
தமிழ் வழக்கில் கால்கட்டுதல் என்றால் அது கேலியாக திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக இருந்தது. இதே சீனாவில் கால் கட்டுதல் என்றால் அது ஒரு குடும்பத்தின் பாரம்பரிய பெருமையை உணர்த்தும் ஒரு விஷயமாக இருந்துள்ளது. சீனாவின் பாரம்பரியமிக்க குடும்பங்களில் பெண் பருவமடைந்ததும் ஒருநாள் அவளது குடும்பத்தினர் ஒன்றாகக்கூடி கால்கட்டும் சடங்கினை செய்வார்கள். இந்த கால் கட்டும் சடங்கு அந்த பெண்ணிற்கு திருமண வாழ்க்கையை வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும் என்று நம்பினார்கள். மேலும் பாதங்களில் கட்டுப்போடுவது குடும்ப கௌரவங்களின் அடையாளமாகவும் இருந்துள்ளது.
என்னதான் கால் கட்டுதல் கௌரவத்தின் அடையாளமாக இருந்தாலும் அதனால் பல துன்பங்கள் பெண்ணிற்கு நேர்ந்தன. இந்த செய்முறையில் பெண்ணின் கணுக்காலின் பின்புறமும் விரல்களின் முன்புறமும் சேர்த்து இறுக்கி கட்டு போடுவார்கள். இந்த நடைமுறையில் பெண்ணின் கால் விரல்கள், குதிகாலை நெருங்கும்படி இறுகக்கட்டி இருப்பார்கள். 4 விரல்கள் பாதங்களுக்கு அடியில் சென்றுவிடும்.
ஹை ஹீல்ஸ் செருப்பு வடிவத்தில் கால்கள் மாறத் தொடங்கும். இந்த சடங்கு பெண்களுக்கு அதிக துன்பம் கொடுப்பதாக இருந்துள்ளது. கால் எலும்புகள் கடுமையாக அழுத்தப்பட்டு வலியை தரும், இதற்காக பெண்கள் கடும் துன்பத்தை அனுபவித்தாலும் பாரம்பரியத்தை காக்க, அவர்கள் வலியை தாங்கிக் கொண்டனர்.
காலங்கள் செல்ல பெண்களின் கால்கள் உருமாற தொடங்குகின்றன. கால் கட்டு போடப்பட்ட பெண்ணின் கால்களை தங்கதாமரை பாதங்கள் என்று வர்ணிக்கின்றனர். பாத எலும்பு வளர்ச்சி அடையும் காலத்தில் கால்கட்டு போடப்பட்டதால் பாதங்கள் வளர்ச்சி குறைந்து சிறிதாக இருக்கும். இத்தகைய சிறிய பாதங்களைக் கொண்ட பெண்களுக்கு அந்த காலத்தில் மாமியார் வீட்டில் நல்ல மரியாதை இருந்தது.
ஒரு பெண்ணின் பாதம் கட்டுப்பாட்டுடன் இருந்தால், அவளும் அந்த குடும்பத்திற்கு கட்டுப்பட்டு இருப்பாள் என்று நம்பிக் கொண்டிருந்தனர். நம்பிக்கை தானே வாழ்க்கை?
இந்த சீனப் பாரம்பரியம் அழகு, கௌரவம், பெருமை ஆகியவற்றின் அடையாளமாக இருந்தாலும், அது சீனாவின் வடக்கு பகுதிகளில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு இருந்தது. பொதுவாக மேலடுக்கைச் சேர்ந்த சீன சமூகத்தினர் மட்டுமே, இது போன்ற வழக்கங்களை கடைபிடிக்க முடிந்தது.
உழைக்கும் வர்க்கத்தினரால் கால் கட்டும் பழக்கத்தினை மேற்கொள்ள இயலாது. அவர்கள் வயல்களில் இறங்கி வேலை செய்தாக வேண்டும். மேலும் அன்றாட வீட்டு வேலைகளை செய்யும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இது முற்றிலும் விரோதமானதாக இருந்துள்ளது. அவர்கள் இந்த பழக்கத்தினை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதனால் இது மேல்தட்டு வர்க்கத்தினரால் கடைபிடிக்கப்பட்டது.
கால்கட்டு கலாச்சாரத்தின் தோற்றம்:
கி.பி 960–1279 ஆண்டு காலக் கட்டத்தில் இளம் பெண்களின் பாத அளவு மற்றும் வடிவத்தை மாற்றும் முறை சாங் வம்ச ஆட்சியில் நடைமுறையில் இருந்ததாக சில ஆவணங்ளில் குறிப்புகள் உள்ளது.
சாங் வம்ச பேரரசர் லி யூவின் அரசவை நடனக் கலைஞரான யாவ் நியாங், தனது பாதங்களை இவ்வாறு கட்டிக் கொண்டதாக இலக்கியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிக்க மனோபாவம்:
ஒரு பெண்ணின் பாதங்களை கட்டுவது, பெருமைக்குரிய விஷயமாக வெளியில் பேசிக்கொண்டாலும், உண்மையில் அது அடிமைப்படுத்துதலின் ஒரு பரிணாமமாக இருந்துள்ளது. இதனால் பெண்களை எளிதில் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாதபடி தடை செய்ய முடியும். வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பெண்ணால் மட்டுமே இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியும். கிட்டத்தட்ட இது ஒரு அடிமை சங்கிலி முறைதான்.
அடிபணிதலை பெண்களின் அடையாளமாக மாற்றவே இது போன்ற செயல்முறைகள் அன்றைய சீன கலாச்சாரத்தில் இருந்துள்ளது. மேலும் சமூக ஏற்றத்தாழ்வையும், பிரித்ததாளும் மனோபாவத்தையும் பிரதிபலித்துள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் பாதங்களை கட்டிக்கொண்டு வீட்டில் ஓய்வெடுக்க முடியாது. இதன் மூலம் பணக்காரப் பெண்ணை, பாரம்பரிய பெண் என்று எளிதில் அடையாளம் கொள்ளமுடியும். ஹான் இனத்தின் அடையாளமாக இது கருதப்பட்டதால் மஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் தடை செய்ய முயற்சி நடந்துள்ளது. பின்னர் நவீன சீனாவில் மக்கள் இந்த பழக்கத்தை பெருமளவில் கை விட்டுள்ளனர்.