தமிழர்கள் வரலாற்றின் பண்டையக் கால விருதுகள்! அடடே, இப்படி எல்லாம் விருதுகளா?

Awards of ancient history of Tamils
Awards of ancient history of Tamils
Published on

உலகம் முழுவதும் அரசுகள், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவை பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்வேறு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. பண்டையத் தமிழர் வரலாற்றிலும், தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கியவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் ஆச்சரியமாக இல்லை? வாங்க, அந்தக் காலத்தில் வழங்கப்பெற்ற சில விருதுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

தாமரை விருது:

இந்த விருது சிறந்த தெருக்கூத்து விறலிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சங்ககால அரசர்கள் சிறந்த யாழிசைப் பாணனைப் போற்றிப் பொன்னால் செய்யப்பட்ட தாமரையை விருதாக வழங்கினர். சங்ககாலத்துக் காஞ்சி அரசன் தொண்டைமான் இளந்திரையன் தன்முன் பின்னணி இசைக்கருவிகளுடன் யாழிசை மீட்டித் தன் திறமையை வெளிப்படுத்திய பாணன் பித்தையில் தீயில் மலர்ந்த தாமரையைத் தன் கையால் சூட்டிப் பெருமைப்படுத்தினான் என்று இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறது. 

எட்டி விருது:

எட்டி என்பது சங்ககால விருதுகளில் ஒன்று. சிறந்த உள்நாட்டு வணிகருக்கு அரசரால் இது வழங்கப்பட்டது. எட்டிய நிலங்களில் உள்ள பொருள்களைப் பிறருக்குக் கிட்டும்படி செய்பவன் எட்டி. இந்த எட்டி என்னும் சொல் இக்காலத்தில் செட்டி என மருவி வழங்குகிறது என்றும் சொல்கின்றனர். தொல்காப்பியம் இதனைச் சுட்டுகிறது. யாழிசையில் சிறந்து விளங்கும் பாணனுக்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப்பூ வழங்கப்பட்டது போல, சிறந்த வணிகனுக்குப் பொன்னால் செய்த எட்டிப்பூ வழங்கி அரசன் சிறப்பித்தான் எனத் தெரிகிறது. இதேப் போன்று இவ்விருது பெற்றவர்களுக்கு ‘எட்டிப்புறவு’ எனும் இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. தருமதத்தன் என்னும் வணிகன் எட்டி விருது பெற்றதை மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.

கிழார் விருது:

இவ்விருது ஊர்த்தலைவர் மற்றும் புலவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கிழார், கிழான் என்னும் சொற்கள் உரிமை பூண்டவரைக் குறிக்கும். பெண் ஒருத்திக்கு உரிமை பூண்டவனை அகத்திணை இலக்கணம் ‘கிழவன்’, ‘கிழவோன்’ என்னும் சொற்களால் குறிப்பிடுகின்றன. நிலத்துக்கு உரியவனைத் திருக்குறள் 'கிழவன்' எனக் குறிப்பிடுகிறது. இந்தக் கிழார் என்னும் உரிமைப்பெயர் ஊரின் பெயரோடு புணரும் போது எல்லா இடங்களிலும் இனவொற்று மிகாமல் புணர்ந்துள்ளது.

இந்த வகையில் அரிசில் கிழார் என்றால், அரிசில் என்னும் ஊரில் வாழும் மக்களுக்கு உரியவர் எனப் பொருள்படும். இது இவருக்கு மக்கள் வழங்கிய விருது. அரசன் ஓர் ஊரின் நிலம் முழுவதையும் வழங்கி, இறையிலியாக அதனைக் கிழார் பெருமகனாருக்கு உரிமையாக்கியதால் ‘கிழார்’ எனச் சிறப்பிக்கப்பட்டார் எனக் கொள்வாரும் உண்டு. ஆயின், இது அரசனால் வழங்கப்பட்ட விருது. பல புலவர்கள் இவ்விருதினைப் பெற்றிருக்கின்றனர். 

கிழான் விருது:

இவ்விருது ஊர்த்தலைவர் மற்றும் சிற்றரசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சங்ககால அரசர்களில் சிலரும், வள்ளல்களில் சிலரும் கிழான், கிழவன், கிழவோன் அவர்களுடைய நாட்டின் தலைநகரின் அல்லது வாழ்ந்த ஊரின் பெயரோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் கிழார் போல, அந்த ஊருக்கு உரியவர்கள். இந்த உரிமையினை அந்த ஊர் அல்லது நாட்டு மக்களால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் அல்லது பேரரசன் ஒருவன் இந்த உரிமையை வழங்கியிருத்தல் வேண்டும்.

காவிதி விருது:

சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது, காவிதி விருதாகும். உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல், ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக் கொண்டு வழங்கிய விருதின் மருவிய பெயரே காவிதி விருது என்று கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
'ராவ் பகதூர்', 'திவான் பகதூர்' , 'ராய் சாகிப்'- பட்டங்கள் எதற்காக வழங்கப்பட்டன?
Awards of ancient history of Tamils

தலைக்கோல் விருது:

இந்த விருது சிறந்த அவைக்கூத்து நடன மங்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தலைக்கோல் என்பது அரசன் கையில் வைத்திருக்கும் செங்கோல் போன்றதொரு கோல். சிலப்பதிகாரக் காலத்துச் சோழ வேந்தன், ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய மாதவிக்கு இவ்விருதினை வழங்கிச் சிறப்பு செய்தான். இதனை வழங்கியவன் கரிகாலன் என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்திரன் மகன் சயந்தன் என்பவன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாக மாறினான். சோழன் அதனை வெட்டித் 'தலைக்கோல்' செய்து கொண்ட பின்னர் சாபத்திலிருந்து விடுதலை பெற்றான் என்று சொல்வதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.  

மாராயம் விருது:

மாராயம் என்பது சிறந்த படைவீரருக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரரை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவர் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர்.

தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வீரருக்கு இது வழங்கப்பட்டது. வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரருக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது. 

இதையும் படியுங்கள்:
அஸ்வத்தாமாவை நேரில் பார்த்த மன்னர்… இது கதையல்ல உண்மை!
Awards of ancient history of Tamils

மாநாய்கன் விருது:

இந்த விருது சிறந்த கடல் வணிகருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகார நாயகியான கண்ணகியின் தந்தை ‘மாநாய்கன்’ எனப் போற்றப்பட்டான். நாய்கன் எனப்பட்ட வணிகர்களின் தலைவனை ‘மாநாய்கன்’ என்றனர். அன்றியும் நாவாய் ஓட்டியவனை ‘நாய்கன்’ என்றும், பெரிய நாவாய்களைக் கடலில் ஓட்டியவனை ‘மாநாய்கன்’ என்றும் வழங்கினர். 

இதே போன்று, உறையூர்ப் பொருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இந்தப் புலவரின் தந்தை ‘உறையூர்ப் பெருங்கோழி நாய்கன்’ எனப் போற்றப்பட்டவர்.

மாசாத்துவன் விருது:

இந்த விருது சிறந்த தரை வணிகருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரக் கண்ணகியின் தந்தை இந்த விருதுக்குரியவராகவும் கருதப்படுகிறார். 

இதன் வழியாக, தமிழர் வரலாற்றில் பண்டையக் காலத்தில் விருதுகள் என்பது அவர்களின் உண்மையான தகுதியையும், அவர்களது திறன்களையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போது வழங்கப்படும் விருதுகள் தகுதி மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றனவா? என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கு விருது வழங்குபவர்களும், விருதைப் பெற்றவர்களும்தான் சரியான பதிலைச் சொல்ல முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com