தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிக பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.
'ரேடியோ' என்ற வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டது 1890 ம் ஆண்டு தான். பிரெஞ்சுக்காரர் எட்வார்ட் பிரான்லி இந்த வார்த்தையை பயன்படுத்தினார். நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் இத்தாலி நாட்டின் குலீல்மோ மார்க்கோனி ஆவார். ‘கம்பியற்ற தகவல்தொடர்பு முறை’ மற்றும் ‘மார்க்கோனி விதி’ ஆகியவற்றை உருவாக்கியவர் இவரே. முதல் வானொலி ஒலிபரப்பு மே 13, 1897 அன்று குலீல்மோ மார்கோனியால் செய்யப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக 1909 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்ன்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து அவர் பெற்றார்.
மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்த பின்னர் 1922 ம் ஆண்டு வானொலி ஒலிபரப்பு இங்கிலாந்து நாட்டில் பரிசாத்த முறையில் துவக்கப்பட்டது. அதற்கு பிறகு 1923 ம் ஆண்டு இலங்கையில் தான் பரிசாத்த முறையில் வானொலி ஒலி பரப்பு துவங்கியது. அதனை துவக்கிய குழுவின் தலைவராக இருந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அய்யம் நடராஜபிள்ளை எனும் தமிழர். இவர் மார்க்கோனியிடம் பயிற்சி பெற்றவர்.
இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு 1924 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி சென்னையில் 'மெட்ராஸ் பிரசிடென்சி ரேடியோ கிளப்' மூலம் தொடங்கியது. 1927 ஆம் ஆண்டு மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகளை 'ரேடியோ கிளப் ஆப் பாம்பே' என்ற தனியார் நிறுவனமே தயாரித்து, நிர்வாகம் செய்து வந்தது. முதன் முறையாக ஒரு நிலையத்தில் இருந்து இன்னொரு நிலையத்திற்கு அஞ்சல் செய்யும் நிகழ்ச்சியை 1939 ம் ஆண்டு ஜனவரி 18 ல் டெல்லி வானொலி நிலைய நிகழ்ச்சியை பம்பாய் நிலையம் அஞ்சல் செய்தது. 1936 ஆம் ஆண்டில் இருந்து வானொலி, அகில இந்திய ஒலிபரப்பில் காலூன்றியது.
தனியாக வானொலி ஒலிபரப்பு நிலையம் தொடங்கிய ஒரு மன்னர் ஹைதராபாத் நிஜாம். இவர் 1935 ம் ஆண்டு டெக்கான் ரேடியோ என்ற பெயரில் ஹைதராபாத்தில் ஒரு வானொலி நிலையத்தை தொடங்கினார்.
1947 ஆகஸ்ட் 14-15 ம் தேதிகளில் இந்திய வானொலியில் நேரடி வர்ணனை நிகழ்ச்சி அறிமுகமானது. இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிகள், பாராளுமன்றத்தின் மத்திய அரங்கில் நடந்த நிகழ்ச்சிகளை இரு நாட்களாக வர்ணனை செய்து ஒலிபரப்பினார்கள்.
வானொலியில் கிரிக்கெட் வர்ணனை 1936 ம் ஜனவரி 1ம் தேதியே பம்பாய் நிலையம் ஒலி பரப்பியது.
விவித்பாரதியின் வர்த்தக ஒலி பரப்பு 1957 ம் ஆண்டு அக்டோபர் 3ம்தேதி ஆரம்பமானது.
வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐநா துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ஐ உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது. 1946-ல் ஐநா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தை இந்திய வானொலி 7 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து வர்ணனை செய்தது.
முந்தைய தலைமுறை மக்களுக்கு வானொலி பொழுது போக்கு என்பதையும் தாண்டி அது ஒரு வித அந்தஸ்தை பறைசாற்றுவதாகவே இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்த செய்தி முதற்கொண்டு பல்வேறு முக்கிய தகவல்களை வானொலி மூலமாகவே அறிந்திருக்கிறார்கள். செய்திகள் மட்டுமல்லாது பக்தி பாடல்கள் , நேயர் விருப்பம் , உழவர் உலகம் , திரை விமர்சனம் , பாட்டுக்கு பாட்டு , மருத்துவ நேரம் , நாடக ஒலிச்சித்திரம் , கிரிக்கெட் வர்ணணை போன்றவற்றை கேட்டு மகிழ்திருக்கிறார்கள்.
என்னதான் பண்பலை அலைவரிசைகள் கையடக்க கைப்பேசிகளில் வந்துவிட்டாலும், நவீன காலத்தின் வளர்ச்சிக்கேற்ப ஈடுசெய்ய இயலாமல் பல தரைவழி ஒலிபரப்பு தளங்கள் மூடு விழா கண்டபோதிலும் இன்றும் நாட்டின் மூலைமுடுக்குகளில் வானொலி கொண்டாடப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. வானொலியை பொறுத்தவரையில் மின்வசதி கிடைக்கப்பெறாதா பகுதி, மலை கிராமங்கள் போன்ற இடங்களிலும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் பேரிடர் காலங்களிலும் தடையின்றி இயங்க கூடியது வானொலியே. இதனால் தான் இன்றும் இதன் மவுசு மக்களிடம் குறையவில்லை. சமகாலத்தின் சிறந்ததொரு பயன்பாட்டை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.