
இந்தியாவில் மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய மாவீரரான சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான பிப்ரவரி 19-ம் தேதி 'சிவாஜி ஜெயந்தி'யாக கொண்டாடப்படுகிறது. முகலாயர்களின் ஆட்சியை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சிவாஜிக்கு அவரது தலைமை மற்றும் நிர்வாகத்தின் காரணமாக சத்ரபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 'க்ஷத்திரியர்களின் தலைவர்' என்று அதற்குப் பொருள். சிவாஜி போர்த்துக்கீசிய மற்றும் பிரிட்டிஷ் சமகால புகழ்பெற்ற தளபதிகளான சார்டோரியஸ், ஹன்னிபால், அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர் ஆகியோருக்கு இணையானவர்.
இந்தியக் கடற்படையின் தந்தை:
இளம் வயதிலேயே சிவாஜி வலுவான கடற்படையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டார். டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் கடல் கொள்ளையர்கள் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து மகாராஷ்டிராவின் கொங்கண் கடற்கரையை பாதுகாக்க அவர் சக்தி வாய்ந்த ஒரு கடற்படையை உருவாக்கினார். ஜெய்காட், விஜய்துர்க் மற்றும் சிந்துதுர்க் போன்ற கோட்டைகள் அவரது தொலைநோக்கு உத்திகளை நிரூபிக்கும் வண்ணம் உள்ளன. அவருக்கு இந்திய கடற்படையின் தந்தை என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.
கடற்படைக் கப்பல்களை உருவாக்குவதில் பெருமளவில் முதலீடு செய்தார். போர்த்துகீசியம், பிரெஞ்சு, டச்சு மற்றும் ஆங்கிலேயர்களால் ஈர்க்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட கப்பல்கள் அவரது கடற்படையில் இருந்தன. அவரது கடற்படை, மீனவர்கள், கடற்கொள்ளையர்கள் மற்றும் பிற கடல்சார் சமூகங்களைக் கொண்டிருந்தது. உள்ளூர் திறமைகளைப் பயன்படுத்துவதற்கான அவரது திறனை வெளிப்படுத்தியது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட இராணுவத் தலைவர்:
சிவாஜி மகாராஜாவின் ஆட்சியின் போது, மராட்டிய இராணுவம் 10,000 வீரர்களாக வளர்ந்தது. அவரது தந்தையின் காலத்தில் வெறும் 2,000 வீரர்களாக மட்டுமே இருந்தது. எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரையும் தனது படைகளில் சேர்த்துக் கொண்டார்.
கொரில்லாப் போரின் தந்தை:
இந்தியாவில் 'கொரில்லா போரின் தந்தை' என அழைக்கப்பட்ட சிவாஜி மகாராஜ், திடீர் தாக்குதல்கள் மற்றும் விரைவான அசைவுகளை பயன்படுத்தி எதிரிகளை முறியடிப்பதில் வல்லவர். எதிரிகள் சுதாரிக்கும் முன் வேகமாக தாக்குவது மற்றும் திடீரென்று மறைந்து போவது போன்ற தந்திரங்களில் கைதேர்ந்தவர். அவற்றை தமது வீரர்களுக்கும் பயிற்சி அளித்தார்.
ராய்காட் மற்றும் சின்காட் போன்ற அவரது கோட்டைகள் எதிரிகளால் கைப்பற்ற முடியாத இடங்களில் கட்டப்பட்டிருந்தன. இது பாரம்பரிய போருக்கு பழக்கப்பட்ட சக்தி வாய்ந்த முகலாயப் படைகளை நிலைகுலையச் செய்தது. கோட்டைகளில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும். பாதுகாப்பான புகலிடங்களை வழங்கவும், பொருட்களை சேமிக்கவும், தாக்குதல்களைத் தொடங்கவும், மோதல்களின் போது அடைக்கலம் அளிக்கவும் உதவின.
சிவாஜி தனது எதிரிகளைப் பற்றிய தகவல்களை சேகரிக்க உளவாளிகளையும் தகவல் கொடுப்பவர்களையும் பயன்படுத்தி ஒரு அதிநவீன புலனாய்வு வலை அமைப்பை பயன்படுத்தினார். இது எதிரிகளின் நகர்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் தனது தாக்குதல்களை திட்டமிடவும் குறிப்பிடத்தக்க தந்திரங்களை செயல்படுத்தவும் உதவியது.
ராஜதந்திரம்:
ராணுவ பலம் பெற்றிருந்தாலும் சிவாஜி ஒரு திறமையான ராஜதந்திரியாகவும் இருந்தார். தனது எதிரிகளை தனிமைப்படுத்தவும் அவர்களை வெல்லவும் மற்ற ஆட்சியாளர்கள் மற்றும் ராஜ்ஜியங்களுடன் கூட்டணிகளை உருவாக்கினார். தனது இலக்குகளை அடைய அவர் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களை பயன்படுத்தினார். விரைவான முடிவுகளை எடுக்கக்கூடிய பிராந்திய ஆளுநர்களை கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாக அமைப்பை நிறுவினார்.
தமது மக்களின் நலனில் பெரும் கவனம் செலுத்தினார். நில உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் சுரண்டலை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நீதியை நிலைநாட்டவும் பாடுபட்டார். அதனால் குடிமக்களிடையே அவருக்கு நம்பிக்கையும் ஆதரவும் விசுவாசமும் வளர்ந்தது.
மத சகிப்புத்தன்மை:
ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்தபோதும் சிவாஜி தனது ராஜ்யத்திற்குள் மத சகிப்புத்தன்மை ஊக்குவித்தார். அனைத்து மதங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தார். இதனால் முஸ்லிம்கள் மற்றும் பிற மத குழுக்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் ஆதரவையும் பெற்றார். இது அவரது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்தியது. மேன்மையான நிர்வாகத்தை எளிதாக்கியது.
சுயராஜ்யத்தை ஊக்குவித்தல்:
சுயராஜ்யத்தை வலியுறுத்தினார் சிவாஜி. உள்ளூர் மக்கள் வெளிநாட்டு ஆட்சியாளர்களுக்கு அடிபணியாமல் தங்களை தாங்களே ஆள உரிமைப் பெற வேண்டும் என்று வாதித்தார். சுதந்திரத்தின் வீரராக அவர் அறியப்பட்டார்.