
சிங்கப்பூரில் ஒரு குட்டித் தமிழ்நாடு என்ற பெருமையுடன் இந்தியர்களின் ஒற்றுமைக்கும் கலாச்சாரத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது லிட்டில் இந்தியா. வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் நிறைந்து எந்நேரமும் பரபரப்பாக உள்ள அங்கு, ஒரு (கடை) வீட்டில் கடந்த 30ஆம் தேதி ஆளில்லா வானூர்திகள் மூலம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டது தற்போதைய செய்திகளில் வைரலாகி வருகிறது.
கடுமையான சட்டங்கள் விதிகள் கொண்ட சிங்கப்பூரின் பிரபல சுற்றுலா மையமாகவும் வணிகத் தலமாகவும் விளங்கும் லிட்டில் இந்தியாவில் நடந்த இந்த சோதனையும் குற்றச் செயல்களும் ஒரு பக்கம் கவலை தந்தாலும் லிட்டில் இந்தியாவின் பாரம்பரிய வரலாறு என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
லிட்டில் இந்தியா உருவான பின்னணி மற்றும் அது பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோமா?
பெரும்பாலான சுற்றுலாப் பிரியர்களுக்கு உகந்த இடமாக இருப்பது சிங்கப்பூர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரையில் சிங்கப்பூருக்கு வரக் கூடிய இந்தியப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது சிங்கப்பூர் சுற்றுலாத்துறையின் ஒரு குறிப்பு. சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சுற்றிப்பார்த்து கண்டுகளிக்கவும், ஷாப்பிங் செய்யவும், உண்டு மகிழவும் ஏற்ற இடமாக இருப்பது லிட்டில் இந்தியா எனப்படும் வணிக வளாகம் அல்லது பேரங்காடி.
சிங்கப்பூர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதிதான் லிட்டில் இந்தியா (Little India) . லிட்டில் இந்தியா ஆர்கேட் அதன் பரபரப்பான தெருக்கள், சுறுசுறுப்பான சந்தைகள் மற்றும் தெளிவான நேர்த்தியான சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், கலாச்சாரம், தூய்மை ஆகியவற்றால் பயணிகளைக் கவரும் சிங்கப்பூரின் இடங்களில் ஒன்றாகும்.
லிட்டில் இந்தியாவின் உருவாக்கம் 20ம் நூற்றாண்டு துவங்கிய சுவாரஸ்யமான வரலாறு:
அன்று இனங்களைப் பிரித்து வைக்கும் பிரிட்டிஷார் கொள்கைப்படி, தமிழ் குடியேற்றவாசிகளுக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பூரின் ஒரு பிரிவே கம்போங் சூலியா காலனி. இன்று கம்போங் சூலியா ஒரு தனிப் பகுதியாக இல்லை.
எனினும் செராங்கூன் ஆற்றை அண்டி இந்த பகுதி இருந்தமையால் அக்காலத்தில் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற இடமாக இது இருந்ததுடன், கால்நடை வணிகமும் முக்கிய செயற்பாடாக விளங்கியுள்ளது.
தொடர்ந்து அங்கிருந்த மக்களால் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் வளர்ச்சியுற, 20-ஆம் நூற்றாண்டு தொடங்கும்போது, இந்தப் பகுதி ஒரு தமிழ் இனக் குடியிருப்புப் பகுதியாக அனைவராலும் அறியப்பட்டது.
இன்று உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கும் லிட்டில் இந்தியாவின் உருவாக்கத்தில் தமிழர்களுக்கு அதிகம் பங்கு உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர் பி கோவிந்தசாமி பிள்ளை என்பவர்.
இப்போது லிட்டில் இந்தியா ஆர்கேட் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தது இவரது புகழ்பெற்ற PGP புடவைக் கடை மற்றும் பல்பொருள் அங்காடி. 'பிஜிபி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், சிறந்த பரோபகாரராக வாழ்ந்து போற்றப்பட்டவர். லிட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான பழைய இந்தியக் கோயில்கள், ஸ்ரீ பெருமாள் கோயில் உள்ளிட்ட புனரமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து செய்தவர். அவரின் வணிகத்தைத் தொடர்ந்து பலரும் தங்கள் வணிகத்தை அப்பகுதியில் துவங்கி நடத்தி வருவது சிறப்பு.
புதிய இறைச்சி, கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பொருட்கள் விற்கப்படும் பாரம்பரிய சந்தை மற்றும் அனைத்து வகையான உணவுகள், மேலும் பல மளிகை பொருட்கள், சாலையோர உணவகங்கள், டீக்கடைகள், தையல்காரர்கள் மற்றும் முஸ்தபா மையம், ஊசி முதல் அனைத்தும் கிடைக்கும் பெரிய பல்பொருள் அங்காடி என நமது நேரத்தை மதிப்பு மிக்க தாக்குகிறது இந்த சிராங்கூன் சாலை.
பெருவாரியான இந்தியர்கள் வசிக்கும் லிட்டில் இந்தியா பாரம்பரிய விழாக்களைக் கொண்டாடுவதிலும் சிறந்து விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி இங்கு மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர் லிஷா - லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் இணைந்து இவ்வாண்டும் குடும்பம் எனும் கருப்பொருளை மையமாக வைத்து தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து மக்களை மகிழ்வித்துள்ளது. 64 நாட்கள் நடந்த இந்த விழாவில் இரவு முழுவதும் பொது மக்கள் கண்டு மகிழும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் உற்சாகத்தை தந்து அசத்தியது.
எப்போதும் எந்த நேரத்திலும் களைகட்டும் லிட்டில் இந்தியா சில சர்ச்சைகளிலும் சிக்காமல் இல்லை. வாகன விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற கலவரம் இதற்கு சான்று.
இருப்பினும் சிங்கப்பூரின் கடுமையான சட்டதிட்டங்கள் லிட்டில் இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கு பாதுகாப்பையே தருகிறது என்பதால் இந்திய கலாச்சாரம், மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நம் தமிழர்கள் கட்டமைத்த லிட்டில் இந்தியா என்றும் பெருமைக்குரியதே.