நாம் வங்கியின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறோம். இந்த பணப்பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமானது என்ன தெரியுமா? ஐஎஃப்எஸ்சி குறியீடு. அது என்ன ஐஎஃப்எஸ்சி குறியீடு? இதன் மூலம் வங்கியின் பணப்பரிவர்த்தனை எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் என்பதே ஐஎஃப்எஸ்சி என்பதன் விரிவாக்கம். ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு என்பது ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு குறியீட்டு எண் ஆகும்.
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்த தொகை உடனடிப் பரிமாற்றம் (RTGS) போன்ற மின் பணப்பரிமாற்ற சேவையில் ஈடுபடும் ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் ஒரு 11 இலக்க தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் வழங்கப்படும். மின்னணு நிதி பரிமாற்றத்தில் பங்கேற்றுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள் பட்டியலுடன், ஐஎஃப்எஸ்சி குறியீடுகளும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளது.
11 இலக்கங்களில், முதல் 4 எழுத்துக்கள் வங்கியையும் கடைசி ஏழு இலக்கங்கள் வங்கிக் கிளையையும் குறிக்கிறது. ஐந்தாவது இலக்கம் எப்போதும் பூஜ்யம்தான். உதாரணமாக, ICIC0000053 என்ற இந்த குறியீட்டை எடுத்தோமானால், முதல் 4 எழுத்துக்கள் ICICI வங்கியையும், கடைசி ஏழு எண்கள் பெங்களூரு ஜெயநகர் வங்கிக் கிளையையும் குறிக்கும்.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்க, தேசிய மின்னணு நிதி பரிமாற்ற சேவை வழங்கும் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலை புத்தகங்களில் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை அச்சிட்டுள்ளது.
மின்னணு நிதிப் பரிமாற்றத்தை செயல்படுத்தும் வங்கிகள், ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண்ணைக் கொண்டு பணத்தை குறிப்பிட்ட வங்கி மற்றும் குறிப்பிட்ட கிளைகளுக்கு ஒழுங்காக அனுப்பப் பயன்படுத்துகின்றன. மேலும், தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்தத் தொகை உடனடிப் பரிமாற்ற (RTGS) செயல்பாடு ஐஎஃப்எஸ்சி குறியீட்டை சார்ந்திருக்கிறது.
ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் செலுத்த விரும்பும்போது மக்களுக்கும் ஐஎஃப்எஸ்சி குறியீடு தேவை. பணம் பெறும் வங்கிக்கிளையின் ஐஎஃப்எஸ்சி விவரங்கள் அளிக்கப்பட்டால் மட்டுமே பணம் குறிப்பிட்ட வங்கிக் கிளைக்கு போய்ச்சேரும்.
இந்த ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் மூலம் பணப்பரிமாற்றம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும். இது மட்டுமல்லாமல், அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படும்.