அதோ.. இதோ... என்று கண்ணாமூச்சி ஆடிகொண்டிருந்த 'ஹோலிப் பண்டிகை' யானது இதோ.. இன்று வந்தே விட்டது. இது கிருஷ்ணர் மற்றும் ராதை மீது மக்களுக்குள்ள எல்லையில்லா பக்தியையும் அன்பையும் காட்டவும், நரஸிம்ஹ அவதாரத்தில் விஷ்ணு இரண்யகஷிபு என்னும் அசுர அரசனை கொன்று ஜெயித்த நாளை கொண்டாடுவதற்காகவும் ஏற்பட்ட திருநாள். பொதுவாக வட மாநிலங்களில் அதிகமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா, தற்போது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் மக்கள் வித விதமான இனிப்பு வகைகளையும் பட்ஷணங்களையும் வீட்டிலேயே தயாரித்து உட்கொள்கின்றனர். வண்ண வண்ண மயமான கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், கலர் பொடி கலந்த தண்ணீரை மற்றவர் மீது பீச்சி அடித்தும் மகிழ்கின்றனர்.
வண்ணப் பொடிகளைத் தூவி ஆளே அடையாளம் தெரியாமல் உருமாறி பாட்டுப் பாடி ஆட்டம் ஆடத் தேவையான சக்தி பெற பாதாம் பாலை அருந்தி விட்டு விழாவைத் தொடங்குகின்றனர். இதற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ஆல்மன்ட் மில்க் ரெசிபி இதோ..
பாதாம் பால் ரெசிபி:
ஒரு கப் பாதாம் பருப்பை நன்கு ஊற வைத்து தோலை உரித்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் அதை மசிய அரைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அடிக்கடி கிளறிவிட்டு கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அதனுடன் ஒரு கப் சர்க்கரை, இரண்டு ஏலக்காய், அரைத்து வைத்த ஆல்மன்ட் பேஸ்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் குங்குமப் பூ சேர்த்து ஒரு சேர கலந்து விடவும். சிறு தீயில் வைத்து கொதி வந்ததும் இறக்கி விடவும். பாதாம் பால் ரெடி.
இதை சூடாகவோ குளிரச் செய்தோ அருந்தலாம்.
வித்யாசமான சுவை விரும்புவோர் காரட்டை வேகவைத்து மசித்தும் இதனுடன் சேர்த்துக் குடிக்கலாம்.
நீங்களும் பாதாம் பால் அருந்திவிட்டு பண்டிகையை கொண்டாடத் தயாராகுங்கள்!