இன்று ரூபாயை எண்ணுவதற்கு மின்னணுச் சாதனங்கள் வந்துவிட்டன என்று பெருமை கொள்கிறோம். ஆனால், 19 ஆம் நூற்றாண்டுக் காலத்திலேயே, திருவாங்கூர் சமஸ்தானத்தில் பயன்பாட்டிலிருந்த காசுகளை எண்ணுவதற்கு என்று ஒரு மரப்பலகை இருந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதன் பெயர் காசு பலகை (Coin Board).
காசு பலகை (Coin Board) அல்லது பண பலகை (Pana Palakas) என்பது நாணயங்களை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மரப் பலகையாகும். மரப்பலகையில் 50, 100 என காசுகளின் அளவிலான குழிகள் தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும். ஒரு முறை அக்குழிகளில் காசுகளை இட்ட பிறகு 50 காசுகள், 100 காசுகள் என ஒரு சேர எண்ண ஏதுவாக இந்தப் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.
காசு குவியல்களுக்குள் இந்தக் காசு பலகையை விட்டு, சலிப்பது போல காசுகளைப் பலகையின் மேற்புறத்தில் தடவினால் குழிகளுக்குள் காசுகள் நிரம்பிவிடும். இவ்வாறு நிரம்பும் போது விடுபட்ட சில குழிகளில் காசுகளை நிரப்பி முழுமையான எண்ணிக்கையை விரைவாகவும், சரியாகவும் கணக்கிட இந்தக் காசு பலகை பயன்பட்டிருக்கிறது. வெவ்வேறு அளவுள்ள நாணயங்களுக்கு தனித்தனி காசு பலகைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
19 ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பண மதிப்பில் ஒரு ரூபாய் பணம் என்பது 28 சக்ரம் நாணயங்கள் இணைந்ததாகும். இந்நாணயங்களை எண்ணுவதற்காக 28 குழிகள் கொண்ட காசு பலகைகள் உருவாக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் காசு பலகைகள் செம்மரங்களால் ஆனவை. இதனை அளவு பலகை என்று அழைத்துள்ளனர். திருவிதாங்கூர் அரசு காசுகள் மிகச் சிறியதாக இருந்துள்ளன. எனவே, அவற்றை துல்லியமாகக் கணக்கிட காசு பலகைகள் உதவியிருக்கின்றன.
திருவாங்கூர் சமஸ்தானத்தில்,
28 குழிகள் கொண்ட காசு பலகை சக்ர நாணயங்களை எண்ணுவதற்காகவும்,
100 குழிகளைக் கொண்ட காசு பலகை பணம் நாணயங்களை எண்ணுவதற்காகவும்,
300 குழிகளை கொண்ட காசு பலகை காசு நாணயங்களை எண்ணுவதற்காகவும்,
400 குழிகளை கொண்ட காசு பலகை வெள்ளி சக்ர நாணயங்களை எண்ணவும்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் காசு பலகையில் திருவாங்கூர் ரூபாயை பிரிட்டிஷ் ரூபாயாக மாற்றுவதற்கான மாற்று அட்டவணையும் பொறிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ரூபாய் என்பது திருவாங்கூர் ரூபாயை விட அரை சக்ரம் அதிகம், அதாவது 28 சக்ரம் என்பது ஒரு திருவிதாங்கூர் ரூபாய்க்கு சமம், 28 ½ சக்ரம் என்பது பிரிட்டிஷ் ஒரு ரூபாய். திருவிதாங்கூருக்கு ஒரு ரூபாய் நாணயம் இல்லாததால் திருவாங்கூர் 1 ரூபாய் என்பது ஒரு கருத்து மட்டுமே.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், நந்தன்கோடு, கனகா நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நேப்பியர் அருங்காட்சியகத்தில் இந்த காசு பலகை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.