தமிழ் பாரம்பரிய உடற்பயிற்சி சாதனம் கர்லா கட்டை பற்றித் தெரியுமா?

கர்லா கட்டை
கர்லா கட்டைhttps://www.aanthaireporter.in

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் பல வீடுகளில் இடம் பெற்றிருந்த மரத்தினாலான ஒரு உடற்பயிற்சி சாதனம் கர்லா கட்டை. அக்காலத்தில் இளைஞர்கள் இந்த கர்லா கட்டையினை தினந்தோறும் சுழற்றி உடலை வலுவாக வைத்திருந்தார்கள். நவீன உடற்பயிற்சி சாதனங்களின் வருகையின் காரணமாக தமிழர்களின் பாரம்பரியமான உடற்பயிற்சி சாதனமான கர்லா கட்டை மெல்ல மெல்ல காணாமல் போனது.

முற்காலத்தில் போர் வீரர்கள், மல்யுத்த வீரர்கள் முதலானவர்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சியாக கர்லா கட்டைப் பயிற்சி இருந்தது. தோளையும் கைகளையும் வலுவாக்கிக் கொள்ள இந்தப் பயிற்சியினைச் செய்தார்கள். கர்லா கட்டையில் கை கர்லா, புஜ கர்லா, தொப்பை கர்லா, குஸ்தி கர்லா, பிடி கர்லா, படி கர்லா என்று ஆறு வகை கர்லா பயிற்சிகள் உள்ளன.

கை கர்லா என்பது முதன் முதலாக பயிற்சியெடுக்க உதவி செய்யும் சிறிய வகை, எடை குறைவான கர்லா கட்டையாகும். புஜ கர்லா என்பது உடலின் புஜ பலத்தை அதிகரிக்கச் செய்யப்படும் கர்லா பயிற்சியாகும். தொப்பை கர்லாவினைத் தொடர்ந்து சுழற்றி பயிற்சி செய்து வந்தால் தொப்பை குறையும். குஸ்தி கர்லா என்பது குஸ்தி வீரர்கள் பயன்படுத்தும் ஒரு கர்லாவாகும். பிடி கர்லா என்பது போர் வீரர்கள் பயன்படுத்தும் கர்லாவாகும். படி கர்லா என்பது பெண்கள் பயிற்சி செய்ய பயன்படும் ஒரு கர்லாவாகும்.

கர்லா கட்டை செய்ய புளியமரம், வாகைமரம், கருவேலமரம், இலுப்பை மரம் முதலான மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேப்ப மரத்திலும் இதை செய்வதுண்டு. ஒவ்வொரு கர்லாவும் இரண்டு முதல் பத்து கிலோ எடை வரை என வெவ்வேறு எடை கொண்டதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
'பூமி அமலாகி'யிலிருக்கும் பொன்னான நன்மைகள்!
கர்லா கட்டை

கர்லா கட்டையின் ஒருபுறம் கைப்பிடி அமைந்திருக்கும். கைப்பிடியிலிருந்து மேல் பாகம் வரை மெல்ல மெல்ல பெரியதாக அமைக்கப்பட்டிருக்கும். முதலில் வலது கையில் கர்லா கட்டையின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தூக்கி செங்குத்தாக நிறுத்தி வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக தலைக்கு மேல் ஒரு சுழற்று சுழற்றி ஒரு விநாடி செங்குத்தாக நிறுத்த வேண்டும். ஐந்து அல்லது பத்து எண்ணிக்கையில் செய்த பின்னர் கர்லா கட்டையை இடது கைக்கு மாற்றி கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தூக்கி செங்குத்தாக நிறுத்தி இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக தலைக்கு மேல் ஒரு சுழற்று சுழற்றி ஒரு விநாடி நிறுத்த வேண்டும். இப்படி ஐந்து அல்லது பத்து எண்ணிக்கையில் செய்யலாம். இப்படியே முடிந்த வரை மாறி மாறிச் செய்ய வேண்டும். முதலில் சிறிய எடையிலான கர்லாவைப் பயன்படுத்தத் தொடங்கி அதன் பின்னர் பெரிய கர்லாவைச் சுழற்றலாம். கர்லா பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்பார்வையில் இதைப் பயில்வது சிறந்தது.

தற்காலத்தில் கர்லா கட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் புதுவையிலும் கர்லா கட்டையினை பலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும். தமிழர்களின் பாரம்பரிய உடற்பயிற்சிக் கலையான கர்லா கட்டை பற்றிய விழிப்புணர்வினை உலகம் முழுவதும் கொண்டு செல்வதும், கர்லா கட்டையை ஒலிம்பிக் விளையாட்டில் ஒன்றாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் ஆண்டு தோறும் டிசம்பர் 12ம் தேதி சர்வதேச கர்லா கட்டை தினம் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com