புலியைக் கொன்ற வீரனுக்கு அக்காலத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழாவின் பெயர் ‘புலிமங்கலம்’ எனப்படுகிறது. அதாவது, புலியைக் கொன்ற வீரனை புலி மேல் அமர்த்திப் பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பூமாலைகளும், பரிசுகளும் தந்து பாராட்டி விழா எடுப்பர். கிருட்டிணகிரி மாவட்டத்தில், மல்லசந்திரம், மகராசாகடை அருகில் பூதிக்குட்டை, கந்திலி மலை, பாண்டவர் பண்டா போன்ற சில இடங்களில் புலியைக் கொன்ற காட்சிகள் பாறை ஓவியங்களாகக் கிடைத்துள்ளன.
புலியிடமிருந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளைக் காக்க போராடி இறந்த வீரரை, புலிகுத்தி பட்டான் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். புலிகுத்தி - புலி தாக்கி பட்டான் - இறந்துபட்டான் என்பதன் சுருக்கம் என்று கொள்ளலாம். கால்நடைகளைக் காப்பாற்றப் புலியுடன் போராடி இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. சேலம் மேற்குப் பகுதியில், இந்த நடுகல்லினை 'புலிகுத்தி பட்டான் நடுகல்' என்கின்றனர். பல்வேறு இடங்களில் புலிகுத்தி இறந்த வீரரைத் தங்கள் குல தெய்வமாகக் கொண்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலை மீது அமைந்துள்ள ‘மாசி பெரியசாமி’ இதற்கான உதாரணமாகும்.
இதேப் போன்று, தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், செங்கமாரி என்னும் ஊரில் செங்கமாரி புலிகுத்திஅம்மன் கோயில் அமைந்துள்ளது. மேலும், புலிகுத்தி கருப்புசாமி, புலிகுத்தி பெரியசாமி, புலிகுத்தி சீரங்கன் எனும் பெயர்களில் குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகின்றன.
முந்தையக் காலத்தில் புலிகுத்தி நாணயமும் பயன்பாட்டிலிருந்திருக்கிறது. இந்த நாணயத்தின் முன்புறம், ஒரு வீரன் காலை மடக்கிய நிலையில், தன்னை நோக்கிப் பாயும் புலியை எதிர்த்துச் சண்டை போட்டு, அதன் வயிற்றுக்குள் கத்தியைப் பாய்ச்சும் காட்சி உள்ளது. நாணயத்தின் பின்புறத்தில், நடுவில் ஒரு குத்துவாள், அதன் மேலும் கீழும், ’ராம ரா’ என, நாகரி வடிவில் எழுதப்பட்டு உள்ளது. வீரனின் வீரத்தை போற்றவோ, முன்பே இறந்து வழிபடும் தெய்வமாக மாறிய, ஒரு புலிகுத்தியின் நினைவாகவோ, இந்த நாணயத்தைத் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் வெளியிட்டு இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில், மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே எஸ்.பெருமாள்பட்டியிலும், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் உள்ள சீதேவி அம்மன் கோவில் பிரகாரத்திலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகே கொளத்தூர் கிராமத்திலும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மலையமான் கோயில் அருகேயும், சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியிலும், சேலம் நகர், அம்மாப்பேட்டை சாலையிலும் புலிகுத்தி வீரன் நடுகற்கள் இருக்கின்றன.
புலியுடன் மோதி உயிர் விடும் வீரனின் மரபு வழியினர், தங்களின் பெயருக்கு முன்பாக, புலிகுத்தி என்ற சிறப்பு பெயரைச் சேர்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டில் எம். முத்தையா இயக்கத்தில் புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் தலைப்பில் புலிகுத்தி பாண்டி என்று இருந்தாலும், அத்திரைக்கதையில் புலியால் இறந்த வீரன் குறித்த கதை எதுவும் இடம் பெறவில்லை. மதுரை மாவட்டத்தில் புலிகுத்தி பாண்டி, புலிகுத்தி கருப்புசாமி என புலிகுத்தி வீரர்களைச் சிறு தெய்வங்களாக வணங்கி தங்கள் குழந்தைகளுக்கு பெயரிடும் முறைக்குச் சான்றாக இத்திரைப்பட பெயர் இடம் பெற்றது என்கின்றனர்.