
விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரிக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ஒரு சிறு நகரமாக இருக்கும் செஞ்சி ஒரு காலத்தில் ஆந்திராவின் நெல்லூரில் இருந்து தஞ்சை வரை பரவி இருந்த நெடுநிலத்தின் தலைநகராக இருந்தது என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
* 60 அடி அகல கோட்டைச்சுவர், அதற்கு வெளியில் 80 அடி அகலத்தில் அகழி, அதைத்தாண்டி மலையும் காடுகளும் என இயற்கை அரண்கள் சூழ்ந்தது செஞ்சிக்கோட்டை. இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பான கோட்டையாக இருந்ததால் இதை 'கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை' என்று ஐரோப்பியர்கள் புகழ்ந்துள்ளனர்.
* இந்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக்கோட்டை தலைமுறை தலைமுறையாக மிக கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
* செஞ்சிக்கோட்டை என்றவுடன் நம் நினைவுக்கு வரும் மன்னர் ராஜா தேசிங்கு. இவர் குறுகிய காலமே (10 மாதங்கள்) செஞ்சியை ஆட்சி செய்திருந்தாலும் செஞ்சியின் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்தவர். முகலாயப் பேரரசுக்கு எதிராக செஞ்சியை ஆண்டபோது தன்னுடைய வீரத்தையும், ஆட்சியையும் வெளிப்படுத்தியதும், குறுகிய காலத்திலேயே வீரமரணமடைந்ததும் காரணமாகும்.
* இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்து முக்கோண வடிவமாக அமைந்துள்ளது இந்த செஞ்சிக்கோட்டை. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில்தான் இது வடிவமைக்கப்பட்டது.
* யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், தானியக் களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், வெடிமருந்துக் கிடங்கு, பீரங்கி மேடை, பாதாள சிறை, மதில் சுவர், அகழி, தர்பார் மண்டபம், அந்தப்புரம் என ஒரு கோட்டைக்குரிய எல்லாவிதமான அம்சங்களுடனும் தமிழகத்தில் இருக்கும் ஒரே கோட்டை இந்த செஞ்சி கோட்டைதான்.
* சுற்றிலும் நான்கு மலைகள், அவற்றின் உச்சியில் ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க்கம், சங்கிலி துர்க்கம் என கோட்டைக் காவல் அமைப்புகள், பிரம்மாண்டமான கோட்டைச் சுவர் என அசத்தும் செஞ்சிக்கோட்டை வரலாற்று சிறப்புமிக்கது.
* ராஜா கோட்டை என்று அழைக்கப்படும் ராஜகிரியானது சுமார் 800 அடி உயரமுள்ள மலையாகும். செங்குத்தான அமைப்புடைய இதன் உச்சிக்கு செல்வதற்கு 1,012 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இதன் உச்சியை நெருங்கும் இடத்தில் இயற்கையாகவே ஒரு மலைப்பிளவு உள்ளது. போர்க்காலங்களில் இங்கிருந்த தற்காலிகப் பாலத்தை அகற்றிவிட்டால் எதிரிகளால் நெருங்க முடியாது. இதன் மீது இப்போது மரப்பாலம் அமைத்திருக்கிறார்கள். ராஜகிரியின் மேலே மண்டபம், தானியக் களஞ்சியம் ஆகியவை உள்ளன.
* அடுத்த மலை கிருஷ்ணகிரி. இங்கு அழகிய தர்பார் மண்டபம் மலையின் உச்சியில் உள்ளது. அழகிய சாளரங்களுக்கு மத்தியில் மன்னர் அமரக்கூடிய இருக்கையும், சுற்றிலும் விருந்தினர் இருக்கைகளும் உள்ளன. இந்த இரண்டு மலைகளிலுமே கோவில்கள், தானிய களஞ்சியம் என அனைத்தும் உள்ளன. மற்ற இரண்டு மலைகளில் காவல் அரண்கள் உள்ளன.
* காவல் அரண்களைக் கடந்து கோட்டையின் மையப்பகுதிக்கு சென்றால் நீச்சல் குளம், தண்ணீர் வருவதற்கு சுடுமண் ஓடு குழாய்கள், அரச பெண்கள் தங்குவதற்கான அறைகள் உள்ளது. இதன் மற்றொரு பகுதியில் எட்டு அடுக்குகள் கொண்ட கோபுரம் ஒன்றுள்ளது. அதற்கு செல்வதற்கு குறுகிய செங்குத்தான படிகள் உள்ளன. இதன் உச்சி வரை தண்ணீர் செல்வதற்கு சுடுமண் குழாய் பதித்திருந்த தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கிறது.
* மூன்று மலைகளுக்கு மத்தியில் கீழ்க்கோட்டைப் பகுதி உள்ளது. இங்கு வேணுகோபால சுவாமி கோவில், சிவன் கோவில், வெங்கடரமணர் கோவில் என நிறைய கோவில்கள் அமைந்துள்ளன. குறிப்பாக வெங்கட்ரமணர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் காட்சி தருகிறது.
* சிறந்த மராட்டிய மன்னரான சிவாஜி 'இந்தியாவில் உள்ள எவரும் உட்புக முடியாத கோட்டைகளுள் சிறந்தது இந்த செஞ்சிக் கோட்டை என்று கூறும் அளவிற்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இருந்தது இது.
* செஞ்சியில் முதலில் கோட்டை கட்டி ஆண்டவர்கள் கோன் வம்ச அரசர்கள். ஆனந்தக் கோன் இந்த வம்சத்தின் முதல் மன்னராவார். அவருக்கு பெரும் புதையல் ஒன்று கிடைத்து, தனக்காக ஒரு படையை சேர்த்துக்கொண்டு கோட்டை கட்டியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு விஜயநகர பேரரசு செஞ்சியை ஆண்டது. 200 ஆண்டுகள் செஞ்சியை நாயக்க மன்னர்கள் ஆண்டனர். அவர்கள்தான் இங்கிருக்கும் கோவில்கள், கல்யாண மஹால், கோட்டை மதில் அரண் மற்றும் கொத்தளங்கள் என பலவற்றை கட்டியுள்ளனர்.
* செஞ்சிக் கோட்டையை பார்வையிட சிறந்த நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை. மலை மீது ஏற மாலை 3 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. மலைக்கோட்டையை பார்வையிட குறைந்த அளவில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.