நீர் தாவரங்களின் ஒன்றான தாமரை, கொடி இனத்தைச் சேர்ந்தது. நீருக்குள்ளே படர்ந்து வளரக்கூடியது. இதில் பல வகைகள் இருந்தாலும் வெண்தாமரை, செந்தாமரை மிக முக்கியமானவை. இந்தத் தாமரையின் அடிப்பகுதியில் கிழங்குகள் காணப்படுகின்றன. இவை உடல் நோய்களை தீர்க்கும் மருத்துவக் குணம் நிறைந்தது. கண் நோய், கண் எரிச்சல் போன்ற நோய்களைத் தீர்த்து கண் பார்வையை தெளிவடையச் செய்யும்.
மருத்துவப் பயன்கள்: தாமரை கிழக்கில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின் 'பி' மற்றும் 'சி' சத்து சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. மேலும், அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டும் உள்ளது. வைட்டமின் 'சி' உடலின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்தின் உறுதியை அதிகரிக்கிறது.
இதில் உள்ள பி6 வைட்டமின் இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தேவையற்ற டென்ஷன் அதன் மூலம் ஏற்படும் தலைவலியை போக்குகிறது. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், தாமரை வேர் மற்றும் கிழங்கில் அதிகப்படியாக இருக்கும் பொட்டாசியம் உடலில் உள்ள திரவங்களுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதோடு, அதிகப்படியான சோடியம் இரத்த ஓட்டத்தை பாதிக்காமல் தடுக்கிறது.
தாமரை கிழங்கில் இருக்கும் இரும்பு சத்து மென்மையான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. தாமரை வேர் தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும், இரத்தத்திலும் உள்ள வெப்பத்தைக் குறைக்கலாம். பெண்களுக்கு கருப்பையில் இருந்து இரத்தம் கொட்டுவதைக் கட்டுப்படுத்துகிறது.
தாமரை கிழங்கில் அடங்கியுள்ள சத்துக்கள்: இதில் கொழுப்பு, சர்க்கரை எதுவும் இல்லை. 100 கிராம் தண்டில் கார்போஹைட்ரேட் 16 கிராம், புரோட்டீன் 2 கிராம் இருக்கிறது. மேலும், காப்பர், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. தாமரை கிழங்கானது சற்று கசப்பு மற்றும் இனிப்பின் கூட்டு சுவையுடன் இருப்பதால் பச்சையாகவும் சாப்பிடலாம். உடலின் சோடியம், பொட்டாசியம் நிலையை 1:4 என்ற நிலையில் இது தக்க வைத்திருக்கும்.
இதய நோய் தீர்க்கும்: இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இருதயத்திற்கு பலத்தை உண்டாக்கும். இந்தக் கிழங்கை நன்றாக உலர்த்தி, இடித்து சலித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். சிறிது பொடி எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை இரு வேளை சாப்பிடலாம். இதனால் இரத்த ஓட்டம் சீராகி இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
பித்தநோய் கட்டுப்படும்: நெஞ்சில் கபம், காசநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிறிதளவு தாமரை கிழங்கு பொடியுடன் இஞ்சி சாற்றைக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட, கபம் கரையும். காச நோய் குறையும். இந்தப் பொடியை காய்ச்சிய பசும் பாலுடன் கலந்தும் தாராளமாக சாப்பிடலாம். பித்தம் தொடர்புடைய தொல்லைகள் மற்றும் வயிற்று வலி ஆகியவை நீங்கும்.
சரும நோய் குணமடையும்: தாமரை கிழங்கு பொடியுடன் சிறிது நீர் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி உள்ளுக்குள் சாப்பிடலாம். இதனால் இரத்தம் சுத்தமாகும். இத்துடன் சருமம் தொடர்புடைய சொறி, சிரங்கு, தேமல் போன்றவை குணமடையும். இந்தக் கஷாயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சி வடிகட்டி அதை தலைக்கு தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும், தலைவலி நீங்கும்.
இதை சமைக்கும்போது உப்பின் சுவை கிழங்கில் ஏறாது. இதனை வேக வைத்து சூப்புகளிலும் சேர்த்து குடிக்கலாம். தாமரைக் கிழங்கு துண்டுகளுடன் பூண்டு, இஞ்சி, மிளகாய் ஆகியவற்றைக் கலந்து பொரித்தும், வறுவலாகவும் செய்து சாப்பிடலாம்.