

கருப்பு நிறம் எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை சக்தி மற்றும் வளம் தரும் என்ற நம்பிக்கையை மையமாகக் கொண்டு, பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் கருப்பு கயிறு அணியும் பழக்கம் உருவானது என கட்டுரை கூறுகிறது. இதற்கு விஞ்ஞான ஆதாரம் இல்லையெனினும், மதம், குடும்ப மரபு, தனிநபர் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கம் நிலைத்திருக்கிறது.
நம் நாட்டில், நாம் வாழ்ந்து வரும் மாநிலத்தில், வழி வழியாக அங்கு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பின்பற்றிய, மதம் மற்றும் சமூகம் தொடர்புடைய பழக்க வழக்கங்களை, அடுத்தடுத்த தலைமுறையினரும் அப்படியே பின்பற்றி வாழ்வதுண்டு.
சில இனத்தை சேர்ந்தவர்கள் கருகுமணிகளாலான செயினை கழுத்தில் தாலிக்கொடியாக (மங்கள் சூத்ரா) அணியும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். பொதுவாக கருப்பு நிறமானது கண் திருஷ்டியும் எதிர்மறை ஆற்றலும் நம் உடலுக்குள் புகுவதைத் தடுத்து நேர்மறை விளைவுகளை உண்டுபண்ண வல்லது என்பது அதிகமான மக்களின் வலுவான நம்பிக்கையாக உள்ளது.
மேலும், இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போதும் கருப்பு நிறத்தில் உடையணிந்து பலர் செல்வதையும் காண முடிகிறது. சிலர் வீடுகளில் முன்புற நுழைவு வாயிலில் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிற நூலிழைகளிலான கயிற்றுடன் காய்ந்த மிளகாய் வற்றல்கள், படிகாரம் போன்றவற்றை கட்டித் தொங்க விட்டிருப்பதையும் பரவலாக நாம் காணலாம்.
மேலே கூறப்பட்ட அனைத்துப் பொருட்களிலுமுள்ள கருப்பு நிறம் வெளிப்படுத்துவது ஒரே ஒரு கருத்துத்தான் எனலாம். அதாவது அவ்விடத்தில் (அது வீடாகவோ, உடலாகவோ, வெட்ட வெளியாகவோ எதுவாயிருந்தாலும்) உள்ள கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல்கள் மற்றும் அனைத்து வளங்களும் நிறைந்திருக்க கருப்பு நிறம் உதவும் என்பதே ஆகும்.
இதன் காரணமாக, முன்னோர்கள் அறிவுறுத்தலின்படி, நம் நாட்டில் பல மாநிலத்துப் பெண்களும் இடது காலில் கருப்புக் கயிறு அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை ஆண்கள் வலது காலில் அணிந்து கொள்கின்றனர்.
இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி பெண்களிடமுள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றவும், அவர்களை பேய் பிசாசு, காத்து கருப்பு போன்ற தீய சக்திகள் தீண்டாமல் பாதுகாக்கவும், ஆபத்தை விளைவிக்கும் பொறாமைப் பிறவிகளின் கண் திருஷ்டி படாமலிருக்கவும் பெண்கள் தங்கள் இடது காலில் கருப்புக் கயிறு கட்டிக் கொள்ளுமாறு அவர்களின் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்தப் பழக்கமே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கான சரியான காரணம் மதத்திற்கு மதம் அல்லது குடும்பத்திற்கு குடும்பம் வேறுபடலாம்.
இடது காலில் பெண்கள் கருப்புக் கயிறு கட்டிக் கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் என்பது போன்ற வேறெந்த காரணமும் விஞ்ஞான ரீதியாக கூறப்படவில்லை.
தற்காலத்தில் இதுவே ட்ரெண்டிங் ஆகி கைகளிலும் கருப்புக் கயிறு, சிவப்புக் கயிறு, மணிகள் மற்றும் ருத்ராட்சம் போன்றவற்றாலான அணிகலன்களை, ஆரோக்கியம், ஆயுள் நீடிக்க என பல காரணங்களுக்காக சாய் பல்லவி, தனுஷ் போன்ற நடிகை, நடிகர் மற்றும் பல அரசியல்வாதிகளும் அணிந்து கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது.
அவரவர் வாழ்க்கை அவரவர் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது என்பதே உண்மை!