
சென்னையில் ரயில் சேவைக்காக எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் முனையங்கள் பாரம்பரிய கட்டிடங்களுடன் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டவையாகும். இவை இரண்டும் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களாகும். இந்த இரண்டு ரயில் நிலையங்களும் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் சென்னையின் தெற்குப் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சோழன் விரைவு ரயில், காரைக்கால் எக்ஸ்பிரஸ் என தென் மாநிலங்களுக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென் மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் சென்னை வருகின்றனர். அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் இந்த எழும்பூரில் இருந்து புறநகர் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
சிறப்பு வாய்ந்த எழும்பூர் ரயில் நிலையம் கட்டுவதற்கு 2½ ஏக்கர் நிலத்தை டாக்டர் புல்னி ஆண்டி என்பவரிடம் இருந்து தென்னிந்திய ரயில்வே நிறுவனம் ரூ.1 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது. பின்னர் 1905-ம் ஆண்டு திருநாகேஸ்வரத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் டி.சாமிநாத பிள்ளையால் ரூ.17 லட்சம் செலவில் இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலை பாணியில் கம்பீரமான குவிமாடங்கள் மற்றும் தாழ்வாரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர், கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தாக கூறப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டுமான பணி 1905-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக 1908-ம் ஆண்டு ஜூன் 11-ம்தேதி திறந்து வைக்கப்பட்டது. முதலில், இதற்கு 'இராபர்ட் கிளைவ்' என்பவரின் பெயர் சூட்டப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், எழும்பூர் ரயில் நிலையம் எனப் பெயரிடப்பட்டது.
பாரம்பரிய முறையில் கட்டும் பணி தொடங்கி 1908-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைக்காக முறைப்படி திறக்கப்பட்டது. 1908-ல் திறக்கப்பட்ட போது இந்த ரயில் நிலையம், ஒரு நடைமேடை மற்றும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே கொண்டதாக இருந்தது.
தற்போது, 11 நடைமேடைகள் மற்றும் 80 எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் 5-வது மிக நீளமான நடைமேடையையும், உலகின் 6-வது மிக நீளமான நடைமேடையையும் கொண்டுள்ளது. இந்த நிலையம் சென்னை நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
ஆரம்பகாலத்தில் எழும்பூரில் இருந்து இலங்கைக்கு ரயில் சேவை இருந்ததாக கூறப்படுகிறது. எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், கொழும்பு செல்லும் பயணிகளை தனுஷ்கோடியில் இறக்கிவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 1964-ம் ஆண்டு வீசிய புயலில், தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த இரயில் சேவை நிறுத்தப்பட்டது.
எழும்பூர் ரயில் நிலையம் திறக்கப்பட்டு நேற்றுடன் 117-வது ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. நூறு ஆண்டை கடந்து மக்களுக்கு சிறப்பான முறையில் இந்த ரயில் நிலையம் சேவை அளித்து வருகிறது. எழும்பூர் ரயில் நிலையம் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்தை விட 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.