90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி: நாம் தொலைத்த அந்த பொன்னான தருணங்கள்!

90களின் பாசமும் பலகாரமும் நிறைந்த தீபாவளிக்கும், இன்றைய நவீன டிஜிட்டல் தீபாவளிக்கும் இடையேயான ஆச்சரியமூட்டும் மாற்றங்களை முழுமையாக அறியுங்கள்.
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளிImage credit: Gemini AI
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 
MM strip
MM strip

90களின் தீபாவளி என்றால் நினைவுக்கு வருவது பட்டாசுச் சத்தம், மணக்க மணக்கச் சுடப்பட்ட பலகாரங்கள், உறவுகளின் கலகலப்பான கொண்டாட்டம். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதே தீபாவளி எப்படி இயந்திரத்தனமான நிகழ்வாக மாறிவிட்டது? ஏக்கம் நிறைந்த கடந்த கால நினைவுகளையும், இன்றைய நவீன கொண்டாட்டங்களையும் சுவாரஸ்யமாக ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு பயணம் இது. அந்த பழைய நினைவுகளுக்குள் ஒருமுறை பயணிக்கலாமா?

தீபாவளித் திருநாள் நம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து இராவணனை வென்று ஸ்ரீராமர் சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்பிய நாளை நினைவு கூறும் வகையில் வீடு முழுக்க தீபமேற்றி வட இந்திய மக்கள் இத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். தமிழ் நாட்டில், தீய செயல்களில் ஈடுபட்டு வந்த நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணர் வதம் செய்து மக்களைக் காப்பாற்றிய தினமாகவும், அந்த நாளில் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதாகவும் கருதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளித் திருநாளை வெகு சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர் என்று புராணம் கூறுகிறது.

90களின் தீபாவளிப் பண்டிகைகளை தற்கால தீபாவளி கொண்டாட்டங்களுடன் ஒப்பிடுக்கையில் அவை இரண்டிற்கும் இடையே இத்தனை இடைவெளியா என்று நம்மை பிரமிக்கச் செய்கிறது.

அப்போதெல்லாம், கிராமம் நகரம் என்று வேறுபாடேதுமின்றி தீபாவளிக்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே புதுத் துணி வாங்கி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் டைலரிடம் கொடுத்து புத்தாடை ரெடி பண்ணும் வேலை ஆரம்பித்துவிடும். பட்டாசு கடை போடும் இடங்களைத் தெரிந்துகொண்டு, "எப்படா பட்டாசு வரும்" என்று சிறுவர்களெல்லாம் ஆவலுடன் காத்திருப்பதுண்டு. பத்து நாளைக்கு முன்பிருந்தே ஆங்காங்கே வெடிச் சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும். வீட்டில் பெண்கள் தங்கள் அம்மா அல்லது மாமியாரின் ஆலோசனைகளைப் பெற்று, தீபாவளிக்கு என்னென்ன பலகாரம் செய்யலாம் என்ற லிஸ்டை தயாரித்து வைத்துக் கொள்வர்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி பலகாரங்களை இஷ்டம் போல சாப்பிடுங்க... இந்த ஒரு ஸ்பூன் லேகியம் போதும்!
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி

பின் அவற்றைத் தயாரிக்க என்னென்ன பொருட்கள் (ingredients) தேவைப்படும் என்ற லிஸ்டையும், (ஒவ்வொரு பஷணத்திற்கும் தேவையானவற்றை மனதிற்குள் கணக்குப் பண்ணி) குடும்பத் தலைவரிடம் கொடுக்க, அவரும் அதை சரியாக வாங்கி வந்து வீட்டில் சேர்த்து விடுவார்.

தீபாவளிக்கு மூன்று நாள் முன்பிருந்தே ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பலகார வாசனை மூக்கை துளைக்க ஆரம்பிக்கும். மிக்சர், முறுக்கு, ரிப்பன் பக்கோடா போன்றவை தயாராகி, தனித் தனித் தூக்குகளில் அடுக்களையில் வரிசையாக அடுக்கி வைக்கப்படும்.

சம்பா கோதுமையை ஊற வைத்து அரைத்து செய்யப்படும், தொண்டைக்குள் நழுவும் கோதுமை அல்வா, பாதுஷா, மைசூர்பா, பூந்தி லட்டு, அதிரசம் போன்ற பல தரப்பட்ட இனிப்பு வகைகளும் அடுக்குகளில் அடைக்கப் பட்டு அடுக்களையை நிறைக்கும். இவைகளை செய்யும்போது அக்கம் பக்கங்களில் குடியிருக்கும் தங்கச்சி மற்றும் நாத்தனார் போன்றவர்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டு குதூகலமாய் செய்து முடித்து பகிர்ந்து கொள்பவர்களும் இருந்தனர்.

அதே நேரம் நாட்டு மருந்துக் கடையிலிருந்து ஓமம், சுக்கு, திப்பிலி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்களை வாங்கி வந்து காய வைத்துப் பொடி பண்ணி, அந்தப் பொடியை அடுப்பிலிருக்கும் தூய வெல்லப் பாகு மற்றும் நெய் சேர்த்த கலவையில் தூவி தரமான லேகியம் ஒன்றையும் தயார் பண்ணி வைத்துவிடுவதுண்டு.

புதிதாக திருமணமான ஜோடிகளின் புது மாப்பிளை முதல் நாளே மாமனார் வீட்டுக்கு விஜயம் செய்து விடுவார்.

அதிகாலை நாலு மணிக்கெல்லாம் வீட்டிலுள்ளோர் சாமிக்கு முன்பாக, புதுத் துணி, பலகாரம், லேகியம், வென்னீர் பானை, சீயக்காய், வெது வெதுப்பான நல்லெண்ணெய் அனைத்தையும் வைத்து கும்பிட்ட பின் எல்லோரையும் எண்ணெய் குளியல் போட வைப்பார்கள்.

தீபாவளி | deepavali celebration
தீபாவளி | deepavali celebrationImage credit: Chatgpt

உச்சந்தலையில் எண்ணெய் வைக்கும்போது பட்டாசு வெடிப்பதும் முக்கியமான சடங்குகளில் ஒன்று. குளித்து புத்தாடை அணிந்து வந்ததும் முதலில், சின்ன சின்னதாக உருட்டி வைத்த மூன்று லேகிய உருண்டைகளை கட்டாயம் விழுங்க வேண்டும். இது, அன்று முழுவதும் உண்ணும் இனிப்பு, காரம் மற்றும் ஹெவியான மதிய உணவு போன்றவை நன்கு ஜீரணமாகவும் வயிறு கெடாமலிருக்கவும் உதவி புரியும். அதன் பின் வகை வகையான இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே அம்மா தரும் பலகாரங்களை முன் வீடு, பின் வீடு, மாடியிலிருக்கும் பேச்லர் அண்ணா என எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வருவது நடுத்தர வாண்டுகளின் வேலை. அதுகளும் அதை குஷியாக செய்து முடிக்கும். காலை டிபன், பஜ்ஜி, இட்லி வடை சாம்பார் சட்னியுடன் அதகளப்படும். இதற்கிடையில்

உடன் பிறந்தவர்கள் அவர்கள் வீட்டு பலகார வகைகளை கொண்டுவந்து கொடுத்து விட்டு மின்னல் வேகத்தில் நாம் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பறப்பதும் உண்டு.

மீதி நாளில், அவரவர் வீட்டு பட்டாசை வீட்டு முற்றத்தில் கொட்டி, அக்கம் பக்கத்து நட்புகள் உறவுகள் புடை சூழல் வெடித்து மகிழ்வது தீபாவளி கொண்டாட்டத்தின் உச்சம் எனலாம்.

தற்கால தீபாவளி இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இடைப்பட்ட காலங்களில் குடும்பங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள்..

வீட்டிற்கு ஒருவர் வெளிநாடு சென்று தங்கிவிட, பேரன் பேத்திகள் வீட்டை அலங்கரித்து வந்த நிலை மிஸ்ஸிங்.

இதையும் படியுங்கள்:
நம்ம சிறுவயது தீபாவளி எங்க போச்சு? மறக்க முடியாத நினைவுகள்!
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி

வீட்டிற்கு ஒன்றிரண்டு நபர் ஹைப்பர்டென்ஷன், டயாபெட்டிக் போன்ற உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள். ஆரோக்கியமாக உள்ளவர்களும் டயட், ஒபிசிட்டி போன்றவற்றை காரணம் காட்டி இனிப்பு மற்றும் எண்ணெய் பலகாரங்களை ஒதுக்கிவிடுகின்றனர்.

பட்டாசு வெடிக்க பிள்ளைகள் இல்லை. பலகாரம் தின்ன ஆட்களும் இல்லை. 90களில் இருந்த, எப்போதாவது மட்டும்தான் புதுத் துணிகளும் பலகாரங்களும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலை தற்போது இல்லை. எப்போ வேண்டுமானாலும் இவை அனைத்தையும் ஆன்லைனில் அன்றே பெற்றுக்கொள்ள வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன.

பலகாரம் பகிர்ந்து உண்ண எண்ணி தோழியின் வீட்டுக்கு ஸ்வீட் வாங்கி சென்றபோது, "எங்க வீட்ல யாருமே ஸ்வீட் சாப்பிடுவதில்லை... ப்ளீஸ் நீயே எடுத்துட்டு போயிடேன்"

என்று தோழி கூற பகிரும் பழக்கத்தை எங்கிருந்து தொடர?

பொருளாதார முன்னேற்றம், கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு போன்றவையே இவ்வாறான மாற்றத்திற்கு காரணம் எனலாம்.

கடந்த கால நினைவுகளின் அரவணைப்பில் மனம் லேசாகி, நமது பாரம்பரிய உறவுகளின் மதிப்பை மீட்டுத்தரும் அழகிய தருணங்களை இந்த ஒப்பீடு உங்களுக்கு உணர்த்தும்; இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அன்பைப் பகிர்வதற்கான புதிய உத்வேகத்தைப் பெறுவீர்கள்.