தஹி ஹண்டி போட்டியைப் பற்றி தெரியுமா?

Dahi Handi
Dahi Handi

தஹி ஹண்டி என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் இந்துப் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடர்புடைய ஒரு மகிழ்கலைப் போட்டி நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு கோபால் கலா அல்லது உடலோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

தீய மன்னன் கம்சனின் ஆட்சியின் போது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மறுக்கப்பட்டது. ஏனெனில், உற்பத்தி செய்யப்பட்ட பால் பொருட்களை மன்னரே கைப்பற்றினார். கோகுலத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெண்ணெய், தயிர் மற்றும் பால் உணவுகளைக் கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்புத்தனமாக திருடி பகிர்ந்து உண்பார். அதனால், அக்கம்பக்கத்தினர் தயிர் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களுக்கான பானைகளை அவருக்கு எட்டாத உயரத்தில் தொங்கவிடத் தொடங்கினர் ஆனால் கிருஷ்ணர், அக்கம் பக்கத்து வீடுகளின் கூரையில் தொங்கவிடப்பட்ட பானைகளை உடைக்க மனித பிரமிடுகளை உருவாக்கி, உயரத்திலிருக்கும் பானைகளை உடைத்து அதிலிருந்து தயிர், வெண்ணெய் மற்றும் பால் பொருட்களைத் திருடி உண்பார். இதனால், இந்து சமயத்தில், கிருஷ்ணர் மக்கன் சோர் (வெண்ணெய் திருடன்) என்று குறிப்பிடப்படுகிறார்.

இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு தஹி ஹண்டி நடத்தப்படுகிறது. தயிர் (தஹி), வெண்ணெய் அல்லது மற்ற பால் சார்ந்த உணவு நிரப்பப்பட்ட ஒரு களிமண் பானையை வசதியான அல்லது உயரமான உயரத்தில் மக்கள் தொங்கவிடுவர். இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குழுக்களை உருவாக்கி, ஒரு மனிதக் கூம்பை உருவாக்கி, பானையை அடைய அல்லது உடைக்க முயற்சி செய்வர். அவர்கள் அவ்வாறு செய்யும் போது, மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, பாடி, இசை வாசித்து, அவர்களை உற்சாகமூட்டுவார்கள். இது ஒரு பழைய மரபு வழி நிகழ்வாகத் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் மனிதக் கூம்பை உருவாக்குவதில் பங்குபெறும் மக்களை கோவிந்தா (கிருஷ்ணரின் மற்றொரு பெயர்) அல்லது கோவிந்தா பதக் என்ற சொற்களைப் பயன்படுத்தி அழைக்கின்றனர் இவர்கள் நிகழ்வு நடக்கும் நாளிலிருந்து சில வாரங்களுக்கு முன்பு குழுக்களாக சேர்ந்துப் பயிற்சி செய்கிறார்கள். இந்தக் குழுக்கள் மண்டல்கள் என்று அழைக்கப்படுகின்றன. கூம்பு உருவாக்கத்திற்கு ஒருங்கிணைப்பு மற்றும் கவனம் தேவை. மிகக் குறைந்த அடுக்குகள் பெரும்பாலான நபர்களைக் கொண்டிருக்கின்றன. முன்னிருக்கும் அடுக்கு உறுதியானவையாகவும், அதே நேரத்தில் நடுத்தர அடுக்கு வீரர்கள், கீழே உள்ளவர்கள் மற்றும் தங்கள் தோள்களில் நிற்பவர்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். வெளிப்புற அடுக்கிலுள்ள தனிநபர்கள் சமநிலையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலுள்ள கடைசி அடுக்கிற்கு மெலிதானவர்கள் தேவைப்படுவதால், மேல் அடுக்கில் பொதுவாக சிறுவர் இருப்பர். பானையை உடைப்பது பொதுவாக பங்கேற்பாளர்கள் மீது அதன் உள்ளடக்கங்கள் சிந்துவதில் முடிவடையும். மரபு வழியாக, பார்வையாளர்கள் பங்கேற்பாளர்களைத் தடுக்கத் தண்ணீரை வீசுவர். மகாராஷ்டிரா மக்கள் மராத்தியில் "அலா ரே ஆலா, கோவிந்தா ஆலா" (கோவிந்தாக்கள் வந்துவிட்டார்கள்) என்று கோசமிடுவர்.

இதையும் படியுங்கள்:
ரஜப்புத்திரர்களின் புகழ்பெற்ற Kangra Paintings!
Dahi Handi

2012 ஆம் ஆண்டில், மும்பையின் தானேயில் நடைபெற்ற தஹி ஹண்டி நிகழ்ச்சியில் ஜோகேஸ்வரியைச் சேர்ந்த ஜெய் ஜவான் கோவிந்த பதக் என்ற மண்டல் 43.79 அடிகள் (13.35 m) கொண்ட 9 அடுக்கு மனிதக் கூம்பை உருவாக்கி கின்னஸ் உலக சாதனையினை நிகழ்த்தியது.

2012 இல், 225 க்கும் மேற்பட்ட கோவிந்தர்கள் காயமடந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். அப்போது ஜர்னல் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிசின் என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு அறிக்கையில், "தஹி ஹண்டி திருவிழாவில் மனிதக் கூம்பு உருவாக்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கான ஆபத்தும் உள்ளது" என்று தெரிவித்தது. இந்நிகழ்வைச் சிறப்புடன் நடத்திடப் பானையின் உயரத்தைக் குறைத்தல், குழந்தைகள் பங்கேற்பதைத் தடுத்தல், பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அந்தப் பத்திரிகை பரிந்துரைத்தது.

அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு 2014 ஆம் ஆண்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தஹி ஹண்டியில் பங்கேற்கத் தடை விதித்தது. அதன் பிறகு, குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்த வேண்டும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக கூம்பின் உயரம் 20 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. 2016 ஆம் ஆண்டில் இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com