
மேற்கத்திய இசை உலகில் பீத்தோவன் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். புகழ்பெற்ற இசை மேதை மொஸார்ட்டினைப் போலவே தன்மகன் ஆக வேண்டும் என பீத்தோவனின் தந்தை மிகவும் விரும்பினார். தன் விருப்பத்தை வலுக்கட்டாயமாக தன் மகன் மீது திணித்து வளர்த்தார். ஆனால், பீத்தோவனுக்கு அவர் பள்ளிக் கல்வியை முடிக்கும்வரை இசையின்மீது அதிக ஆர்வம் இல்லை. என்றாலும் பிற்காலத்தில் மொஸார்ட்டின் வரிசையில் பீத்தோவனும் தன் முயற்சியால் இசைஉலகில் ஒரு முக்கியமான இடத்தை தன் அயராத முயற்சியால பிடித்துவிட்டார்.
பீத்தோவனின் படைப்புகள் கேட்பவரை சட்டென்று உணர்ச்சியின் உச்சநிலைக்கு இட்டுச்செல்பவை. கட்டுக்கடங்காமல் கொட்டும் உணர்ச்சியின் அலைகளாகத்தான் அவரின் இசைப் படைப்புகள் இருந்தன.பீத்தோவனின் இசைக் கோர்வைகள் இன்றும் அலுவலகங்களில் உள்ள தொலைபேசி அழைப்பு வேறொரு எண்ணுக்கு மாற்றப்படும் நேரத்தில், லிஃப்ட் பயணங்களில், கடிகாரங்களின் அலாரங்களில் எல்லாம் அவரது ‘ஃபூர் எல்லிஸே’ வடிவத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஏறக்குறைய அதைக் கேட்காதவர்களே இன்றைய உலகில் இருக்க முடியாது எனலாம்.
பாக், மொஸார்ட் போன்றே பீத்தோவனும் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர். பீத்தோவனின் தாத்தாவும் தந்தையும் பொண் நகரத்தின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாக இருந்தனர். பொண் நகர அவையில் ஆர்கன் இசைக் கலைஞராக இருந்த கோட்லோப் நெஃப் என்பவரிடம் இசையைக் கற்றுக்கொண்டார்.
ஆனால் ஆச்சரியப்படத்தக்க அளவில் மிக விரைவிலேயே இசைத் துறையில் ஒரு படைப்பாளியாக உருவெடுத்தார் அவர். இசை கற்றுக்கொள்ளத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சொந்தமாக இசையமைத்து புதிய இசைக் கோர்வைகளை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.
பீத்தோவன் தன் பதினேழாவது வயதில் இசையுலகின் தலைநகரமாக விளங்கிய வியன்னாவுக்கு சென்று அவர் விரும்பிய மொஸார்ட்டுவுடன்பழக்கமானார். வெகுவிரைவில் பியானோ வாசிப்பதில் நிபுணரானார். பீத்தோவன் வியன்னாவில் தொடர்ந்து மொஸார்ட்டிவிடம் இசை பயில விரும்பினார். ஆனால், அவருடைய தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்கு திரும்பினார். தாயாரின் மரணம் அவர் வாழ்க்கையில் மேலும் பொறுப்புகளைச் சுமத்தியது. குடிகாரராய் மாறிப் போயிருந்த தந்தையைப் பராமரிக்கும் பொறுப்பும் அவர் மீது விழுந்தது.
சிறிது காலம் சென்று, மீண்டும் வியன்னாவுக்குச் சென்ற பீத்தோவன் பிரபல இசைக் கலைஞர் ஹெய்டனிடம் இசையை கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஹெய்டனின் மாணவர் என்றபோதும் பீத்தோவனின் இசை அவரது பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது.
பீத்தோவனின் இசையில் எப்போதும் இயற்கையின் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவரது இசைப் படைப்புகளில் ‘பாஸ்டோரல் சிம்பொனி’ என்பது மிகவும் பிரபலமானது.அவர் கில்லியட்டா கிச்சியார்டி என்ற பெண்ணை மிகத் தீவிரமாக காதலித்தார். ஆனால்,அது தோல்வியில் முடிந்தது.தன் காதலிக்காக அவர் படைத்த ‘மூன்லைட் சோனாட்டா’வைக் கேட்டபடி இன்னும் எத்தனையோ காதல்கள் துளிர்த்துக் கொண்டிருக்கின்றன.
பீத்தோவன் தனது முப்பதாவது வயதில் கேட்கும் திறனில் பாதிப்பை உணர்ந்தார். ஆனால், அதை யாரிடமும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை. கேட்கும் திறன் மங்கிவிட்டதை பிறர் அறிய வந்தால் தனது புகழ் குறைந்து விடுமோ என்ற அச்சம் அவருக்குள் இருந்தது. அப்போது அவர் எழுதிய மற்றொரு துயரக் காவியம்தான் ‘ஹெய்லிஜென்ஸ்டாட் டெஸ்டமெண்ட்’.உலகத்தில் மிக அதிகம் கேட்கப்பட்ட சிம்பொனி களில் பீத்தோவனின் சிம்பொனி ஒன்பதாவது இடத்தை பெறுவதாகக் கூறப்படுகிறது.
இசைத் துறையில் மாபெரும் மேதையாக விளங்கிய பீத்தோவனுக்கு நெப்போலியன் போனபார்ட் விருப்பத்துக்குரிய தலைவராக இருந்தார். அவருக்காக சிம்பொனி எண் 3, எரோஸியா ஆகிய படைப்புகளை அவர் சமர்ப்பித்தார். ஆனால், நெப்போலியனின் ஒற்றை அறிவிப்பால் அது தலைகீழாய் மாறியது. அவர் பிரான்ஸ் நாட்டின் சக்ரவர்த்தியாகத் தன்னை அறிவித்துக் கொண்டபோது தனது படைப்பின் சமர்ப்பணக் குறிப்பிலிருந்து நெப்போலியனின் பெயரை நீக்கினார் பீத்தோவன்.
அதற்குப் பதிலாக மிகச் சிறந்த மனிதனின் நினைவுக்காக என்று திருத்தி எழுதினார். நிறைவடையாமல் தொடரும் இசை மாமனிதர்களின் பட்டியலில் பீத்தோவன் என்னும் இசை மேதையின்பெயரும் இன்றும் இருக்கும்.இசை உலகில் சாதிக்க விரும்பும் இன்றைய இளைஞர்கள் பீத்தோவனின் வரலாற்றை படிப்பது நல்லது.