சம்பல்பூரி சேலையில் தல்காய் நடனம்... ஆடுவோமா?

Dalkhai Dance
Dalkhai DanceImg Credit: Gosahin
Published on

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் முதன்மையான நாட்டுப்புற நடனமாக தல்காய் நடனம் (Dalkhai Dance) இருந்து வருகிறது. ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்தில் உருவான இந்த நடனத்தில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலின் சரணத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் ‘தல்காய்’ என்கிற சொல் ஒரு பெண் நண்பரின் முகவரியாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், இந்த நடனத்திற்கு தல்காய் நடனம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

ஒடிசாவில் கொண்டாடப்படும் பைஜூந்தியா, பாகுன் புனி, நுஹாய் போன்ற திருவிழாக்களில் இந்த நடனம் முக்கிய இடம் பிடிக்கின்றது. இந்நடனத்தில், பின்ஜால், குடா, மிர்தா, சாமா மற்றும் சம்பல்பூர், பாலங்கீர், சுந்தர்கர், பார்கர் மற்றும் நுவாபா மாவட்டங்களில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண்களேப் பங்கேற்கின்றனர். இருப்பினும், பழங்குடியினத்தைச் சேராத ஒரு சிலரும் இந்த நடனத்தில் பங்கேற்பதுண்டு.

இந்த நடனத்தின் கருப்பொருள்களாக ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இடம் பெறும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. இவற்றுள் மகாபாரதத்தில் வரும் ராதா, கிருட்டிணன் நித்தியக் காதல் கதை தொடர்புடைய நிகழ்வுகளே அதிக அளவில் இடம் பெறுகின்றன.

இந்நடனம் ஆடும் பெண்கள் வண்ணமயமான அச்சிடப்பட்ட சம்பல்பூரி சேலையை அணிவார்கள். இரு கைகளிலும் துணியின் முனைகளை வைத்திருக்கும்படியாக, தோள்களில் ஒரு தாவணியைக் கட்டுகிறார்கள். கழுத்தணி, வளையல்கள் போன்ற பல்வேறு பாரம்பரிய நகைகள் ஆடும் கலைஞர்களின் தோற்றத்தை அழகூட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
கோவாவிற்கு அடுத்து போர்த்துகீசியர்களின் முக்கிய கோட்டை இதுதான்!
Dalkhai Dance

இந்த நடனத்தில், இளம் பெண்கள் நடனமாடும் போது ஒரு நேர் வரிசையிலோ அல்லது அரை வட்ட வடிவத்திலோ நிற்கிறார்கள். இந்த நடனத்திற்கு டோல், இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான நிசான் எனும் முரசு, 6 அங்குலம் விட்டம் கொண்ட சிறிய ஒரு பக்கப் பறை போன்று இரண்டு குச்சிகளால் இசைக்கப்படும் தம்கி, ஒரு பக்க முரசான தாசா மற்றும் மஹூரி எனும் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. டோல் இசைக்கருவியை வாசிப்பவர், பெண்கள் முன் நடனமாடும் போது, ஆட்டத்தின் போக்கை கட்டுப்படுத்துபவராக இருக்கிறார்.

இந்தியாவின் 67வது குடியரசு தின அணிவகுப்பின் போது, புதுதில்லியிலுள்ள ராஜ்பத் என்னுமிடத்தில் ஒடிசாவின் பாரம்பரிய நடனமான 'தல்காய்' நடனம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நடன நிகழ்வில், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரெஞ்சு நாட்டின் குடியரசுத் தலைவர் பிராங்கோயிஸ் ஹாலண்ட் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com