
பேச்சுக் கலை என்பது மக்களை வசியம் செய்யும் கலை. அந்த கலையில் நீங்கள் விற்பன்னராகி விட்டால் சிறந்த தலைவராகவும் மாறி விடலாம்.
தென்னாட்டு காந்தி என அழைக்கப்படும் அறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த பேச்சாளர், தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர். யேல் பல்கலைக்கழகத்தில், நாடாளுமன்றத்திலும் பேசி அவையோரை ஆச்சர்யப்படுத்தியவர்.
ஒரு கல்லூரியில் அறிஞர் அண்ணா அவர்கள் பேச சென்றார். அவரை மடக்க நினைத்த அந்த கல்லூரி மாணவர் ஒருவர், "ABCD என்ற ஆங்கில எழுத்து வராத வார்த்தைகள் கூற முடியுமா?" என கேட்டார்.
உடனே அறிஞர் அண்ணா அவர்கள் one, two, three என துவங்கி Ninety Nine” என முடித்து கொண்டார். Hundred என்பதில் D என்ற எழுத்து வந்து விடும். பலத்த கைத்தட்டல்கள். மாணவர் அண்ணாவின் ஆங்கில அறிவாற்றலை வியந்தார்.
காலம் சென்ற வலம்புரி ஜான் அவர்கள் அறிஞர் அண்ணாவைப் போல தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்.
அவர்களைப் போலவே நீங்களும் பேச்சாளராக மாற வேண்டுமா? இதோ டிப்ஸ்...
நீங்கள் பேசப் போகும் மேடை எது என தீர்மானித்து அதற்கு ஏற்ற வகையில் உங்கள் உரையை தயாரித்துக் கொள்ள வேண்டும். கம்பன் கழக மேடையில், சிரிப்பரங்கம் நகைச்சுவையும், சிரிப்பரங்கம் மேடையில் கம்பராமாயண சொற்பொழிவு எடுபடாது. எனவே இவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும்.
மேடைக் கூச்சம், தயக்கம், பயம் இவைகளைக் களைந்து விட சிறந்த வழிமுறை… கண்ணாடி முன்பு நின்று நீங்கள் பேசி பழக வேண்டும்.
ஒரு தலைப்பிற்கான பேச்சைத் தொடங்கி விட்டு…. இடையில் வேறொரு தலைப்பிற்கு தாவக் கூடாது. தாவினால், கூட்டத்தினர் தாவி வெளியேறி விடுவார்கள்.
பேச்சு சுவாரஸ்யமாக துவங்க வேண்டும். ஆரம்பிக்கும் பொழுது அறிஞர்களின் பொன்மொழிகள் சொல்லலாம். திருக்குறளின் ஏதாவது ஒரு குறளை மேற்கோள் காட்டலாம். அல்லது 'கைக்குத்தல் அரிசி உடலுக்கு நல்லது கைத்தட்டல் அரங்கிற்கு நல்லது' என அல்லது 'முக்கிய அறிவிப்பு என்றவுடன் கூட்டத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த நேரத்தில்… நான் தாங்க பேசப்போகிறேன்' என நகைச்சுவையாக பேசி மக்களை கவர வேண்டும்.
நாள்தோறும் பேச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குரல் வளம் சிறப்பாக இருக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
நீங்கள் பேசப்போகும் உரையை நீங்களே பேசி குரல் பதிவு செய்து நீங்களே கேட்டு அதில் உள்ள குறைகளை களையலாம்.
சிறந்த பேச்சாளராக மாறுவதற்கான அடிப்படை தேவையே நிறைய வாசித்தல் தான். அறிஞர் அண்ணா அவர்கள் கன்னிமாரா நூலகத்தில் நிறைய நேரம் செலவிட்டு நிறைய நூல்களைப் படித்து படித்து சிறந்த பேச்சாளராக மாறினார்.
திருக்குறள், தமிழின் சங்க நூல்கள், கம்பராமாயணம் ஆகியவற்றைப் படித்து, சில குறிப்புகள் எடுத்து வைத்து கொள்ளலாம். அவை உங்கள் பேச்சுக்கு உறுதுணையாகவும், கூட்டத்தினரைக் கவரவும் செய்யும் .
பேச்சுக் கலை என்பது மக்களை வசியம் செய்யும் கலை. அந்த கலையில் நீங்கள் விற்பன்னராகி விட்டால் சிறந்த தலைவராகவும் மாறி விடலாம்.
நல்லா பேசுங்க தலைவரா மாறுங்க!