
ஜப்பானின் யோமொன் காலத்தில் செய்யப்பட்ட ஒருவகைப் பண்டைக்கால மட்பாண்டத்தினை யோமொன் மட்பாண்டம் (Jōmon Pottery) என்கின்றனர். யோமொன் என்னும் சொல்லுக்கு, ஜப்பானிய மொழியில் 'கயிற்றுக் கோலம்' என்று பொருள். இது, மட்பாண்டம் செய்யும் போது கயிற்றை அழுத்தி அலங்காரம் செய்யப்படுவதைக் குறிக்கிறது. பண்டைய ஜப்பானின் யோமொன் காலத்தில் செய்யப்பட்ட இத்தகைய மட்கலங்களே ஜப்பானின் மிகப் பழைய மட்கலங்கள் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது.
தற்காலக் கியூசுவின் வடமேற்குக் கரையோரத்தில் உள்ள குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் கி.மு 12,700 காலப் பகுதியைச் சேர்ந்தவை என கதிர்வீச்சுக் காலக்கணிப்பு முறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. யோமொன் மட்பாண்டங்கள் இதற்கும் முந்தையக் காலத்தைச் சேர்ந்தவை எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்வேறுபட்ட நுட்பங்களின் துணையுடன் செய்யப்பட்ட காலக் கணிப்புக்கள் வேறுபட்ட காலங்களைக் காட்டுவதால், இது எக்காலத்தில் செய்யப்பட்டது எனக் கண்டறிவது கடினமானதாக இருந்து வருகிறது.
பண்டைய ஜப்பானில் யோமொன் காலம் கி.மு 300 வரை இருந்தது. யோமொன் காலம் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முதனிலை யோமொன் கி.மு 10,500 முதல் 8,000 வரையிலும், மிகமுந்திய யோமொன் காலம் கி.மு 8,000 முதல் 5,000 வரையிலும், தொடக்க யோமொன் காலம் கி.மு 5,000 முதல் 2,500 வரையிலும், நடு யோமொன் கி.மு 2,500 முதல்1,500 வரையிலும், பிந்திய யோமொன் கி.மு 1,500 முதல் 1,000 வரையிலும், இறுதி யோமொன் கி.மு 1,000 முதல் 300 வரையிலும் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஜப்பானில் முதனிலை யோமோன் மட்பாண்டங்கள் காணப்பட்ட களங்கள் 80 வரை உள்ளன. ஆனால், பெரும்பாலான யோமொன் மட்பாண்டங்கள் அதற்குப் பிற்பட்ட காலங்களைச் சேர்ந்தவைகளாக இருக்கின்றன.
பெரும்பாலான யோமொன் மட்பாண்டங்கள் வட்டமான அடிப்பகுதியைக் கொண்டவை என்பதுடன், இவை சிறிய அளவு கொண்டவை. இம்மட்கலங்கள் உணவுகளைச் சமைப்பதற்குப் பயன்பட்டவை என்பதைக் காட்டுகின்றன. பிற்கால யோமொன் மட்பாண்டக் கலங்கள் கூடிய வேலைப்பாடுகள் கொண்டவை. சிறப்பாக நடு யோமொன் கால மட்கல விளிம்புகள் சிக்கலான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.