‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுகொள், கவலை இல்லை, ஒப்புக்கொள்’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலை நாம் கேட்டிருக்கிறோம். பள்ளி, கல்லூரி என்று உயர் தகுதிப் பாடங்களை நாம் கற்றுத் தேர்ந்தாலும், கூடவே ஒரு கைத்தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருந்தோமானல், அது ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவியாக இருக்கும் என்பதுதான் அந்தப் பாடலின் உட்கருத்து.
கைத்தொழில் என்பது பரம்பரைப் பரம்பரையாகத்தான் வரவேண்டும் என்ற அவசியமில்லை. சொந்த கற்பனையின் உருவாக்கும் எந்த வடிவத்தையும் கைத்தொழிலின் படைப்பாகக் கருதலாம். கவிதை, எழுத்து, பேச்சு, ஓவியம், நாட்டியம், இசை, சிற்பம், விளையாட்டு என்று கூடுதலாக ஒரு கலையைத் தெரிந்து வைத்திருந்தால், அது நாம் தனிமையில் இருக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் நமக்கு உற்ற தோழனாக விளங்கி, அந்தத் தனிமையையும் பயனுள்ளதாக மாற்ற வல்லதாக அமையும்.
இவ்வாறு நமக்குத் தெரிந்திருக்கும் ஒரு கலையைப் பிறர் பாராட்டும்போதுதான் நாம் எவ்வளவு மகிழ்கிறோம்! அவ்வாறு பாராட்டுவதோடு நில்லாமல் நம்முடைய அந்தக் கலை வளர அவர்கள் உதவியும் செய்வார்கள் என்றால் நம் மதிப்பும், பெருமையும் வளரத்தானே செய்யும்!
தனிநபர் உதவி என்று ஒரு பக்கம் இருந்தாலும், அரசாங்கமே இப்படி ஆதரவு அளிக்குமனால், குறிப்பிட்ட ஒரு கலை உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கும் நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஓர் அமைப்புதான் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம். இது கைவினைஞர்களின் திறமையைப் பெருமளவில் ஊக்குவிப்பதோடு, அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேலோங்கவும் உதவுகிறது.
தமிழக விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், துறைமுகம், நகரில் சில காட்சி மற்றும் விற்பனை நிலையங்கள் என்று மக்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கைவினைஞர்கள் தயாரித்த கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்துவது, அந்தத் திட்டங்களில் ஒன்று.
இதுதவிர, தமிழக சுற்றுலா தலங்களில் ‘ஹட்’ (HUT) என்ற பெயரில் மிகப் பெரிய விற்பனையகங்களையும் தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் நிறுவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘கிராஃப்ட் கஃபே’ என்ற பெயரில் தமிழக பாரம்பரிய தமிழக உணவுகளை வழங்கும் சிற்றுண்டி சாலைகளை அமைத்து வருகிறது.
சென்னை அண்ணாசாலையிலுள்ள பூம்புகார் விற்பனையகத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பல நூறு வாடிக்கையாளர்கள் வருகை தருகிறார்கள். அவர்களைக் கவரும் வகையில் அங்கே ‘கிராஃப்ட் கஃபே’ (Craft Cafe) நிறுவப்பட்டுள்ளது.
இதன் உள்கட்டமைப்பு முழுவதும் மூங்கில் கழிகளால் அமைந்துள்ளது. கட்டுமான கலைத்திறன் நேர்த்தியுடன், குளிர்சாதன வசதிகளுடனும் உருவாகியுள்ளது. தமிழகப் பாரம்பரிய உணவுவகைகள் இங்கே கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், இந்த சிற்றுண்டிச்சாலை முழுவதிலும் தமிழகக் கைவினைஞர்களின் படைப்புகள், காட்சிப் பொருட்களாக இடம்பெற்றுள்ளன. ‘கிராஃப்ட் கஃபே’க்கு வரும் சுற்றுலாவாசிகள் இனிமையான தமிழகப் பாரம்பரிய உணவுகளை ருசிப்பதோடு, இந்தக் கைவினைப் பொருட்களையும் மிக விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்; தத்தமது வீடுகளில் அலங்காரப் பொருட்களாக அவற்றைக் காட்சிப்படுத்தி மகிழ்கிறார்கள்; வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கிறார்கள்.
இவ்வாறு கைவினைப் பொருட்களை வாங்கி, அவர்கள் தமிழகக் கைவினைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறார்கள். ஆமாம், சுற்றுலாவாசிகள் தாம் வாங்கும் பொருட்களுக்காக அளிக்கும் தொகை, அப்பொருட்களைத் தயாரித்த கைவினைஞர்களுக்குப் போய்ச் சேருகிறது.
‘கிராஃப்ட் கஃபே’க்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள், சில கைவினைப் பொருட்களை அதிக எண்ணிக்கையில் தத்தமது நாட்டுக்கு ஏற்றுமதிச் செய்யச் சொல்லும் வர்த்தக முன்னேற்றமும் ஏற்படுகிறது. இதனால் தமிழக கைவினைஞர்கள் அதிக வருமானம் பெறுகிறார்கள்.
கைத்தொழில் கைகொடுக்கும் என்பது உண்மைதானே?