
பயோனெட் - இந்த வார்த்தையை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதன் பயன்பாடு பற்றி நமக்குத் தெரிந்திருக்காது. போர்களில் பயன்படுத்தப்படும் நீண்ட துப்பாக்கியின் முனைப்பகுதியில் பொருத்தப்படும் சிறிய கைப்பிடியுடன் கூடிய ஒரு கூர்மையான கத்தியே பயோனெட் (Bayonet) என்று அழைக்கப்படுகிறது. இது எதற்காக எந்தெந்த சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம்.
பெரிய வகைத் துப்பாக்கிகளின் முனையில் பொருத்தும் சிறிய கைப்பிடி கொண்ட கூர்மையான கத்தி ஆங்கிலத்தில் பயோனெட் (Bayonet) என்று அழைக்கப்படுகிறது. பெரிய வகை துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் போது அதனுடன் ஒரு பயோனெட்டும் இணைத்து அனுப்பப்படும்.
போரில் துப்பாக்கிகளில் குண்டுகள் தீர்ந்த பின்னர் போர் வீரர்ககளின் இறுதி ஆயுதமாக பயன்படுத்தப்படுவது இந்த பயோனெட். உலகப் போர்களில் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஆயுதம் துப்பாக்கிகளே. ஐரோப்பாவில் பொருத்தக்கூடிய பயோனெட் கொண்ட துப்பாக்கி காலாட்படையின் முக்கியமான ஆயுதமாகத் திகழ்ந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் பயோனெட் வெகுவாக பயன்படுத்தப்பட்டது.
பயோனெட் என்ற சொல் பதினாறாம் நூற்றாண்டில் உருவானது. பிரெஞ்சு நகரமான பயோனில் தோன்றிய பயோனெட், துப்பாக்கிகளில் வெடிமருந்துகள் குறைவாக இருக்கும்போது, வீரர்கள் தங்கள் பயோனெட் கத்திகளை துப்பாக்கிகளின் முனையில் பொருத்தி பயன்படுத்தத் தொடங்கினர். பதினேழாம் நூற்றாண்டிலில் தொடங்கிய பயோனெட் தாக்குதலானது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை காலாட்படையில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
போர் முனைகளில் ஒருவர் எதிரியிடமிருந்து தப்பித்துக் கொள்ள, இதை இறுதி ஆயுதமாக பயன்படுத்துவது வழக்கம். எதிரிகளை குத்திக் கொன்று தப்பிக்க இதை பயன்படுத்துவார்கள். பல போர்களில் இந்த ஆயுதம் வெகுவாகப் பயன்பட்டுள்ளது. பல வீரர்களின் உயிர்களைக் காத்துள்ளது.
காலாட்படையில் ஒவ்வொரு வீரரிடமும் துப்பாக்கி எப்போதும் உடன் இருக்கும். போர்முனைகளில் பயோனெட்டும் உடன் இருக்கும். துப்பாக்கியில் இருக்கும் குண்டுகளை வீணடிக்காமல் பயன்படுத்தி எதிரி நாட்டு வீரர்களை வீழ்த்துவதற்காக காலாட்படை வீரர்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருப்பர். தொடர்ந்து இடைவிடாது போர் நீடிக்கும் சமயங்களில் ஒருவரிடம் இருக்கும் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்த பிறகும் சண்டை நீடித்தால் அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுவதுதான் பயோனெட். இடுப்பில் இருக்கும் பயோனெட்டை உடனே எடுத்து துப்பாக்கி முனையில் பொருத்தி தொடர்ந்து போரில் ஈடுபடுவார்கள். இந்த போர் முறையானது 'க்ளோஸ் கம்பாட்' (Close Combat) என்று அழைக்கப்படுகிறது. அதாவது சண்டையில் எதிரிகளுடன் 'நெருங்கிப் போரிடும் முறை' என்று இதற்குப் பொருள். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கி அழித்துத் தங்களைக் காத்துக் கொள்வர்.
பயோனெட்கள் பலவிதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை கத்தி பயோனெட்டுகள் (Type M7) மற்றும் வாள் பயோனெட்டுகள் (Type 30) போன்றவை. இதுபோல இன்னும் பல வகையான பயோனெட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. தற்காலத்தில் நவீன போர்முறைகளில் பயோனெட்டுகளின் பயன்பாடானது மிகவும் குறைவாகவே உள்ளது.
இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் உள்ள போர் நினைவிடத்தில் (Jaisalmer War Museum) 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவாக பயோனெட் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.