

எனக்கு இலக்கண ரீதியான இசை அறிவோ, ரசனையோ கிடையாது. இசைக் கோட்பாடுகளும் தெரியாது. ஒரு சாமானிய இசை ரசிகனாக, உணர்வுபூர்வமாகக் கேட்டு ரசிப்பதும் லயிப்பதும் மட்டுமே நான் கைக்கொள்ளும் இசை நுகர்வு முறை.
அதிலும் தினமும் இசை கேட்பது, அதை ஒரு சடங்காகச் செய்வது போன்ற வழக்கங்களும் இல்லை. எப்போது இசை கேட்கத் தூண்டல் எழுகிறதோ, அப்போது மட்டுமே கேட்பேன். ஆனால் அந்தச் சமயங்களில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இசையில் மூழ்கிப்போவதும் உண்டு.
எனது இசை நுகர்வுத் தொடக்கமும் முற்பகுதியும் பலரைப் போலவே திரை இசைதான். 90-களின் பிற்பகுதியிலும், மில்லினியத்தின் தொடக்கக் காலத்திலும் திரை இசைக்கு அப்பால் உள்ள ஆழமான இசைகளின் பக்கம் கவனம் திரும்பியது. அப்போது கர்நாடக இசை, கஸல் போன்றவற்றை ஓரளவுக்குக் கேட்டு ரசிக்கத் தொடங்கினேன்.
படிப்படியாகச் சொற்களற்ற கருவி இசைகள், பிரத்யேக இசைத் தொகுப்புகள் மீது ஆர்வம் கூடியது. இத்தகைய ஆழமான இசை அனுபவத்தால், பிற்பாடு திரை இசை மீதான நாட்டம் இயல்பாகவே குறைந்தது. கடந்த 15 ஆண்டுகளாகத் திரை இசை கேட்பது அரிதான ஒன்றாகவே ஆகிவிட்டது.
இப்போது காதுகளுக்கான இசையை அல்ல; மனதிற்கும், இதயத்துக்கும், ஆன்மாவுக்குமான இசையையே கேட்க விரும்புகிறேன்.
அவ்வகையில் செவ்வியல் இசை, பல்வேறு நாடுகளின் மரபு இசை, ஆன்மீக இசை, தியானத்திற்கும் இளைப் பாறலுக்கும் பயன்படக்கூடிய மரபு மற்றும் நவீன இசை ஆகியவற்றைக் கொஞ்சம் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றைத் திறன்பேசியிலோ, கணினியிலோ ஒலிக்கச் செய்து கேட்பதே தற்போதைய வழக்கம்.
சீன மரபுப் புல்லாங்குழல் இசை
எனது தேடலில் கிடைத்தவற்றில் என்னை வசியப் படுத்தியது, கரைந்து காணாமல் போகச் செய்தது, சீன மரபுப் புல்லாங்குழல் இசைதான். இதுவரை நான் கேட்டு ரசித்ததில் உச்சமும் அதுவே.
இதற்கு முன்பு நான் கேட்ட புல்லாங்குழல் இசை, தமிழ்த் திரை இசையில் கேட்டுப் பழகியது மட்டும்தான்; அதுபோகப் பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியாவின் புல்லாங்குழல் இசையை ரசித்திருக்கிறேன்.
தமிழ் மரபில் ‘குழல் இனிது யாழ் இனிது’ என்று திருக்குறளிலேயே போற்றப்படும் அளவுக்குப் புல்லாங்குழலுக்கு சிம்மாசன இடமுண்டு. சாமானிய மனிதனையும் சுலபமாக ஈர்த்துத் தனக்குள் ஆழ்த்தும் மென்மை புல்லாங்குழலுக்கு இருக்கிறது. ஆனால், சீனப் புல்லாங்குழல் இசையைக் கேட்ட அந்த முதல் கணத்தில், “இதுவரை நாம் கேட்ட புல்லாங்குழல் இசையெல்லாம் மிகவும் சாமானியமானவைதானோ!” என்ற திகைப்பும் பிரமிப்பும் எனக்குள் ஏற்பட்டது.
சீனப் புல்லாங்குழல் இசையின் அந்த மென்மையும் இனிமையும் வேறு எந்த நாட்டு மரபு இசையாலும் தொட முடியாத உச்சத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.
மலைப் பிரதேசத்துக் காலைப் பனி, மெல்லிய மலரிதழ்கள், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகசைப்பு, சமீபத்தில் பிறந்த சிசு - இதிலெல்லாம் நாம் எப்படிப்பட்ட இனிமையையும் மென்மையும் உணர முடியுமோ, அப்படிப்பட்ட உணர்வு. இது எனது கருத்தல்ல; அனுபவம். மற்றவர்களின் கருத்தும் அனுபவமும் வேறாக இருக்கலாம்.
சீனப் புல்லாங்குழல் இசையின் பல்வேறு ஆல்பங்களைக் கேட்டபோது, அந்தக் கலைஞர்களின் சுவாசமே புல்லாங்குழல் இசைதானோ என்று தோன்றியது. அந்த அளவுக்கு அது அவர்களின் இயல்பாக இருக்கிறது.
உங்கள் ரசனைக்கு மிகச்சிறந்த இரண்டு சீனப் புல்லாங்குழல் இசை இணைப்புகளைப் பகிர்கிறேன்.
முதலாவது, சீனப் புல்லாங்குழல் கலைஞர் சென் யுவே (Chen Yue) இசையில் அமைந்த, தியானத்திற்கும் ஓய்வுக்கும் ஏற்ற ஒரு மணி நேர இசைத் தொகுப்பு.
https://www.youtube.com/watch?v=6ixhN9umyp4
யூட்யூபில் தற்போதுவரை 38 மில்லியன் பார்வையாளர்கள், 18 ஆயிரம் பின்னூட்டங்கள் கண்டிருக்கிற இந்த அதியற்புத இசைக்கான பின்னூட்டங்களில் சில:
· இந்த மெல்லிசையை உருவாக்கியவரே, இந்தக் கொடுமையான கிரகத்தில் உங்கள் இருப்புக்கு ஆசிகள். நீங்கள் இருளில் ஒரு ஒளி.
· வாழ்க்கை ஒரு புல்லாங்குழல் போன்றது. அதில் பல ஓட்டைகளும் வெறுமைகளும் இருக்கலாம்; ஆனால் அதைக் கவனமாகப் பயின்று வாசித்தால், அது மாயாஜால மெல்லிசையை இசைக்கும்.
· மலை உச்சியில் தனிமையில் வாடும் ஒருவன், செர்ரி மரத்தின் அருகே அமர்ந்து புல்லாங்குழல் வாசிக்கிறான். அவன் வாசிக்கத் தொடங்க, கிளைகள் பறவைகளால் நிரம்புகின்றன. அவன் இனி தனிமையில் இல்லை என்பதால் புன்னகைக்கிறான். இசை - உலகின் நண்பன்.
இரண்டாவது, ‘A Flute Girl’ அல்லது ‘Endless Love’ என்ற தலைப்பிலான, எனக்கு மிகவும் பிடித்த சீனப் புல்லாங்குழல் இசை:
https://www.youtube.com/watch?v=8hIrStY3aYg
தற்போதுவரை 6.7 மில்லியன் பார்வையாளர்கள், 2.8 ஆயிரம் பின்னூட்டங்கள் கண்டிருக்கிற இந்த இசைக்கான பின்னூட்டங்களில் சில:
· கடந்த ஆறு வருடங்களாக நான் இந்த இசையைக் கேட்டு வருகிறேன். தினமும் உறங்கச் செல்வதற்கு முன், என்னை இந்தப் பூமியிலிருந்து விலக்கி, என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் இந்த இசையைக் கேட்பேன்.
· பண்டைய இந்திய, ஜப்பானிய, சீன இசைப் பாணிகள் மனதில் எதிரொலிக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் மிகவும் அமைதியானவை. இசை உள்ளுக்குள் ஆழமாக ஊடுருவி மன அழுத்தத்தை நீக்குகிறது.
இந்த இரண்டும் முழுக்க முழுக்கப் பாரம்பரிய சீன இசை அல்ல; மரபுப் புல்லாங்குழலை நவீன பியானோ மற்றும் ஓய்வு – தியான இசை அமைப்போடு இணைக்கும் சமகால வடிவங்கள். ஆனாலும், அவற்றின் மையத்தில் சீன மூங்கில் புல்லாங்குழலின் தனித்த நாதம்தான் இயங்குகிறது.
மூங்கிலோடு பிணைந்த வாழ்வியல் மரபு
சீனப் புல்லாங்குழல் இசை கேட்கும்போது, எப்படி இவர்களால் இந்த அளவுக்கு இனிமையையும் மென்மையையும் இசையில் கொண்டுவர முடிகிறது என்கிற வியப்பும் கேள்வியும் எனக்குள் எழும்.
சீனக் கலாச்சாரத்தில் மூங்கிலுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. “உணவில் இறைச்சி இல்லையென்றாலும் வாழலாம்; ஆனால் குடியிருக்கும் இடத்தில் மூங்கில் இல்லாமல் வாழ முடியாது” என்பது புகழ்பெற்ற சீனப் பழமொழி. சீனர்களின் கட்டுமானங்கள், அன்றாட உபயோகப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் மூங்கில் அங்கம் வகிக்கிறது. சீன மரபு ஓவியங்களிலும் மூங்கில்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
மூங்கிலோடு இரண்டறக் கலந்த இந்த நெடிய வாழ்வியல் மரபுதான், மூங்கிலில் செய்யப்பட்ட புல்லாங்குழலிலும், அதன் இசையிலும் வெளிப்படுகிறது. மூங்கிலை அதன் முழு ஆழத்தோடு உணர்ந்த ஒரு மரபால் மட்டுமே, அதில் செய்யப்பட்ட புல்லாங்குழலின் உச்சகட்ட மேன்மையை அடைய முடியும்.
சீனப் புல்லாங்குழல் இசை வெறும் பொழுதுபோக்கிற்கோ காதுகளுக்கு இன்பம் தருவதற்கோ உருவானது அல்ல. அது சீனத்தின் ஆன்மிக – தத்துவ மரபுகளான தாவோயிசம் மற்றும் ஸென் பௌத்தம் ஆகியவற்றின் அடித்தளத்தில் எழுந்த ஆன்மிக வெளிப்பாடும் ஆகும். (ஜப்பானில் ‘ஸென்’ என அழைக்கப்படும் மரபு, சீனாவில் ‘சான்’ என்று அழைக்கப்படுகிறது).
‘குய்’ (Qi) எனப்படும் பிராண ஆற்றல்: தாவோயிசத் தத்துவப்படி, மனித உடலிலும் பிரபஞ்சத்திலும் ஓடும் உயிர் ஆற்றலுக்கு ‘குய்’ என்று பெயர். சீன இசைக் கலைஞர் புல்லாங்குழலை வாசிக்கும்போது, வெறுமனே காற்றை ஊதுவதில்லை; தன் பிராண ஆற்றலையும் உணர்வையும் இசை அலைகளாக மாற்றுகிறார்.
சுவாசமே தியானம்: சீன மரபில் புல்லாங்குழல் வாசிப்பது பிராணாயாமப் பயிற்சியை நினைவூட்டும் ஒரு சுவாசக் கலை போல் உள்ளது. கலைஞரின் ஆழ்ந்த மூச்சின் வழியே வெளிப்படும் இசை, கேட்பவரின் மன அலைகளை அமைதிப்படுத்தி, தியான நிலைக்கு இழுத்துச் செல்கிறது.
இயற்கையின் குரல்: மலைகளில் வீசும் காற்று, மூங்கில் காடுகளின் அசைவு, நதியின் சலசலப்பு, பறவைகளின் கூவல் ஆகியவற்றைப் புல்லாங்குழலில் பிரதிபலிப்பதே அவர்களின் மரபு. இயற்கையோடு மனித ஆன்மாவை ஒன்றிணையச் செய்வதே இதன் முதன்மை நோக்கம்.
தந்தியிசையைவிடப் புல்லாங்குழல் ஏன் ஆட்கொள்கிறது?
சீன மரபில் குசெங் (யாழ் வகை), எர்ஹு (நரம்பு வாத்தியம்) போன்ற பல கருவிகள் இருந்தாலும், புல்லாங்குழலின் ஆதிக்கம் தனித்துவமானது.
தந்தியிசை வாத்தியங்கள் கலைஞரின் விரல் தொடுதலால் இயங்குபவை; ஆனால் புல்லாங்குழலோ கலைஞரின் சுவாசத்தால் இயங்குவது. மனித உடலின் உள்ளே இருந்து வரும் உயிர்க் காற்று நேரடியாக மூங்கில் குழலுக்குள் பாய்ந்து இசையாக மாறுவதால், அதில் இயல்பான ஆன்மாவின் குரல் ஒலிக்கிறது.
அதுதான் என்னைப் போன்ற ஒரு சாமானிய ரசிகனையும் மன அலைபாய்தல்களிலிருந்து விடுவித்து, தியானத்தின் ஆழத்தில் மூழ்கடித்து, உச்சகட்ட ஆன்மிகப் பரவசத்தை வழங்கி, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.