கிருமி நாசினி தெரியும்! ஆனால் இந்த நாசினி அது அல்ல!

Meditation
Meditation
Published on

சில்லா-நாசினி (Chilla-Nashini) என்பது தன்னை அறிவதற்கான சமயம் சார்ந்த ஒரு சுய பரிசோதனை நடைமுறையாகும். இந்திய மரபிலும் பாரசீக மரபிலும், சில்லா- நாசினி முறை வழக்கத்திலிருக்கிறது. 'சில்லா' எனும் பாரசீக மொழிச் சொல்லுக்குத் தமிழில் நாற்பது என்று பொருள். இதே போல் 'நாசினி' எனும் பாரசீகச் சொல் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கும் நபரைக் குறிக்கின்றது. அதாவது, தியானத்தின் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தி, நாற்பது நாட்கள் உணவு உட்கொள்ளாமல் அமைதியாக இருப்பதை சில்லா-நாசினி என்று குறிப்பிடுகின்றனர்.

சில்லா-நாசினி முறையைக் கடைப்பிடிப்பவர்கள் இதை முழுமையாகச் செய்து முடிக்காவிட்டால், அவர்களுக்கு மரணமோ, மனநிலைப் பிறழ்வோ ஏற்படும் என்கிற நம்பிக்கை இந்திய மற்றும் பாரசீக மரபிலும் இருந்திருக்கிறது. இந்நடைமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் அடையும் இறுதி நிலையானது, இதைக் கடைப்பிடிப்பவரைக் கொண்டும், கடைப்பிடிக்கும் முறைகளைக் கொண்டும் அமையும் என்பதும் கூடுதல் நம்பிக்கையாகும்.

சில்லா-நாசினி கடைப்பிடிக்கும் வழிமுறை மிகக் கடுமையானது என்றும், இதனை மேற்கொள்பவர்கள் தனது கையால் தரையில் ரு வட்டம் வரைந்து, அவ்வட்டத்தினுள் நாற்பது நாட்கள் வரை உணவு அருந்தாமலும், உறக்கமின்றியும் இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் வரைந்த வட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது. இது சூஃபி மரபிலும், இந்து சமய வேதாந்த மரபிலும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விமான ஓட்டிகளாக மிளிரும் இந்தியத் தாரகைகள்!
Meditation

சில்லா-நாசினி எனும் முறையைப் பின்பற்றி இசைக் கலைஞர்கள் ஒரு கடுமையான பயிற்சியைச் செய்வதுண்டு. இந்தப் பயிற்சியில் மூடிய அறைக்குள் இசைக்கலைஞர் நாற்பது நாட்கள் தனது இசைக்கருவியை மீட்டியபடி அமர்ந்திருப்பார். இந்த நாற்பது நாட்களும் வெளியுலகுக்குத் தொடர்பின்றி, மிகக் குறைந்த அளவு உணவை மட்டுமே உண்டு வாழ்வர். இந்த நாற்பது நாட்களிலும் தூங்கி விடாமல் இருப்பதற்காக, இசைக்கலைஞர் தனது முடியைச் சுவருடன் அல்லது கூரையுடன் கட்டி வைத்திருப்பர். இப்பயிற்சி மிக உயர்ந்த திறனுடைய இசைக் கலைஞர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

வரலாற்றில் பதினான்காம் நூற்றாண்டின் சுய வரலாற்று நூல்களில் சில்லா-நாசினியை மேற்கொண்டவர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சவ்தாத் இஸ்மைலோவா (Saodat Ismailova) என்கிற திரைப்பட இயக்குநர் இயக்கிய, உஸ்பெக்கிஸ்தான் நாட்டுத் திரைப்படம் ஒன்றின் பெயர் சில்லா. 88 நிமிடங்கள் திரையில் ஓடும் இத்திரைப்படத்தின் நாயகியான பதின்ம வயதுப் பெண் திடீரென யாரிடமும் பேசாமல் 40 நாட்கள் மெளனமாக இருப்பதே இத்திரைப்படத்தின் கருவாகும். பெண்களின் மீதான மதம் மற்றும் நம்பிக்கைகளின் தாக்கத்தை பற்றிய இத்திரைப்படம், நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்வையும் பேசுகிறது. இத்திரைப்படம் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பரிசுகளைப் பெற்றது. பன்னாட்டு அளவில் இத்திரைப்படம் மௌனத்தின் 40 நாட்கள் (40 Days of Silence) என்றே அறியப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com