விழா நடக்கும் இரவுகளில் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்து நடப்பதுதான்.

இவ்விழா நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் குறவஞ்சி, கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், பகடைத் துகில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம், துரியோதனன் படுகளம் போன்ற கூத்துகள் நடக்கும். இந்தக் கூத்தின் கதாபாத்திரத்தை அவர்கள் பூசியுள்ள வண்ணங்களைக் கொண்டு அறிய முடியும். அர்ச்சுனனுக்கு பச்சை, கண்ணணுக்கு நீலம், பெண் வேடத்துக்கு பசிய மஞ்சள், சூரன், துரியோதனன் போன்றோருக்கு அடர் சிவப்பு போன்ற வண்ணங்கள் என்று முகத்தில் நிறங்கள் பூசி ஒப்பனை செய்து கூத்து நடக்கிறது.

கடைசி நாள் கூத்தாக, கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். பொழுது விடியத் தொடங்கும் போது, கூத்தில் கர்ணனின் உயிர் பிரியும். அதையடுத்து, அன்றையப் பகல் பொழுது துரியோதனன் படுகளம் கூத்து நடக்கும். இந்தக் கூத்தின் முடிவில் தரையில் மண்ணால் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தின் தொடையானது பீமனால் பிளக்கப்படும். அன்று மாலை தீமிதி விழாவும், மறுநாள் தர்மர் பட்டாபிசேகம் நிகழ்ச்சியும் நடந்து விழா நிறைவடையும்.

இதையும் படியுங்கள்:
நெல்லிக்காய் ஜூஸ் + மிளகு தூள் - மேஜிக் செய்யும் இயற்கை மருத்துவ காம்போ!
Draupadi amman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com