1961 ஆம் ஆண்டு வெளிவந்த ‘குமுதம்’ படத்திற்குப் பல சிறப்புகள் உண்டு!
அது வெற்றிப்படமாக அமைந்து நூறு நாட்களைக் கடந்து ஓடியதோடு, தமிழ்ப் படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது. வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் மூன்று இந்திய மொழிகளில் மறு ஆக்கமும் செய்யப்பட்டது. தெலுங்கில் ‘மஞ்சி மனசுலு’ (1962) என்றும், மலையாளத்தில் ‘சுசீலா’ என்றும் (1963), இந்தியில் ‘பூஜா கீ பூல்’ (1964) என்றும் தயாராகி, ஓடியது!
அந்தப் படத்தில் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டு, டாக்டர் சீர்காழி கோவிந்த ராஜன் குரலில், கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் வெளிவந்த, காலத்தை வென்ற பாடல்...
‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்!
இரு கண்பார்வை மறைத்தாலும்
காணும் வகை தந்தான்!’
என்பது!
கல்லில் செதுக்கப்பட்டுள்ள அந்த உருவமானது, பார்வையற்றவர்களால் கூடத் தொட்டு உணரக் கூடியது! என்ற பொருளை விளக்கும் வண்ணம் அமைந்த பாடல் அது!
கல்லில் மட்டுமல்ல… மரத்திலும் கூட அதைச் செய்ய முடியுமென்று இங்குள்ள மரச் சிற்பி நினைத்தார் போலும்! என்ன அருமையான வடிவமைப்பு பாருங்கள்! கண்பார்வை இல்லாதவர்கள் கூடத் தடவிப்பார்த்து இதனை முழுமையாக உணர முடியுமல்லவா?
எம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தியது அடுத்து வரும் வரிகளும், அதற்கேற்றாற்போன்ற அமைப்புடைய சிற்பங்களுந்தான்! பாடல் வரிகள் இவைதான்!
‘பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான்- அவர்
பேச்சையும் மூச்சையும்
பார்வையில் வைத்தான்!…
இங்குள்ள கலைஞர், நம் கவிஞரின் பாடலுக்கு ஏற்றவாறு சிற்பம் செய்தாரோ என்று எண்ண வைத்து விட்டார் நம்மை!
இவை இரண்டுமே சூரிக்கில் (Zurich) நாங்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சாலையில், ஒரு டென்னிஸ் பயிற்சி மையத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது!