நெப்போலியனின் குதிரை 'மாரங்கோ'வின் எலும்புக்கூடு எங்குள்ளது தெரியுமா?

Napoleon
Napoleon
Published on

பிரான்ஸ் நாட்டின் படைத்தலைவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தவர் நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte). ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற இவர், பிரெஞ்சுப் புரட்சியின் தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னர், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளர் என்று பல பதவிகளை வகித்துள்ளார். நெப்போலியனின் ஓவியங்கள் அனைத்திலும், அவர் பயன்படுத்திய சாம்பல் நிறத்திலான கம்பீரமான குதிரை ஒன்றும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குதிரையின் பெயர் 'மாரங்கோ'. 

அந்தக் குதிரைக்கு ஆறு வயதாக இருந்த போது, 1799 ஆம் ஆண்டில் எகிப்தில் இருந்து பிரான்சுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. சாம்பல் நிறத்திலிருந்த இந்த அரேபியக் குதிரை, உருவத்தில் சிறியதாக (57 அங்குலம், 145 செ.மீ) இருந்தாலும், நெப்போலியனுக்கு நம்பகமானதாகவும், துணிவானதாகவும் இருந்தது. நெப்போலியன், மாரங்கோ மீது அமர்ந்து, ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இந்தக் குதிரை பல முறை நெப்போலியனின் உயிரைக் காத்திருக்கிறது. நெப்போலியன் தன் பயன்பாட்டுக்கு 52 குதிரைகள் வரை வைத்திருந்த போதும், முக்கியமான போர்களில் மாரங்கோவையேப் பயன்படுத்தி இருக்கிறார். 

இந்தக் குதிரைக்கு மாரங்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

கி.பி. 1800 ஆம் ஆண்டில் நெப்போலியன் இத்தாலி மீது படையெத்துச் சென்றார். அதில் ஆஸ்திரியாவுடனான போர் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் நடந்தது. ஆஸ்திரியப் படைகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன. இந்த மாரங்கோ போரில் வென்றதன் மூலம், இத்தாலியில் நெப்போலியனின் பலம் அதிகரித்தது. இந்தப் போரில் அடைந்த வெற்றியின் நினைவாக, நெப்போலியன், தனக்குப் போரில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த குதிரைக்கு 'மாரங்கோ' என்று பெயர் வைத்துச் சிறப்பித்தார்.

மாரங்கோ குதிரையின் வாழ்க்கையில், அது எட்டு முறை காயமடைந்திருக்கிறது. ஆஸ்திரியாவுடனான போர், ஜீனா ஆஸ்ட்ரி போர், வாக்ராம் போர், வாட்டர்லூ போர் போன்ற முக்கியமான பல போர்களில் நெப்போலியனைச் சுமந்து சென்றிருக்கிறது. இக்குதிரை அடிக்கடி வால்டோலிடிலிருந்து பர்ஸோஸ் வரை 80 மைல் தொலைவுக்கு நெப்போலியன் செல்ல அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டது. இத்தொலைவைப் பெரும்பாலும் ஐந்து மணி நேரங்களில் இக்குதிரை கடந்திருக்கிறது. 1812 ஆம் ஆண்டில் ரசியாவின் கடும் குளிரிலும் தளராமல், அவரைச் சுமந்து சென்றது. பின்னர், மாஸ்கோவில் இருந்து பின்வாங்கிச் செல்லவும் இக்குதிரையேப் பயன்படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து எடுத்துச் சென்ற 4 விலை மதிப்பில்லாத பொருட்கள்!
Napoleon

நெப்போலியன் தோல்வியுற்ற வாட்டர்லூ போரிலும் மாரங்கோதான் பங்கேற்றது. இத்தோல்விக்குப் பிறகு, நெப்போலியனின் குதிரையான மாரங்கோவைப் பிடித்துச் சென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பீட்டர் என்பவர், அக்குதிரையை இன்னொரு தளபதிக்கு விற்றார். அதன் பிறகு, அக்குதிரை 1831 ஆம் ஆண்டு, அதனுடைய 38 ஆம் வயதில் இறந்து போனது.

Napoleon's horse Marengo
Napoleon's horse MarengoImg Credit: Wikipedia

மாரங்கோவின் எலும்புக்கூடு,  தற்போதும் லண்டன் தேசிய ராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com