

தோடா எம்பிராய்டரி என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மலைகளில் வாழும் தோடா (Toda) பழங்குடி சமூகத்தின் கலாச்சார அடையாளத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. இது கையால் செய்யப்படும் ஒரு நுட்பமான தையல் கலையாகும். இந்த பாரம்பரிய கலை பெரும்பாலும் தோடாப் பெண்களால் மட்டுமே பயிற்சி செய்யப்பட்டு, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது உள்ளூர் மொழியில் 'பூக்கூர்' (Pukhoor) அல்லது 'பூத்தகுளி' என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம்:
தோடா எம்பிராய்டரியின் தோற்றம் பற்றிய தெளிவான ஆவணங்கள் இல்லை என்றாலும், பழங்கால இனவியல் பதிவுகளில் நீலகிரி பீடபூமியின் மேற்குப் பகுதியில் தோடாப் பெண்கள் இந்தக் கலையில் ஈடுபட்டதற்கான குறிப்புகள் உள்ளன.
பாரம்பரிய உடை: இந்தக் கலை முதன்மையாக தோடா மக்களின் பாரம்பரிய சால்வைகளான 'பூட்குல்' (Pootkhul) அல்லது 'பூத்தகுளி'-ஐ அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டது. பூட்குல் என்பது தோடா ஆண்களும் பெண்களும் விழாக்காலங்கள், சடங்குகள், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அணியும் ஒரு போர்வையாகும்.
இவர்களின் கலாச்சாரத்தில் இந்தத் துணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, பாரம்பரிய வடிவமைப்புகளுடன் எம்பிராய்டரி செய்யப்பட்ட துணியில் போர்த்தப்பட்டே இறந்த உடலை அடக்கம் செய்யும் வழக்கம் உள்ளது.
புவிசார் குறியீடு (GI Tag): தோடா எம்பிராய்டரியின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் அதன் புவியியல் தோற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக, இது 2013 ஆம் ஆண்டு இந்திய அரசால் புவிசார் குறியீடு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
கலையின் தனித்துவமான அம்சங்கள் (Features of Toda Embroidery):
தோடா எம்பிராய்டரின் பல தனித்துவமான அம்சங்கள் இந்தியாவின் பிற தையல் கலைகளில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
தோடா எம்பிராய்டரியில் பொதுவாக வெள்ளை அல்லது ஆஃப்-வெள்ளை நிற பருத்தித் துணி பயன்படுத்தப்படுகிறது. இதில் சிவப்பு மற்றும் கருப்பு (சில சமயம் நீல நிறம்) கம்பளி நூல்களைப் பயன்படுத்தி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
இந்தக் கலையில் எம்பிராய்டரி செய்யும்போது பிரேம் (Frame) எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. துணியை கையால் இழுத்துப்பிடித்து, தலைகீழான தையல் (Darning stitch) போன்ற நுட்பங்களைப் பயன்படுத்திப் பின்னப்படுகிறது.
இதில் பெரும்பாலும் வடிவியல் (Geometric) அமைப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. இவை எருமை கொம்புகள், மலைகள், பள்ளத்தாக்குகள், காட்டுப் பூக்கள், சூரியன், சந்திரன் மற்றும் தோடா கோவில்களின் கட்டமைப்பு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவை.
இருபுறப் பயன்பாடு (Reversible), இதுவே இதன் ஆகச்சிறந்த தனிச்சிறப்பு. தோடா எம்பிராய்டரி இருபுறமும் அழகாகத் தெரியும் வகையில் பின்னப்படுகிறது. இந்த நுட்பத்தால், எம்பிராய்டரி செய்யப்பட்ட துணி நெய்யப்பட்ட துணி போலவே காட்சியளிக்கும்.
இது தோடாப் பெண்களால் மட்டுமே செய்யப்படும் ஒரு கலை என்பதால், இது பெண்களுக்குள் தலைமுறையாகக் கடத்தப்படும் ஒரு முக்கியமான பாரம்பரியத் திறனாகும்.
கலையின் பரிணாமம்:
வரலாற்று ரீதியாக சடங்கு ஆடையாக மட்டுமே பயன்பட்டு வந்த இந்த பூத்துக்குளி சால்வைகள், இப்போது உலகச் சந்தையில் ஒரு பிரபலமான கைவினைப் பொருளாக மாறியுள்ளது.
பொருட்களின் விரிவாக்கம்: தற்போது, சால்வைகள் மட்டுமன்றி, மேசை விரிப்புகள், கைப்பை (Pouch) போன்ற பல்வேறு தயாரிப்புகளை கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) போன்ற அரசின் விற்பனை மையங்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் கொண்டு செல்லப்படுகிறது.
புத்துயிர் முயற்சி: தோடா பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்தக் கலையும் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியது. இதைத் தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டு அரசு தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் (Toda Embroidery Weavers' Cooperative Production and Sales Society) என்ற அமைப்பை கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. தற்போது, இந்த சங்கத்தில் 312 தோடா பழங்குடியினர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.
கலைஞர்களுக்கு மூலப்பொருட்களை வழங்குதல், நியாயமான விலையை உறுதி செய்தல் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ்நாட்டு அரசு. தோடா கலைஞர்களின் ஓய்வூதியத் தொகைக்கு வழிவகுத்தல், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்கள் வரை இருமாதங்களுக்கு ஒருமுறை இலவச மின்சாரம், உடல்நலக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் மருத்துவச் செலவுகள் மற்றும் பிற உதவிகளைப் பெற வாய்ப்பு, தகுதியுள்ள மூத்த குடிமக்கள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்களை வழங்குகிறது.
தோடா எம்பிராய்டரி, நீலகிரி மலைகளின் தனித்துவமான கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும், பழங்குடிப் பெண்களின் அபாரமான கலைத்திறனுக்குச் சான்றாகவும் இன்றும் நிலைத்திருக்கிறது.