திருவாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீ முலாம் திருநாள் ராம வர்மாவின் ஓய்வுக்காக 1904 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஓய்வு இல்லத்தை, சீனா கொட்டாரம் (Cheena Kottaram) என்று அழைக்கின்றனர். பண்டைய சீனக் கட்டிடங்களின் கட்டடக் கலைப்பாணியைக் கொண்டு அமைந்திருந்ததால் இந்த பெயர். இங்கு கொட்டாரம் என்பது அரண்மனை என்று பொருள் தரும்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர், திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் வணிகத் தலைநகராக கொல்லம் இருந்தது. திருவிதாங்கூர் - மலபார் கடற்கரைப் பகுதியில் அதிக அளவிலான வணிக மற்றும் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளைக் கொண்ட நகரமாக கொல்லம் இருந்திருக்கிறது. மேலும், கொல்லம் துறைமுகத்தின் வழியாக அதிக அளவிலான ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கொல்லம் நகரத்தில் பல அரண்மனைகள் இருந்ததால், கொல்லம் நகரமானது அரண்மனை நகரம் என்றே அழைக்கப்பட்டது.
திருவிதாங்கூர் - மலபார் கடற்கரையில் அமைந்த ஒரே ஒரு விமான நிலையம் கொல்லம் நகரில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், திருவனந்தபுரத்திற்கு ரயில் இணைப்போ, விமான இணைப்போ இல்லை. திருவாங்கூர் மன்னர்கள் கொல்லத்திலிருந்து பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் கொல்லம் தொடருந்து நிலையத்திற்கு அருகில் சீனா கொட்டாரம் எனப்படுகின்ற இந்த அரண்மனையைக் கட்டியுள்ளனர்.
சீனா கொட்டாராமின் கட்டிடக்கலை இந்தோ - சரசெனிக் பாணியில் அமைந்ததாகும். இந்த பாணியானது பொதுவாக இந்திய கட்டிடக்கலை மற்றும் ஐரோப்பிய, இஸ்லாமிய மற்றும் மூரிஷ் கட்டிடக்கலைகளின் ஒன்று சேர்ந்த ஒரு கலவையாகும். சீனா கொட்டாரத்தை வெளியில் இருந்து பார்ப்பதற்கு இரட்டை மாடிக் கட்டிடம் போல் தோன்றினாலும், இது உண்மையில் ஒற்றை மாடியினைக் கொண்டே அமைந்துள்ளது. இந்த ஓய்வு இல்லத்தில் ஏழு அறைகள் அமைந்துள்ளன. முன் புறத்திலும் கட்டிடத்தின் பின்புறத்திலும் வராண்டாக்கள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் இருக்கும் தாழ்வாரப்பகுதியானது மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது.
அங்கிருந்து கொல்லம் போக்குவரத்திற்கான பாலத்தினைக் காணமுடியும். வடக்குப் புறத்தில், இப்போது ஒரே நுழைவாயில் உள்ளது. உள்ளேச் செல்லவும் வெளியே வருவதற்கும் அந்தப் பாதை பயன்படுத்தப்படுகிறது. அங்கே உள்ள ஒரு சிறிய தளத்தில் இருந்து மகாராஜா தனது காரில் ஏறுகின்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. அந்தப் பாதை தொடருந்து நிலையத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
மாளிகையின் நடுவில் நேர்த்தியாக அமைந்துள்ள கோதிக் வளைவுகள் உள்ளன. அனைத்துப் புறங்களிலும் அலுமினியச் சட்டங்களில் படிந்த கண்ணாடி அமைப்புகளைக் கொண்டு உள்ளன. அழகான கண்ணாடிச் சுவரோவியங்கள், வெனிஸ் மாடி ஓடுகள், விண்டேஜ் கேரளா பாணியில் அமைந்த மரச் செதுக்குதல் மற்றும் கூரைகளுக்கு தனித்துவமான டிராகன் போன்ற மர அமைப்புகள் இதன் சிறப்பான அம்சங்களாகும். திருவிதாங்கூரின் சின்னமான சங்கு கிரானைட் அனைத்துப் பக்கங்களிலும் சுவர்களில் காணப்படுகின்றன.
சீனா கொட்டாராம், 'தேசிய மரபுவழி நினைவுச் சின்னம்' என்ற அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை.