
உலகில் பல விசித்திரமான பறவைகள் உள்ளன. சில பறவைகள் வித்தியாசமான தோற்றத்துடன் காணப்படும். இன்னும் சில பறவைகளோ, வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட விசித்திரமான பறவைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
1. ஹோட்ஸின் (Hoatzin): தென் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பறவைகள் பறக்க முடியாத கிளிகள் போன்ற தோற்றம் கொண்டவை. இவற்றினுடைய குஞ்சுகளுக்கு இறக்கைகளில் நகங்கள் இருக்கும். இது டைனோசர்களைப் போலவே காணப்படும். பசுக்களைப் போலவே இலைகளை ஜீரணிக்கும் ஒரு தாவர வகை பறவையாகும். இந்தத் தனித்துவமான செரிமான அமைப்பு ஒரு வலுவான விரும்பத்தகாத வாசனையை உருவாக்குகிறது. சாணத்திலிருந்து வெளிவரும் ஒரு விதமான வாசனையைப் போல இந்தப் பறவைகளின் வாசம் இருக்கும். இதனால் இவை, 'துர்நாற்றம் வீசும் பறவை' என்றும் அழைக்கப்படுகிறது.
2. லிரேபேர்டு (Lyrebird): ஆஸ்திரேலியாவில் காணப்படும் இப்பறவைகள் மிகவும் அழகாக பாடக்கூடியவை. மேலும், இவை மற்ற பறவைகளின் ஒலிகளையும், மனிதர்களின் ஒலிகளையும் கூட கேட்டு அதேபோல் ஒலி எழுப்பும் சிறப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இந்த அற்புதமான மிமிக்ரி பறவை கூச்ச சுபாவம் உள்ளவை. இவை பாறைகள், குகைகள் அல்லது பாறை விளிம்புகளுக்கு இடையில் உள்ள பிளவுகளில் கூடு கட்டுகிறது. இலை குப்பைகளுக்கு அடியில் காணப்படும் விதைகள், புழுக்கள், பூச்சிகள், பூச்சி லார்வாக்கள் போன்றவற்றை உண்ணும்.
3. அல்பினோ பறவைகள் (Albino Birds): நிறமி குறைபாடுள்ள இப்பறவைகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் காணப்படும். சில சமயங்களில் வேறு சில நிறங்களிலும் காணப்படலாம். இவற்றில் நிறமி இல்லாததால் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை இயற்கையில் மிகவும் அரிதானவை. இவற்றின் அசாதாரண தோற்றம் காரணமாக சில சவால்களையும் சந்திக்கின்றன. இவற்றிற்கு சூரிய ஒளியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், இதன் வெள்ளை நிறம் காரணமாக எளிதில் தெரிவதால் வேட்டையாடப்பட்டு இரையாகின்றன.
4. பிகாதார்ட்ஸ் (Picathartes): ஆப்பிரிக்காவில் காணப்படும் இப்பறவைகள் தலை இல்லாத கோழிகள் போல தோன்றும். இப்பறவைகள் பெரும்பாலும் பாறைகள் நிறைந்த இடங்களில் வாழ்கின்றன. இவை ராக்ஃபௌல் (rockfowl) என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படும் இவை, இரண்டு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெள்ளை கழுத்து பிகாதார்ட்ஸ் மற்றும் சாம்பல் கழுத்து பிகாதார்ட்ஸ். இந்த இரண்டு இனங்களுமே அருகி வரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஈரமான பாறைப் பகுதிகள் மற்றும் குகைகளில் கூடு கட்டும் பழக்கம் உள்ள இவை, பூச்சிகள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்டு வாழ்கின்றன.
5. ஷூபில்பில் (Shoebill): ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த பறவைகள் பெரிய காலணிகளைப் போன்ற அலகுகளைக் கொண்டவை. மெதுவாக நகரக்கூடிய இப்பறவைகள் ஆப்பிரிக்க சதுப்பு நிலங்களில் தங்களுடைய இரையை வேட்டையாடுகிறது. இதன் சக்தி வாய்ந்த அலகுகளால் பெரிய மீன்கள் மற்றும் ஊர்வனவற்றைக் கூட நசுக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவை. இப்பறவைகள் மிகவும் தனித்துவமான பறவைகளில் ஒன்றாக விளங்குகிறது.
6. தேனி ஹம்மிங் பேர்டு(bee humming bird): கியூபா நாட்டில் மட்டுமே காணப்படும் ஒரு வகை ஹம்மிங் பேர்ட் இதுவாகும். மிகச் சிறிய பறவையான இது சுமார் 6 சென்டி மீட்டர் நீளமும், 2 கிராம் எடையும் மட்டுமே கொண்டதாகும். கூர்மையான இறக்கைகள் மற்றும் நீளமான அலகு ஆகியவை இவற்றின் தனித்துவமான அம்சங்களாகும். இவை சிறிய அளவில் இருந்தாலும் பூக்களை மகரந்த சேர்க்கை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
7. ரிப்பன் வால் கொண்ட அஸ்ட்ராபியா (Astrapia): தலையைச் சுற்றி பச்சை மற்றும் நீல நிற இறகுகளுடன் ஒரு அடி நீளம் உள்ள பறவைகள் இவை. ஆனால், இப்பறவைக்கு 3 அடி நீளம் அலங்காரமான வால் உள்ளது. நியூ கினியாவை பூர்வீகமாகக் கொண்ட இப்பறவைகளில் ஆண் பறவைகளுக்கு மட்டுமே இந்த வால் இறகுகள் உள்ளன. இந்த நீண்ட வால் காரணமாக இந்த ஆண் பறவைகள் அவ்வப்போது தடுமாறி விழுவது அல்லது அவற்றினுடைய சொந்த வால்களில் சிக்கிக்கொள்வது போன்ற வேடிக்கைகள் நிகழ்கின்றன.