பிளாக் பியர்டு: ஒரு திகில் மனிதனின் நிஜ வாழ்க்கை வரலாறு!

Pirates Blackbeard
Pirates Blackbeard Image credit: AI Image
Updated on

பிளாக் பியர்டு என்ற பெயரைச் சொன்னாலே பலருக்கும் ஒரு திகில் ஏற்படும். பிளாக் பியர்டு ஒரு புத்திசாலி. அவர் வாழ்ந்த காலத்தில், கடலில் கொள்ளையடிப்பது ஒரு பெரிய தொழிலாகவே இருந்தது. ஆனால், பிளாக் பியர்டு மற்ற கொள்ளையர்களைப்போல கிடையாது.

அவர் எதிரிகளைப் பயமுறுத்திச் சரணடைய வைப்பதன் மூலம், சண்டையை தவிர்க்கும் தந்திரமான அணுகுமுறையை பின்பற்றினார். இது அவரை வரலாற்றில் மறக்க முடியாத மனிதராக மாற்றியது. பிளாக் பியர்டின் உண்மையான பெயர் எட்வர்ட் டீச். அவர் தனது தோற்றத்தையே ஒரு ஆயுதமாக மாற்றினார்.

போர்க்களத்தில் இறங்கும்போது, அவர் தனது தொப்பிக்கு அடியில் எரியும் தீக்குச்சிகளைச் சொருகி, முகத்தைச் சுற்றிக் கரும்புகை எழும்பும்படி செய்வார்.

பார்ப்பதற்கு ஒரு பிசாசு போலத் தோன்றுவார். இதை நேரில் பார்க்கும் எந்தவொரு கப்பல் பணியாளரும், சண்டையிடாமலேயே கப்பலை ஒப்படைத்துவிடுவார்கள். மக்களைப் பயமுறுத்துவதன் மூலம் ரத்தம் சிந்தாமல் கொள்ளையடிப்பதுதான் அவருடைய பிசினஸ் மாடல்!

அவருடைய புகழுக்கு அவருடைய கப்பலான 'குயின் ஆன்ஸ் ரிவெஞ்ச்' (Queen Anne’s Revenge) ஒரு பெரிய காரணம். பிரெஞ்சு அடிமைக் கப்பலைக் கைப்பற்றி, அதை முழுவதுமாக ஆயுதங்களால் நிரப்பி, கரீபியன் கடல் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
ஏன் இந்த நகரத்தை 'வெள்ளி நகரம்' என்கிறார்கள்? ஸ்காட்லாந்தின் பிரம்மாண்ட வரலாற்று ரகசியம்!
Pirates Blackbeard

1718 இல் சார்லஸ்டன் நகரை முற்றுகையிட்டு அவர் செய்த கொள்ளை, இன்றும் வரலாற்றில் பேசப்படுகிறது. மக்களைக் கடத்தி, கப்பல்களைச் சிறைபிடித்து, அவர் செய்த அதிரடி நடவடிக்கைகள் அவரை ஒரு பயங்கரமான மனிதனாக அடையாளப்படுத்தின.

ஒரு கட்டத்தில் அரச மன்னிப்பைப் பெற்று, சட்டப் பூர்வமாக வாழ முயற்சிப்பது போல நடித்து, வளைகுடா பகுதிகளில் அதிகாரிகளை ஏமாற்றித் தனது கொள்ளையைத் தொடர்ந்தார். ஆனால், வர்ஜீனியாவின் கவர்னர் அலெக்சாண்டர் ஸ்பாட்ஸ்வுட், பிளாக் பியர்டை ஒழிக்கத் தீர்க்கமாக இருந்தார். 1718 ஆம் ஆண்டு, லெப்டினன்ட் ராபர்ட் மேனார்டு தலைமையிலான படையுடன் நடந்த போரில், பிளாக் பியர்டு 25 கத்திக் குத்துகளையும், 5 குண்டுக் காயங்களையும் தாங்கி வீர மரணம் அடைந்தார்.

பிளாக் பியர்டு இறந்த பிறகு, அவரைப் பற்றிய கதைகள் மிகைப்படுத்தப்பட்டு மக்களிடையே பரவின. அவர் ஒரு சாதாரண மனிதனாக இல்லாமல், கடல் கொள்ளையர் களின் அடையாளமாக மாறினார். அவர் சண்டையை விட, பயத்தை எப்படி சாதகமாகப் பயன்படுத்தினார் என்பதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம். வரலாற்றில் கொடூரமான கடற்கொள்ளையன் என்று அவர் அழைக்கப்பட்டாலும், அவருடைய திட்டமிடலும், தந்திரமும், லட்சியமும் இன்றும் ஆச்சரியப்பட வைக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com