

நெசவு என்பது ஒரு தொழில் அல்ல; அது ஒரு கலை என்பதை உலகுக்கு நிரூபித்தது பவானி ஜமக்காளம் (Bhavani Jamakkalam). பவானி ஜமக்காளம் என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் பவானி நகரத்தில் கைத்தறி மூலம் நெய்யப்படும் பாரம்பரியமான போர்வை மற்றும் தரைவிரிப்பாகும். இது அதன் உறுதித் தன்மை, துடிப்பான வண்ணங்கள் மற்றும் தனித்துவமான வடிவங்களுக்காக அறியப்படுகிறது.
ஜமக்காள நகரம்:
பவானி நகரத்தையே ஜமக்காள நகரம் என்று அழைக்கும் அளவிற்கு இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜமக்காளங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. இது மஞ்சள் நகரமான ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பவானி சுற்றுவட்டாரத்தில் திரும்பும் இடங்களில் எல்லாம் தறி சத்தங்களே தாலாட்டாக ஒலித்துக் கொண்டிருந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கைத்தறி ஜமக்காளத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத் தொழிலே பிரதானமாக இருந்துள்ளது.
ஜமக்காளத்தின் தனித்தன்மை மற்றும் சிறப்புகள்:
பருத்தி, கம்பளி, செயற்கைப்பட்டு போன்றவற்றை பயன்படுத்தி ஜமக்காளம் செய்யப்படுகிறது. இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க கையாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
நீடித்து உழைக்கக்கூடிய இவை கண்ணைக் கவரும் வண்ணங்களில் இருப்பதே இதன் தனித்தன்மைக்குக் காரணம். திருமணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து, வளைகாப்பு, கோவில் திருவிழாக்கள் என அனைத்து நல்ல காரியங்களிலும் ஜமக்காளம் தவிர்க்க முடியாத ஒரு பண்பாட்டு அம்சமாக உள்ளது. இவை பூஜை பாய்கள், விருந்தினர்கள் அமரும் தரை விரிப்புகள், போர்வைகள் என பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு அளவுகளில் நெய்யப்படுகிறது.
பட்டு பார்டர் ஜமக்காளங்கள் புகழ்பெற்றவை. அதில் படங்கள், எழுத்துகள், கடவுளின் உருவங்கள் இயற்கை காட்சிகள், ஓவியங்கள் வரைவது என கையாலேயே நெய்து தருவது தனிச் சிறப்பாகும்.
பாரம்பரிய அடையாளம்:
இந்தியாவின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பவானி ஜமக்காளம், 2006 இல் புவியியல் குறியீட்டைப் பெற்றுள்ளது. நுட்பமான கைத்தறி நெசவு மற்றும் வண்ணமயமான வடிவங்கள் மூலம் இது ஒரு கலைப் பொருளாக கருதப்படுகிறது. தரை விரிப்புகள் மற்றும் போர்வைகள் தவிர, இது நவீன வடிவமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
சவால்களும் புதுப்பித்தலும்:
நவீன விசைத்தறிகளின் வருகை மற்றும் பிற சவால்கள் இருந்த போதிலும், ஜமக்காளம் நெசவாளர்கள் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு துணி கலவைகளுடன் பாரம்பரிய கலையை புதுப்பித்து வருகின்றனர்.
உலகளாவிய அங்கீகாரம்:
பவானி ஜமக்காளம் பல கைவினைஞர்களின் கடின உழைப்பால், உலகின் பல்வேறு மாநாடுகளிலும், வடிவமைப்பு நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்று வருகிறது.
துபாயில் வசிக்கும் பிரபல பேஷன் டிசைனர் வினோ சுப்ராஜா, பவானியைச் சேர்ந்த 69 வயதான சக்திவேல் என்பவரிடம் தனக்கு தேவையான டிசைனில் ஜமுக்காளம் நெய்து தரச் சொன்னதுடன், ஜமக்காளத்தையும், சக்திவேலையும் லண்டனுக்கு அழைத்து ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் பவானி ஜமக்காளத்தின் கலை மற்றும் கைவினை பாரம்பரியத்தை உலகறிய வெளிப்படுத்தினார்.
பவானி ஜமக்காளத்தின் உலகளாவிய அங்கீகாரம், கிராம உற்பத்தியாளர்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதுடன், பாரம்பரிய கைவினைப் பணிகளுக்கு மதிப்பையும் புதிய உயரத்தையும் தருகிறது. இருந்தபோதிலும் குறைந்த லாபம், அதிகரித்து வரும் இயந்திரமயமாக்கப்பட்ட உற்பத்தி பொருட்களின் போட்டி போன்றவற்றின் காரணங்களால் நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பாரம்பரிய கைவினைகளை மீட்டெடுக்கவும், நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கவும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.