
“Chat GPT” என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் 2022 ஆம் வருடம் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை எந்தெந்த செயல்களுக்கு உபயோகிக்கிறார்கள் என்ற விவரங்கள் சமீப காலமாக வெளி வந்தன. அதனைப் படித்தவுடன், கொலு வைப்பதற்கு முன்னால், ஏஐயிடம் கொலு வைப்பதை வடிவமைத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டால் என்ன விவரங்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆங்கிலத்தில் கேட்டு, ஏஐ கொடுத்த விவரங்களின் தமிழ் வடிவம் இந்தக் கட்டுரை.
செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் கேட்ட கேள்வி :
முதலில் எங்கள் வீட்டுக் கூடத்தின் நிழல் படத்தை பதிவேற்றினோம். “இந்தக் கூடத்தில், சாளரத்துக்கு முன்னால் நவராத்திரி கொலு, பின் திரை, கொலுப்படிகள் ஆகியவற்றுடன் வடிவமைத்துத் தர முடியுமா?
செயற்கை நுண்ணறிவின் பதில் :
சரியான இடம். சாளரம் மையமாக இருப்பதால், இயற்கை ஒளியைத் தடுக்காமல், கொலுப் படிகளை முன்னிலைப் படுத்தி, பண்டிகை சூழ்நிலையை அதிகரித்து, நவராத்திரி கொலுவை வடிவமைக்கலாம்.
உங்களுக்கான வடிவமைப்புத் திட்டம் இதோ :
கொலுப் படிகள்: உங்களிடம் இருக்கும் பொம்மைகளின் எண்ணிக்கையைப் பொருத்து, படிகள் ஐந்து அல்லது ஏழு அமைக்கலாம். சாளரத்தை மையமாக வைத்துக் கொலுப் படிகளை வைக்க வேண்டும். இது சமச் சீர்மையை உறுதி செய்வதுடன், கொலுவைக் கூடத்தின் மையப் புள்ளியாக எடுத்துக் காட்டுகிறது.
படிகளின் அகலம்: கொலு சமநிலையுடன் இருக்கின்ற, படிகளின் அகலம், சாளரத்தின் அகலத்திற்குள் இருக்க வேண்டும்.
கொலுப்படிகளுக்குப் பின்னால்: கொலுவிற்குப் பின் திரையாக, நல்ல ஜரிகைகள் நிறைந்த காஞ்சிபுரம் அல்லது பனாரசி பட்டுப்புடவையோ அல்லது இரண்டு பக்கங்களிலும் தங்க பார்டர் போட்ட மெரூன், நீலம் அல்லது பச்சை வண்ணத் துணியோ பயன்படுத்தலாம்.
இந்தத் துணிகளைப் பின்னணியில் அமைக்கும் போது, அதை திரைச்சீலைக் கம்பியிலோ அல்லது துணிகளுக்குப் போடும் க்ளிப் பயன் படுத்தி உபயோகிக்கலாம். ஆனால், இவை சாளரத்தில் போட்டிருக்கின்ற திரையை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர மாவிலைத் தோரணம் அல்லது இயற்கை அல்லது செயற்கையான சாமந்திப்பூ மாலை, தேவதை விளக்குகள் என்று சொல்லப்படும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றைத் தொங்க விடலாம்.
படிகளை அலங்கரிக்க: படிகளின் மேல் விரிப்பதற்கு, வெள்ளைத் துணி அல்லது வெள்ளையும், மஞ்சளும் (க்ரீம்) கலந்த துணி எடுப்பாக இருக்கும். படிகளின் இரு பக்கங்களிலும் அலங்கார ஜரிகைகள் போட்ட துணிகளை இணைக்கலாம்.
மேல் படி: படியின் நடுவில் தேங்காய், மாவிலை ஆகியவற்றுடன் கலசம் வைத்து அதன் இரு பக்கங்களிலும், தெய்வங்களின் பொம்மைகள்.
நடுப்படிகள்: ஆண் மற்றும் பெண் தெய்வ பொம்மைகள், புராணக் கதை மற்றும் கருப்பொருள் உணர்த்தும் பொம்மைகள்.
கீழ்படிகள்: கல்யாணம், கிராமக் காட்சிகள், மிருகங்கள், அன்றாட வாழ்வைச் சித்தரிக்கும் பொம்மைகள்
கடைசி படி: மர பொம்மைகள், மரப்பாச்சி, கிரிக்கெட் விளையாட்டு செட் போன்ற நவீன பொம்மைகள்.
கொலுவிற்கு ஒளியூட்ட: கொலுப் படிகளின் இரு பக்கங்களிலும், வண்ண அலங்கார விளக்குகளைப் பொருத்தலாம். இதைத் தவிர கொலுவைச் சுற்றியும் சிறிய எல்இடி விளக்குகளை நிறுத்தி வைக்கலாம்.
மற்றவை: கொலுவின் ஒரு பக்கம் தினசரி பூஜைக்கு குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். கொலுவின் வலது பக்கம் ரங்கோலி அல்லது உருளையில் மிதக்கும் பூக்கள்.
கொலுவின் இடப்பக்கத்தில் பூங்தோட்டியில் செடி, அலங்காரப் பொருட்கள், நவீன பொம்மைகள் வைக்கலாம்.
இவ்வாறு வடிவமைப்பதால், உங்கள் கொலு பார்ப்பதற்கு பெரிய கொலுவாக காட்சி அளிப்பதுடன், உங்கள் கூடம் காற்றோட்டமாய், ஒளி மயமானதாய் இருக்கும்.
இத்துடன் கொலுப் படத்தையும் வரைந்து அனுப்பியது “Chat GPT”! பல நாட்கள் கலந்து உரையாடி செய்யும் செயலை சில நிமிடங்களில் முடித்தது, செயற்கை நுண்ணறிவு.