
கலை கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இது ஒரு அடையாளத்தை உருவாக்குகின்றது. பாரம்பரியத்தை பாதுகாக்கவும், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கவும் உதவுகின்றது. இவற்றை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
வில்லுப்பாட்டு, வில்லடிச்சன் பட்டு என்றும் அழைக்கப் படுகிறது. இது தென்னிந்தியாவில் காலம் காலமாக நடத்தப்படும் ஒரு இசை கதை சொல்லும் முறையாகும். நாட்டுப்புற கலைகளில் தனி சிறப்புடன் திகழும் வில்லுப்பாட்டு வில்லின் துணைகொண்டு பாடப்படும். இதில் துணை இசைக்கருவிகள் உடுக்கை, வில்லுக்குடம், தாளம், வீசுகோல், கட்டை என பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது.
வில்லின் துணைகொண்டு பாடல்களைப் பாடுவதும், கதைகள் சொல்வதும் என வில்லுப்பாட்டு ஒரு சிறந்த நாட்டுப்புற கலை வடிவமாகும். வில்லுப்பாட்டு பெரும்பாலும் தென் மாவட்டங்களில் கோவில்களில் திருவிழாக் காலங்களிலும், கிராமிய நிகழ்ச்சிகளிலும் முக்கியமாக நிகழ்த்தப்படுகிறது. கதை சொல்வதுடன், பாடல்களையும் பாடுவதே வில்லுப்பாட்டின் சிறப்பான அம்சமாகும்.
வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை சரியாக வரையறுத்து கூற முடிவதில்லை. வீரர்களுடைய பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிய வில்லுப்பாட்டு காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து மக்களின் பொழுது போக்கிற்காகவும், சமுதாய சீர்திருத்த கருத்துக்களை சொல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. சமூகத்தில் உள்ளவர்களுக்கு முக்கியமான கருத்துக்களை, கதைகளை மற்றும் செய்திகளை சொல்வதன் மூலம் எளிதில் சென்றடைய உதவுகிறது.
பாரம்பரிய கலை வடிவமான வில்லுப்பாட்டு ஒரு கலாச்சார வெளிப்பாடாகும். தமிழகத்தின் கலாச்சாரம், வரலாறு மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறது. நாட்டுப்புறக் கதைகள், புராணக் கதைகள் மற்றும் சமூக நிகழ்வுகளை பாடல்களாக பாடுவது வில்லுப்பாட்டின் சிறப்பாகும்.
காப்பு விருத்தம்:
வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்பு விருத்தம் எனப்படும். இறைவணக்கம் செய்வதை இது குறிக்கும்.
வருபொருள் உரைத்தல்:
கதையை தொடங்குவதற்கு முன்பு பாடல் மூலமாக முன்கூட்டியே குறிப்பிட்ட கதையை வில்லில் கூறப்போவதாக கூறுவதாகும்.
குருவடி பாடுதல்:
குருவடி பாடுதல் என்பது தனக்கு ஆசிரியராக இருந்தவரை நினைத்து வணங்கி கதையை நல்லபடியாக சொல்வதற்கு உதவுமாறு கூறுவது குருவடி பாடுதல் எனப்படும்.
அவையடக்கம்:
கதை கூறுபவர் தன்னை எளியவராகவும், கேட்பவர்களை சான்றோராகவும் கருதி கூறுவது. சொல்வதில் ஏதும் பிழை நேருமானால் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதாக இந்தப் பகுதி அமைகிறது.
நாட்டு வளம் மற்றும் கதைக்கூறு:
நாட்டு வளத்தை கதையின் தொடக்கத்தில் கூறுவதும், அதை அடுத்து கதையை முழுமையாக கூறுவதும் இதில் அடங்கும்.
வாழிபாடுதல்:
இறுதிப் பகுதியாக கதை கேட்பவர்கள், கதை சொல்பவர்கள், கதையின் மாந்தர்கள் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிக்கும் நிலை வாழிபாடுதல் எனப்படுகிறது.
முத்துசாமி தேவர், டி. தங்கமணி, என் எஸ் கிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால், யாழ்ப்பாணம் சின்னமணி, சுப்பு ஆறுமுகம், தோவாளை சுந்தரம் பிள்ளை, சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகனும் சிறந்த வில்லுப்பாட்டு கலைஞர்கள் இந்த நாட்டுப்புறக் கலையை செழித்து வளர பெரிதும் உதவியவர்கள்.