இந்திய வரலாற்றின் மிக முக்கிய மற்றும் ஆகாச்சிறந்த நாள். இநதியா அந்நியரின் பிடியிலிருந்து தன்னை போராடி விடுவித்துக்கொண்ட நாள். இந்திய சுதந்திர தினம்.
சமாதானத்தின் நிறமாக மட்டுமே பார்க்கப்படும் மென்மையின் பண்பான வெண்மை, கதர் ஆடையாக மாறி வீர வேள்வி நடத்தி வென்றது என்பது தான் நம் சுதந்திர வரலாறு. பலரின் செங்குறுதியில் தாய்நாட்டின் மண்ணை நனைத்து அந்நியரின் கால்களை தளர்த்தியது நம் வீர வரலாறு. தன் இன்னுயிரையும் துச்சமென எண்ணி எதிர்த்து நின்று போர்க்களம் கண்டு 'என் நாடு' என சொல்லி அடித்தது நம் வீர வரலாறு.
இயற்கை வளங்களில் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் பெரும் பலம் படைத்த நம் பாரத நாட்டின் அருமை அந்நியர் நம்மை அடக்கி ஆளும் வரை நமக்கு தெரிந்திருக்கவில்லை. இன்று நாம் அனைத்திலும் சுதந்திரமாய் மகிழ்வாய் நமது மண்ணில் வாழ்வதற்காக, அன்று 76 ஆண்டுகளுக்கு முன்னர், பலர் தங்களின் எல்லாவற்றையும் உயிர் உட்பட தியாகம் செய்துள்ளனர்.
மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டம், பால கங்காதர திலகரின் தீவிர தேசியவாதம், சுபாஷ் சந்திர போஸின் ஆயுதப் போராட்டம், மற்றும் பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் தியாகங்கள் ஆகியவை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பல பரிணாமங்களை தந்தன.
இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் தற்போதைய அரசியல் போராட்டத்தைப் போல இல்லாமல், ஒரு கலாச்சார மற்றும் இலக்கிய இயக்கமாகவும் இருந்தது. ரவீந்திரநாத் தாகூர், சுப்ரமணிய பாரதி போன்ற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மூலம் தேசிய உணர்வை வளர்த்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வன்முறை. மத மற்றும் சாதி பிரிவினைகள், மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் போன்றவை சுதந்திரப் போராட்டத்திற்கு தடைகளாக இருந்தன.
இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் அரசியல் தலைவர்களின் போராட்டமாக மட்டுமல்லாமல், சாதாரண மக்களின் போராட்டமாகவும் இருந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றும் பெண்கள் போன்ற சாதாரண மக்களும் இது என் நாடு, என் உரிமை, எனக்கானது என சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று, தங்கள் உரிமைகளுக்காக போராடினர்.
போராடி பெற்ற சுதந்திரம் இன்று நம்மிடம் எப்படி உள்ளது என்பதை நாம் சற்றே ஆழமாக சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நம்மை, நமது ஒற்றுமை எனும் பலத்தை, சீர்குலைக்க பலருக்கு இங்கு பேரார்வம் இருப்பதை அண்மை காலங்களில் நாம் அதிகம் பார்க்கிறோம்.
சுதந்திர தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. அது நமது வரலாற்றை நினைவுகூரும் நாள், நமது தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், நமது எதிர்காலத்தை உருவாக்கும் நாள். இந்த சுதந்திர தினத்தில், நாம் நமது தேசத்தின் மீதுள்ள அன்பையும், பெருமையையும் புதுப்பித்துக் கொள்வோம்.
அதோடு சேர்த்து நாம் அனைவருமே ஒற்றுமையுடன் நின்று நமது நாட்டிற்குள்ளாகவே நடக்கும் தீய சதிகளை எதிர்த்து வெல்ல துணிவோடு ஒற்றுமையையும் சேர்த்து இறுகப் பற்றிக்கொண்டு வெற்றியடைய வேண்டும்.
இந்த சுதந்திர போராட்டம் நமக்கு பெரிய சவாலாக நமக்கு முன்பாக இருப்பதை அனுதினமும் உணர்ந்து இன்று மட்டும் சுதந்திர தினமாக கொண்டாடி மறந்துவிடாமல் எப்போதும் நமது இந்திய நாட்டினை பலப்படுத்த உழைப்போம்.
அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம். இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்!