

பில் பழங்குடியினர் மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் வாழும் மிகப்பெரிய மற்றும் தொன்மையான பழங்குடி சமூகங்களில் ஒன்றாகும். இவர்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகின்றனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தார்பர்க்கர் மாவட்டத்திலும் வசிக்கின்றனர். பண்டைய இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பில் மக்களைப் பற்றிய குறிப்புள்ளது. 'பில்' என்ற சொல் 'வில்' அல்லது 'பில்லு' என்ற திராவிட சொல்லிலிருந்து உருவானது. இவர்கள் வில்வித்தை மற்றும் கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
1) பழங்குடியினரின் மொழி:
தெற்காசியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பழங்குடி சமூகங்களில் பில் ஒன்றாகும். 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் கோண்டு பழங்குடி மக்களுக்கு அடுத்து பில் பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இது ராஜஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 40% ஆகும். உதய்பூரில் உள்ள சிரோஹியின் ஆரவல்லி மலைகள் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாரா மற்றும் துங்கர்பூர் மாவட்டங்கள் இந்த பழங்குடி குழுவிற்கு தாயகமாகும். இந்திய துணைக்கண்டத்தின் பழமையான பழங்குடியினரில் ஒருவரான இவர்கள் பில் மொழியை பேசுகிறார்கள். இது இந்திய-ஆரிய மொழிகளின் ஒரு கிளை மொழியாகும். பல பில்ஸ் மக்கள் மராத்தி, குஜராத்தி அல்லது பெங்காலி போன்ற தாங்கள் வசிக்கும் பிராந்தியத்தின் ஆதிக்க மொழியை பேசுகிறார்கள்.
2) முக்கிய உணவுகள்:
இவர்களின் முக்கிய உணவுகள் சோளம், வெங்காயம், பூண்டு, மிளகாய் போன்றவையாகும். இவற்றை அவர்கள் தங்கள் சிறிய வயல்களில் பயிரிடுகிறார்கள். உள்ளூர் காடுகளில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சேகரிக்கின்றனர். அரிசி, கோதுமை போன்றவை பண்டிகைகள் மற்றும் பிற சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மஹுவா பூவிலிருந்து காய்ச்சி வடிகட்டிய மதுவை அவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
3) கலை மற்றும் ஓவியம்:
பில் ஓவியங்கள் பழங்குடியினரின் வாழ்க்கை, புராணங்கள் மற்றும் இயற்கையை சித்தரிக்கின்றன. இவை தெளிவான வண்ணங்கள் மற்றும் சிக்கலான வடிவங்களுடன் தனித்துவமாக இருக்கின்றன.
பித்தோரா ஓவியம் பில் பழங்குடியினரின் மிகவும் பிரபலமான பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகும். இது அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டது.
4) நடனம் மற்றும் இசை:
வாள் நடனம் பழங்குடியினரின் மிகவும் பிரபலமான நடன வடிவங்களில் ஒன்றாகும். இது விழாக்கள் மற்றும் சடங்குகளின் பொழுது ஆடப்படுகிறது.
கூமர் என்பது பில் பழங்குடியினரின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகும். பில் நடனம், பல்வேறு திருவிழாக்கள் மற்றும் சடங்குகளைக் கொண்டாட இந்த பழங்குடியினர் பல்வேறு வகையான நடனங்களை நிகழ்த்துகின்றனர்.
5) கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்:
இந்த பழங்குடியினர் வாய்வழி மரபுகள் மற்றும் பாடல்கள் மூலமாகவும் கதைகளையும் வரலாறுகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றனர். இவர்கள் வன தெய்வங்கள் மற்றும் ஆன்மாக்கள நம்புகிறார்கள். இது அவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தில் பிரதிபலிக்கிறது.