பண்டையக் காலத் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும், குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் போர்ப் படைகளை வைத்திருந்தனர். இப்படிப் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள் அதன் 1. தரம், 2. நிலை, 3. வகை, 4. வகுப்பு, 5. உறுப்பு என்கிற ஐந்து பிரிவுகளின் கீழ் பிரிக்கப் பட்டிருந்தன.
பல்தரப் படைகள்:
படைகளை அதனுடைய தர அடிப்படையில் பதினாறு விதமாகப் பிரித்துள்ளனர்.
1. மூலப் படை - தினமும் பயிற்சி செய்து கொண்டு நெடுங்காலமாக நிலைத்துள்ள சேனையை மூலப்படை என்பர்.
2. உரிமைப் படை - மான்யம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்தில் அரசனுக்காகப் போரிடும் சேனையை உரிமைப் படை என்பர்.
3. கூலிப் படை - போர்க்காலத்தில் மட்டும் கூலிக்காகப் பணியாற்றும் சேனையைக் கூலிப் படை என்பர்.
4. துணைப் படை - நட்பு காரணமாகப் போரில் உதவும் சேனையைத் துணைப் படை என்பர்.
5. அமயப் படை - அவசர நிலையில் சேர்க்கப்படும் சேனையை அமயப் படை என்பர். இது புதுப் படை என்றும் குறிப்பிடப்படுகிறது.
6. வன் படை - நாட்டுப் பற்றால் ஏற்பட்ட மன எழுச்சி காரணமாக அமையும் சேனையை வன் படை என்பர்.
7. பயிற்சிப் படை - போர்ப் பயிற்சி கற்ற சேனையைப் பயிற்சிப் படை என்பர்.
8. பயிற்சியில் படை - பயிற்சி பெற்றூக் கொண்டிருக்கும் சேனையப் பயிற்சியில் படை என்பர்.
9. குழுப் படை - மன்னன் அமைத்த தலைவனை உடைய சேனையைக் குழுப் படை என்பர்.
10. தனிப் படை - தலைவன் இன்றித் தாமாகவே இயங்கும் சேனையைத் தனிப் படை என்பர்.
11. கருவி பெறு படை - அரசனால் வழங்கப்படும் போர்க் கருவிகளைப் பெற்று விளங்கும் சேனையைக் கருவி பெறு படை என்பர்.
12. தற்கருவிப் படை - தத்தம் போர்க் கருவிகளைக் கொண்டு போர் செய்யும் சேனை தற்கருவிப் படை என்பர்.
13. ஊர்திப் படை - காவலனால் தரப்பட்ட வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனையை ஊர்திப் படை என்பர்.
14. தன் ஊர்திப் படை - தத்தம் வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனையை தன் ஊர்திப் படை என்பர்.
15. கானப் படை - வேடர் முதலிய வன மக்களைக் கொண்ட சேனையை கானப் படை என்பர்.
16. பகை விடு படை - பகைவனை விட்டு வந்து தானாகக் கூடிய சேனை பகை விடு படை என்பர்.
இருநிலைப் படை
படை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு, 1. அகப் படை, 2. மறப் படை என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.
நான்கு வகைப் படை:
படை அதன் வகையைப் பொறுத்து,
காலாள் படை - தனி நபராகப் போரிடும் படை
பரிப் படை - குதிரைகளின் மேல் அமர்ந்து சென்று போரிடும் படை
யானைப் படை - யானைகளின் மேல் அமர்ந்து சென்று போரிடும் படை
தேர்ப் படை - தேர்களில் அமர்ந்து சென்று போரிடும் படை
என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
நான்கு வகுப்புப் படை:
படையை 1. அணி, 2. உண்டை, 3. ஒட்டு, 4. யூகம் என்று நான்கு வகுப்புகளாகப் பிரித்திருந்தனர்.
ஐந்து உறுப்புப் படை:
படையினை 1. தூசி, 2. கூழை, 3. நெற்றி, 4. கை, 5. அணி என்று ஐந்து உறுப்புகளாகக் கொண்டு பிரித்திருந்தனர்.