நாட்குறிப்பு (Diary) என்பது தனி மனிதனின் ஒரு நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது அல்லது அன்றைய பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவும் ஏடு ஆகும். டைஸ் என்ற இலத்தீன் சொல்லுக்கு நாள் என்பது பொருள் இந்தச் சொல்லிலிருந்து டைரியம் என்னும் இலத்தீன் சொல் உருவானது. இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்தே டைரி என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாட்காட்டிக்கு நிகராக பஞ்சாங்க குறிப்பு, நல்ல நேரம், ராசிபலன், திதிகள், நட்சத்திரபலன், சந்திராஷ்டம தினம், சுபமுகூர்த்த தினங்கள் என 365 பக்கங்களிலும் எளியமுறை விளக்கங்களும், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொன்மொழிகள் குறிபிடப்பட்டு இருக்கும். பெரிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு அன்று நாட்குறிப்பு அன்பளிப்பாக வழங்கி வருகின்றன. புத்தாண்டு பிறப்பின் போது, நாட்காட்டிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் வாங்க நினைப்பது நாட்குறிப்புகள்தான். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் மனதை ஈர்க்கும் அட்டைப் படங்கள், புதுப்புது வடிவங்களுடன் பல வகைகளில் நாட்குறிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
நீளமான நாட்குறிப்புகளின் பட்டியல் (List of longest diaries) குறிப்பிட்ட நாட்குறிப்புகளில் உள்ள சொற்களின் எண்ணிக்கையையும் அவை எழுதப்பட்ட காலத்தின் நீளத்தையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இராபர்ட்டு சீல்டு என்பவர் 1972 முதல் 1997 வரையிலான 25 ஆண்டு காலத்தில் எழுதிய நாட்குறிப்பில் 37.5 மில்லியன் சொற்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்நாட்குறிப்பில் துல்லியமான சொற்களின் எண்ணிக்கை இல்லை என்று சொல்லப்படுகிறது.
கிளாடு பிரடெரிக்சு என்பவர் 1932 முதல் 2013 வரையிலான 80 ஆண்டுகளில் எழுதிய நாட்குறிப்பில் 30 மில்லியன் சொற்கள் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது. இதன் கையெழுத்துப் பிரதி 65,000 பக்கங்களைக் கொண்டது என்கின்றனர்.
எட்வார்டு ராப் எல்லிசு என்பவர் 1927 முதல் 1998 வரையிலான 71 ஆண்டுகளில் எழுதிய நாட்குறிப்பில் 22 மில்லியன் சொற்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆர்தர் கிரிவ் இன்மான் என்பவர் 1919 முதல் 1963 வரையிலான 44 ஆண்டுகளில் எழுதிய நாட்குறிப்பில் 17 மில்லியன் சொற்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இயான் காட்து என்பவர் 1975 முதல் 2020 வரையிலான 45 ஆண்டுகளில் எழுதிய நாட்குறிப்பில் 4 மில்லியன் சொற்கள் இருக்கின்றன.
எர்னசுட்டு அச்சே லாப்டசு என்பவர் 1896 முதல் 1987 வரையிலான 91 ஆண்டுகளில் எழுதிய நாட்குறிப்புகளில் இடம் பெற்றிருக்கும் சொற்கள் அறியப்படவில்லை. இது நீண்ட காலம் எழுதப்பெற்ற நாட்குறிப்பு என்று கின்னசு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
வில்லியம் லயன் மெக்கன்சி கிங்கு என்பவர் 1893 முதல் 1950 வரையிலான 57 ஆண்டுகளில் எழுதிய நாட்குறிப்புகளில் இடம் பெற்றிருக்கும் சொற்கள் அறியப்படவில்லை. சொற்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதன் கையெழுத்துப் பிரதி 50,000 பக்கங்களைத் தாண்டியது என்கின்றனர்.
தமிழில் நாட்குறிப்பு எழுதியவர்களில் அதிகம் அறியப்படுபவர் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர்தான்.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரை பெயர்ப்பாளராகவும், துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய இவர், பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 செப்டம்பர் 6 முதல் 1761 சனவரி 11 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
18-ஆம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18-ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகள்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.