Alexander's horse Bucephalus
Alexander's horse Bucephalus

அலெக்சாண்டரின் குதிரை 'புசெபெலஸ்' பற்றித் தெரியுமா?

Published on

புசெபெலஸ் (Bucephalus) என்பது பேரரசர் அலெக்சாண்டரின் குதிரை ஆகும். பழங்காலத்தில் புகழ்பெற்ற குதிரையாக இக்குதிரை இருந்தது.

இந்தக் குதிரையானது பெரிய கருப்பு நிறக் குதிரை என்றும் அதன் புருவத்தின் மீது ஒரு பெரிய வெள்ளை நட்சத்திரம் இருந்ததாகவும், இதன் கண்கள் நீல நிறத்திலிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 344 ஆம் ஆண்டில், பிலிப்பீனஸின் என்ற ஒரு குதிரை வணிகர், அலெக்சாண்டரின் தந்தையான மக்கெடோன் அரசரான இரண்டாம் பிலிப்பிடம் ஒரு குதிரையை விற்க நினைத்தார். அப்போது, அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாகவும், யாருக்கும் அடங்காமலும் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டரின் தந்தை பிலிப், அந்தக் குதிரையினை வாங்காமல் குதிரை வணிகரைத் திருப்பி அனுப்ப நினைத்தார்.

அப்போது பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்த அலெக்சாண்டர், அந்தக் குதிரை, அதன் சொந்த நிழலைப் பார்த்தே மிரட்சி அடைவதைக் கண்டார். அத்துடன் அந்தக் குதிரையைத் தானேப் பழக்கப்படுத்திக் கொள்வதாகவும் தந்தையிடம் தெரிவித்தார். அதன் பிறகு, அவரது தந்தை அந்தக் குதிரையை விலைக்கு வாங்கினார். அலெக்சாண்டர், அந்தக் குதிரையை அதன் நிழலைக் காண முடியாதபடி, சூரியனின் வெளிச்சம் மற்றும் அதனால் ஏற்படும் நிழலை அறியாதபடி நிறுத்தி, அதை அடக்கிப் பழக்கப்படுத்திக் கொண்டார். அதனைக் கண்ட அரசர் பிலிப், தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப் போகிறாய், உனக்கு மக்கெடோன் அரசு மிகச் சிறியது" என்று சொல்லி, அந்தக் குதிரையை அலெக்சாண்டருக்கேப் பரிசாக அளித்து வாழ்த்தியதாக, புளூட்டாக் என்பவர் குறிப்பிடுகிறார்.

தந்தையிடம் பரிசாகப் பெற்ற அந்தக் குதிரைக்கு, அலெக்சாண்டர் புசெபெலஸ் என்று பெயரிட்டார். அலெக்சாந்தருடன் இணைந்து புசெபெலஸ் பல போர்களில் கலந்து கொண்டுள்ளது. இந்தக் குதிரைதான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடாகச் சுமந்து கொண்டு வந்தது. அந்த குதிரையின் மீது கொண்ட அன்பின் காரணமாக, அலெக்சாண்டர் ஒரு நகரத்திற்கு பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார். பிற்காலத்தில், அந்தக் குதிரை வயது முதிர்வு காரணமாக (30 வயதில்) இறந்ததாக ஒரு சிலர் கருதுகின்றனர். ஆனால், அந்தக் குதிரை இந்திய மன்னர் போரசுடன் ஏற்பட்ட போரில் கொல்லப்பட்டது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நெப்போலியனின் குதிரை 'மாரங்கோ'வின் எலும்புக்கூடு எங்குள்ளது தெரியுமா?
 Alexander's horse Bucephalus

அந்தக்குதிரை கி.மு. 326 ஆம் ஆண்டில் செலம் போருக்குப் பின்னர் இறந்து விட்டதாக பழங்காலப் பதிவுகள் கூறுகின்றன. தற்போதைய பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் அக்குதிரை இறந்து போனது என்றும், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் ஜீலத்தை அடுத்துள்ள ஜலம்பூரி ஷெரிப் எனுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்கின்றனர். பஞ்சாப் மாகாணத்திலுள்ள மண்டி பஹாவுதீன் மாவட்டத்தில் உள்ள பலியாபா நகரில் அக்குதிரை அடக்கம் செய்யப்பட்டதாக மற்றொரு பதிவும் குறிப்பிடுகிறது.

logo
Kalki Online
kalkionline.com