

மிருகங்களில் பெரிது எது? ஆனை. மரங்களில் பெரியது எது ? ஆலம். பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் மரங்களுள் நான் ஆலமரமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நான் எங்கு ஆலமரத்தையோ அல்லது அரச மற்றும் வேப்ப மரங்களை கண்டால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளாமல் போகமாட்டேன். ஆலிலை கண்ணன் கேள்விபட்டிருப்பீர்கள் . கிருஷ்ணா அவதார முடிவில் கண்ணன் ஆலிலையில்தான் குழந்தையாக மாறி படுத்தார்.
விருட்சங்கள் தெய்வங்கள் என்று சின்ன வயதிலேயே என் தாத்தா எனக்கு சொல்லி தந்துள்ளார். ஆலமரங்கள் முழுக்க முழுக்க ஆசியாவில் வளரும் மரங்களை ஆகும் . ஆப்பிரிக்காவிலோ அமெரிக்காவிலோ ஆலமரங்களை பார்க்க முடியாது. சமீபத்தில்தான் ஆலமரங்கள் பிளோரிடாவிலும் ஹவாயிலும் நடப்பட்டு பராமரிக்க படுகிறது. இந்தியாவில் உள்ள மிக பெரிய ஆல மரங்கள் மூன்றை பற்றி பாப்போம்.
திம்மம்மா மாரிமானு ஒரு 550 வயதான ஒரு ஒரு ஆலமரம். இதுதான் ஆந்திராவில் அனந்தபூரில் ஜில்லாவில் நின்று கொண்டிருக்கும் உலகத்திலேயே மிகப்பெரிய ஆலமரம் . இதன் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது நிற்கும் இடத்தின் பரப்பளவு சுமார் 19000 ஸ்கொயர் மீட்டர்கள். அதாவது 5 ஏக்கர்கள். இதற்கு 4000 தரை தொடும் விழுதுகள் இருக்கிறது. இதை தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு காடுபோல காட்சியளிக்கிறது . ஒரு மரம் தோப்பாகாது என்று சொல்வார்கள் ஆனால் இந்த திம்மம்மா மாரிமானு ஒரு காட்டுக்கு சமம் என்று கூறப்படுகிறது அப்பப்பா என்ன ஒரு மாபெரும் படைப்பு இதை பார்த்து வாய் பிளப்பாதவர்கள் இல்லை திம்மம்மா ஆலமரம் ஒரு சாதாரண மரம் அல்ல. இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
வெகு காலத்திற்கு முன்பு திம்மம்மா என்ற பெண் தன் கணவன் இறந்த பின் அவருடைய எரியும் சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறினாளாம் . அந்த இடத்தில் துளிர்த்த ஆலமரம்தான் இந்த ஆலமரம் . இங்கு அந்த திம்மம்மாவுக்கு ஒரு சிறிய கோவில் கட்டி இன்றும் வழி படுகிறார்கள்.
திம்மம்மாவிற்கு அடுத்தபடியாக இருக்கும் பிரம்மாண்ட ஆலமரம் கல்கத்தாவில் உள்ள ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் பொட்டானிக் கார்டனில் நின்று கொண்டிருக்கும் மரமாகும். இதன் வயது 250. கல்கத்தா நகரத்திற்கு Garden City என்ற பட்ட பெயர் உண்டு கொல்கத்தாவின் டூரிஸ்ட் அட்ரக்க்ஷனில் இது முக்கியமான ஒன்று.
அதற்கு அடுத்து நம்மூர் அடையாறு ஆலமரம். அன்றைக்கு அடையார் என்றாலே ஆலமரம்தான். இன்று அடையாறு என்றால் ஆனந்த பவன் என்றாகிவிட்டது. இது தியாஸாஃபிகல் சொசைட்டியில் உள்ளது. நான் ஸ்கூல் படிக்கையில் இந்த மரத்தைக்காண எஸ்க்காஷன் வந்தோம். இதன் நிழலில் அமர்ந்து மத்திய உணவு உண்டு களித்தது இன்றும் மறக்கவில்லை இதன் வயது 450.1989 இல் வீசிய சூறை காற்றில் இதன் TRUNk சாய்ந்துவிட்டது . ஆனால் அதன் விழுது பிள்ளைகள் தாங்கி பிடித்து காப்பாற்றின.
ஆலமரத்தை யாரும் விதை போட்டு வளர்ப்பதில்லை. அரச மரமும் அப்படித்தான். ஆண்டவன் அனுக்கிரகத்தால் ஆங்காங்கே தோன்றுபவைதான் இந்த இரண்டு புனித மரங்கள். ஒரு ஆலமரம் ஆயிரம் மற்ற மரங்களுக்கு சமம். மதராஸில் தி நகர் ஆள்வார் பெட் சைதாப்பேட்டை கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் ஆலமும் அரசமும் அன்று இருந்தன. இப்போது மருந்துக்கு கூட ஒன்றை பார்க்க முடியவில்லை.
சென்னையில் இப்போது இருக்கும் ஒரே ஆலமரம் அடையாறு ஆலமரம். அதையும் பார்த்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. ஒரு நாள் அடையார் சென்று நலம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.