
அவளுக்கு கொஞ்சம் கூட நாகரீகமே இல்லை! நாகரீகம் தெரியாதவன் அவன்! என்றெல்லாம் பிறர் பேசக் கேட்டிருக்கிறோம். சில நேரங்களில் நாமே, "நாகரீகம்" தெரியாதவங்ககிட்ட போய் பேசிப் பிரயோசனமில்லை. குண்டக்கா மண்டக்கா பேச்சு" என்று கூடக் கூறியிருப்போம். நாகரீகம் என்பது..!
நாகரீகம்! உடையிலா..? நடையிலா..? நகை அணிவதிலா.? பேச்சிலா..? என சிலரிடம் கேட்கையில், "நாகரீகம் என்பது சமூகத்தின் மேம்பட்ட வாழ்க்கை முறை, பண்பாடு, முன்னேற்றம். நாகரீகமாக வாழ்வது வேறு. இது வேறு." என்று பொதுவாகக் கூறினர். சரியாகப் புரியவில்லை.
சமீபத்தில் ஊர்ப்பக்கம் சென்றிருந்த சமயம், எனக்கு தெரிந்த நல்ல விபரமுடைய, கற்றறிந்த சீனியர் சிட்டிசன் பெண்மணி ஒருவரிடம் நாகரீகம் குறித்து பேசுகையில், அவர் தனது வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்கள் இரண்டை பகிர்ந்தார்.
அவரே கூறிய அந்த சம்பவங்கள்:
அநேக வருடங்களுக்கு முன்பு என் தந்தை இறந்த சமயம், எனக்கு ஒன்பது வயதிருக்கும். சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கம்மா அழ, பெரியக்கா இங்கும் அங்கும் நடக்கிறாள். சின்ன அண்ணா, பதினொன்றாம் வகுப்பு. பரீட்சை சமயம் வேறு. அவன் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறான். எங்களுடைய உறவினர்கள், அவர்களுக்குள் எதோ ரகசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்பாவின் காரியத்தை ஆரம்பிக்க, கையில் பணமில்லை என்பதை வெளியில் சொல்ல பாழாய்போன நாகரீகம், எங்கம்மாவை, அக்காவைத் தடுக்கிறது. நேரம் போய்க்கொண்டு இருந்தது.
அச்சமயம், அக்காவுடன் வேலை செய்யும் மேரி என்கிறவள் வந்தாள். ஒரு நிமிடத்தில், நிலைமையை புரிந்து கொண்டு அக்காவைத் தனியாக வீட்டிற்கு வெளியே அழைத்து கொண்டுபோய் ஏதோ பேசிய பிறகு தேவையான பணத்தை கொடுத்தாள். கிளம்பிவிட்டாள். உடனே எங்க அக்கா, தம்பியிடம் சொல்லி, அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியத்தை ஆரம்பித்தாள். மேரி செய்த உதவி யாருக்கும் தெரியாது. காரியம் முடிந்ததும், அக்கா மூலமாக மேரி செய்த உதவி வீட்டில் தெரியவர, அம்மா கையெடுத்துக் கும்பிட்டார். நான் பெரியவளானதும், அக்கா சொல்லி விபரமறிந்தேன்.
ஒருவர் இக்கட்டில் இருக்கும்போது, மற்றொருவர் பிறர் அறியாமல் உதவி செய்வதும் நாகரீகம் என்று வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன். (அதாவது, வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது.) அதை என் வாழ்க்கையில் இன்றும் பின்பற்றி வருகிறேன்.
மேலும், அடிக்கடி எங்கம்மா என்னிடம், "பொய் சொல்லக்கூடாது ; உழைத்து சம்பாதிக்க வேண்டும்; கடன் வாங்க கூடாது; உதவி கேட்போருக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்", என்று சொன்னதை பின்பற்றி வாழ்வது தான் நாகரீகம் என்று தெரிந்துகொண்டேன்.
பதவியில் இருக்கும்போது, என்னிடம் வேலை பார்க்கும் ஒரு கடை நிலை ஊழியர், "சார், என் பையனுக்கு உடம்பு முடியவில்லை. மருத்துவமனையில் சேர்க்க ரூபாய் 20,000/- ஐ. உடனே கட்டச் சொல்கிறார்கள். தயவு செய்து உதவி செய்யுங்கள்" என்றார்.
"அவர் கூறிய ஆஸ்பத்திரி பொறுப்பாளரிடம் என்னைப் பற்றி விபரம் தெரிவித்து, அந்த பணத்தை கட்ட ஆவன செய்கிறேன் என்றேன். அவரும் "சரி" என்று கூறி அந்த ஊழியரின் மகனை அட்மிட் செய்தது மனதிற்கு திருப்தியாக இருந்தது.
எனக்குத் தெரிந்து, என் வாழ்க்கையில் இன்று வரை கடை பிடிக்கும் நாகரீகம்:
முடிந்தால் உதவி செய்வது; இல்லை என்றால் நாகரீகமாக (நாசூக்காக) விலகி நிற்பது.
யாரையும் நாகரீகமில்லாமல் குற்றம் சொல்லவோ, சாபமிடவோ கூடாது.
எப்போதும் வீட்டிலும் வெளியிலும் நல்ல வார்த்தைகளை நாகரீகமாக கையாண்டு பேசுகையில், வீட்டில் நேர்மறை மற்றும் ஒருவித தெய்வீக அலை தெரியும். வெளியிலும் நல்ல பேர் எடுக்கமுடியும்.
அனைத்து உயிர்களையும் மதித்து வாழ்வது நாகரீகம்.
நம்மிடம் யாராவது நாகரீகமின்றி அநாவசியமாகப் பேசுகையில், நாசூக்காக விலகிச் செல்வது நாகரீகம்.
பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருப்பது பெரிய நாகரீகம்.
நாகரீகம் பற்றி அப்பெண்மணி கூறியது எல்லாமே அர்த்தமுள்ளவைகள்தான் என்பது புரிந்தது.