தீபாவளி ஒரு புராணமல்ல; மனித குலத்தின் அக ஒளித் திருவிழா!

மத எல்லைகளைக் கடந்து உலகெங்கும் ஒளிரும் தீபாவளியின் உண்மையான தத்துவம் என்ன?
தீபாவளி தத்துவம் - Deepavali philosophy,
தீபாவளி தத்துவம் - Deepavali philosophy,
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

“தீபங்களின் வரிசை” எனப்படும் தீபாவளி, இந்தியாவின் தொன்மை மிக்க பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும்.  'பொதுவாக நரகாசுர வதம், ஸ்ரீ ராமரின் அயோத்தி வருகை அல்லது லட்சுமி பூஜை போன்ற புராணக் கதைகளுடனேயே இத்திருநாள் தொடர்பு படுத்திப் பேசப்படுகிறது.

ஆனால், வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் கூர்ந்து நோக்கும் போது, தீபாவளி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தையோ அல்லது புராண நிகழ்வுகளையும் மட்டும் சார்ந்ததன்று. மனித குலத்தின் “அறியாமை அகன்று அறிவு வெளிச்சம் பெருகவேண்டும்” என்ற உலகளாவிய தத்துவத்தின் (தீபாவளி தத்துவம்) வடிவியல் குறியீடே இத்திருநாளாகும்.

பண்பாட்டுப் பரிமாணங்கள்: இந்தியாவின் வெவ்வேறு மத மரபுகளிலும், உலகளாவிய பண்பாடுகளிலும் தீபாவளி உணர்த்தும் ஆழமான தத்துவங்கள் மாறுபட்ட வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டுள்ளன.

சமண தத்துவத்தில் தீபாவளி என்பது மகாவீரர் முக்தி அடைந்த நாளாகக் கருதப்படுகிறது. அவர் உடல் என்னும் உலகியலைக் கடந்து, ஞான ஒளி எய்திய நாளை நினைவுகூரும் வகையில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது புற ஒளியை விட மன ஒளியே உன்னதமானது என்பதை உணர்த்துகிறது. இது முக்தி ஒளியாகும்.

சீக்கிய வரலாற்றுப் பாரம்பரியத்தில் இந்நாள் ‘பந்தி சோர் திவாஸ்’ (சிறை விடுதலை நாள்) எனக் கொண்டாடப் படுகிறது. ஆறாவது குருவான குரு ஹர்கோபிந்த் சிங் அவர்கள், 52 இந்து மன்னர்களுடன் குவாலியர் கோட்டையிலிருந்து விடுதலையாகி பொற் கோவிலுக்கு வந்த நாளாக இது போற்றப்படுகிறது. அநீதி மற்றும் அடக்கு முறையிலிருந்து மனித உரிமை மீட்கப்பட்ட சுதந்திர ஒளியாக இது திகழ்கிறது.

நேபாள நாட்டு பௌத்தர்கள் (நெவார் பௌத்தர்கள்) தீபாவளியை அசோக சக்கரவர்த்தி பௌத்த மதத்தைத் தழுவி, தர்ம பிரசாரத்தைத் தொடங்கிய நாளாகக் கருதுகின்றனர். அறியாமை மற்றும் வன்முறையைக் கைவிட்டு, கருணையும் தர்மமும் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதே உண்மையான வெளிச்சம் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். இது தர்ம ஒளி ஆகும்.

தீபாவளி உணர்த்தும் அடிப்படைத் தத்துவம் இந்திய எல்லைகளுக்கு மட்டும் உட்பட்டதல்ல. உலகின் பல்வேறு நாகரிகங்களிலும் ‘இருளை வெல்லும் ஒளி’ என்ற கருத்தியல் வேறுபட்ட வடிவங்களில் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தத்துவம் - Deepavali philosophy,
தீபாவளி தத்துவம் - Deepavali philosophy,

யூதர்களின் ‘ஹனுக்கா” ஒளியின் திருவிழா என்று அழைக்கப்படும். இந்நாளில் மெழுகுவர்த்திகள் வரிசையாக ஏற்றப்பட்டு, ஆலயத்தின் பரிசுத்தம் மற்றும் நம்பிக்கை மீட்கப்பட்ட தன் குறியீடாகக் கொண்டாடப்படுகிறது.

பண்டைய கெய்ல்டிக் மரபின் ‘சாம்ஹைன், இலையுதிர் கால முடிவில் குளிர்கால இருளை எதிர்கொள்ளத் தீ மூட்டி ஒளியை அமைக்கும் பண்டைய  ஐரோப்பிய வழிபாடாக கொண்டாடுகிறார்கள்.

இவை அனைத்தும் மனிதகுலம் சந்திக்கும் துன்பங்கள், அச்சங்கள் மற்றும் அறியாமை என்னும் இருளை, நம்பிக்கை, அறிவு மற்றும் நேர்மறை எண்ணங்கள் என்னும் ஒளியால் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரே மானுட உண்மையையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. நவீன உலகில் தீபாவளியின் தத்துவம் வெறும் பட்டாசுகளிலோ அல்லது ஆடம்பரங்களிலோ சுருங்கி விடக் கூடாது.

“தமஸோமா ஜோதிர்மய” - “இருளிலிருந்து எங்களை ஒளியை நோக்கி அழைத்துச் செல்” என்ற உபநிடத வரிகளுக்கேற்ப, மனித மனங்களில் உள்ள சுயநலம், வெறுப்பு, ஜாதி-மதக் காழ்ப்புகள் மற்றும் பொறாமை போன்ற அக இருள்களை அகற்றுவதே மெய்யான தீபாவளியாகும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளித் திருநாள்: பண்பாடும் வாழ்த்துகளும் உணர்த்தும் உண்மைகள்!
தீபாவளி தத்துவம் - Deepavali philosophy,

தீபாவளி என்பது ஒரு குறுகிய புராண வட்டத்திற்குள் அடங்கும் பண்டிகை அல்ல. அது மொழிகள், எல்லைகள் மற்றும் மத நம்பிக்கைகளைக் கடந்து மனித மனங்களை ஒன்றிணைக்கும் “நம்பிக்கையின் குறியீடு”. உலகெங்கும் பரவி வாழும் மனித சமூகம் தன்னிடமுள்ள அறியாமையை நீக்கி, மெய்ஞானத்தையும் சமத்துவத்தையும் வளர்த்துக்கொள்ளும் வரை தீபாவளி உணர்த்தும் இந்த உலகளாவிய தத்துவ ஒளி பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி: நாம் தொலைத்த அந்த பொன்னான தருணங்கள்!
தீபாவளி தத்துவம் - Deepavali philosophy,