

நம்முடைய அன்றாட உணவில், அது எதுவாக இருந்தாலும் சரி உப்பில்லாமல் தயாரிக்க முடியாது. எல்லா விதமான உணவிற்கும் உப்பு(Salt) மிகவும் அவசியம். மேலும் நம் உடலுக்கும் உப்பு இன்றியமையாத ஒன்றாகும். "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற வசனத்தை நாம் எல்லோருமே கேட்டிருப்போம்.
அறுசுவை என்று சொல்லக்கூடிய இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு), காரம், கசப்பு மற்றும் துவர்ப்பு இந்த ஆறுமில்லாமல் நம் உணவின் சுவை நிறைவடையாது. அதிலும் உப்பில்லாத உணவு என்றால் ருசியே இருக்காது. நம் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கக் கூடிய உப்பு என்று சொல்லக் கூடிய அந்த வார்த்தையின் சிறப்பம்சத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த உப்பு என்ற சொல்லிற்கான பெயர்க் காரணம் என்ன என்று பார்க்கலாமா? தமிழ் மொழியில் மிக எளிய சொல்லாகக் கருதப்படும் இந்த உப்பு என்று சொல்லிற்கு பின்னால் இருக்கும் விளக்கத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு?
கடல் நீரை பாத்திகளில் தேக்கி வைத்து அதை சூரிய வெப்பத்தால் ஆவியாக்கும் போது, அதன் நீர்த்தன்மை உலர்ந்து படிகத் துகள்களாக திரண்டு பூத்து மேலெழும்பி நிற்கும். உவர்ப்புச் சுவையோடு வெண்மையாகத் திரண்டு, உப்பி நிற்கும் பண்பின் அடிப்படையில் தான் இதற்கு உப்பு என்ற பெயரை நம் முன்னோர்கள் வைத்தார்கள்.
உப்பி நிற்கும் படிகம் தான் 'உப்பு' என்றழைக்கப்பட்டது. இந்த உப்பு என்கிற வார்த்தையின் அர்த்த்தை அடிப்படையாக கொண்டு வேறு சில வார்த்தைகளும் இருக்கின்றன:
1. உப்பு : எழும்பு, வீங்கு, எழும்பும் உவர்மண்.
2. உப்புதல் : எழுதல், பருத்தல், பொங்குதல், வீங்குதல், மேலெழும்பித் தோன்றுதல்
3. உப்பல் : ஊதிப் பருத்தல்
4. உப்புசம் : வயிற்று வீக்கம், வயிறு உப்பியிருப்பது
5. உப்பட்டி : ஒன்றின்மேல் ஒன்று வைத்து உயர்த்திக் கட்டுவது, வயலில் அறுத்து அடக்கப்படும் நெற்கதிர்களின் கட்டு
6. உப்பரி : உயர்தல், மேம்படல்
7. உப்பரி காணுதல் : அளவு மிகுந்து காணுதல்
8. உபரி : தேவைக்கு அதிகமான பகுதி
9. உப்பரிகை : மேல்மாடம் (Balcony)
10. உப்பால் : மேலிடம்
இந்த உப்பரி என்ற சொல்லாகிய உயருதல் என்பதிலிருந்து தான் upper என்கிற ஆங்கில வார்த்தையும் 'ஊப்பர்' என்கிற ஹிந்தி வார்த்தையும் உருவாகியது. ஹிந்தியில் 'ஊப்பர்' என்றால் உயரம், மேலே என்று பொருள். நம் தமிழ் மொழியிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் சிறப்பான விளக்கங்கள் இருக்கின்றன என்பதை 'உப்பு' என்கிற இந்த வார்த்தையின் விளக்கத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.