
கலை என்பது மனித மனத்தின் கண்ணாடி; கலாச்சாரம் என்பது அந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் மரபும் பண்பாடும். அந்த இரண்டையும் இயற்கையின் மணத்துடன் கலந்து, மக்களின் வாழ்வோடு ஒன்றிணைக்கும் பொக்கிஷமே நாட்டுப்புறக் கலை. மண் வாசனையும், மக்கள் பாசமும், மரபின் வேர்களும் ஒன்றிணையும் இக்கலை, காலம் கடந்தும் தனது தனித்துவத்தைத் தக்க வைத்திருக்கிறது. அது பாடலாகவும், நடனமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும் உருவெடுத்து, கிராமங்களின் இதயத் துடிப்பை உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறது
1.நாட்டுப்புறக் கலையின் வகைகள்
நாடகக் கலைகள்: தெருக்கூத்து, தபால் நடனம், வில்லுப்பாட்டு, கன்னிமாடம் போன்றவை.
இசைக் கலைகள்: நாட்டுப்புற பாடல்கள், ஓவியப்பாட்டு, கோயில் திருவிழா இசைகள்.
நடனக் கலைகள்: கரகாட்டம், மயிலாட்டம், பம்பை நடனம், ஒயிலாட்டம்.
சிற்பக் கலைகள்: மண் பொம்மைகள், மரச்சிற்பங்கள், உலோக வேலைப்பாடுகள்.
2.நம் ஊர் கலைவிழாக்கள்
நாட்டுப்புறக் கலையில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு கதையைக் கூறும்.
தெருக்கூத்து – கதாநாயகனின் வீரத்தைப் பாடும் மேடை.
வில்லுப்பாட்டு – வில்லின் நூலில் இசையும் காவியங்கள்.
கரகாட்டம் – நீரின் ஆசீர்வாதத்தைப் பெற ஆடும் மகிழ்ச்சி நடனம்.
மயிலாட்டம் – இயற்கையின் அழகை மனித வடிவில் காட்டும் கலை.
ஒவ்வொரு கலைக்கும் பின்னால் ஒரு பண்டைய கதை, ஒரு ஆழமான மரபு பதிந்திருக்கும்.
3.மக்கள் வாழ்க்கையில் கலையின் வேர்கள்
வயல் வேலையால் சோர்ந்தவர்கள் கூட, கிராம விழாக்களில் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் புத்துணர்ச்சி பெறுவர். பாடல்களில் உழைக்கும் மக்களின் கனவுகளும், நடனங்களில் மகிழ்ச்சியின் பொங்கலும், இசையில் அவர்கள் வாழ்வின் சங்கீதமும் கலந்திருக்கிறது.
4.மரபை தாங்கும் மாமரம் போல
நாட்டுப்புறக் கலை என்பது வெறும் பொழுது போக்கல்ல, அது நம் அடையாளம். தமிழ்நாட்டின் கரகாட்டம் மழை வேண்டி ஆடும் பக்தி நடனம்; கரகாட்டம் ஆடும் இளம் பெண்களின் சிரிப்பு அதுவே நாட்டுப்புறக் கலையின் உயிர்ப்புள்ள உலகம். இது வெறும் கலை அல்ல; இது நம் மண்ணின் இதயத் துடிப்பு. வில்லுப்பாட்டு வீரர்களின் கதையை தலைமுறைக்கு சொல்லும் பாலம். வில்லுப் பாட்டு இல்லாமல் கோயில் திருவிழா இருக்காது. இந்த பாட்டை கேட்கவே நம் பாட்டி, தாத்தா மார்கள் கோயில்களில் வில் பூட்டியதுமே போய்விடு வார்கள். இவை நம் பண்பாட்டு மரபின் உயிர்த்தெழும் வடிவங்கள்.
5.காப்போம் – நம் கலை செல்வத்தை
இன்று நவீன வாழ்க்கை வேகம் நாட்டுப்புறக் கலைகளை மங்கச் செய்யும் நிலை வந்துவிட்டது. ஆனால், பள்ளிகளில், கல்லூரிகளில், கலாச்சார விழாக்களில் இக்கலைகளை கற்றுக் கொடுத்தால், அடுத்த தலைமுறைக்கும் மண்ணின் மணம் அறிமுகமாகும். அரசு, ஊடகம், மக்கள் – மூன்றும் சேர்ந்து காப்பாற்றும் பொறுப்பு நமக்கே.
6.நம் கலை உலகம் காணும் போது
நாட்டுப்புற நடனங்கள், இசைகள் இன்று உலக அரங்கில் கைத்தட்டல் பெறுகின்றன. ஒரு கரகாட்டக் குழு பாரிசில் ஆட, ஒரு வில்லுப்பாட்டு லண்டனில் இசைக்க, அங்கேயும் நம் மண் மணக்கிறது. கலைக்குப் புலம் எதுவுமில்லை; அது செல்லும் இடமெல்லாம் நம் மரபை விதைக்கிறது.
மண்ணின் இதயத் துடிப்பு
நாட்டுப்புறக் கலை என்பது பழைய நினைவுச்சின்னம் அல்ல, அது உயிரோட்டம் கொண்ட நம் கிராமங்களின் இதயத் துடிப்பு. அது கதையாடி, பாடி, ஆடி நம்மை நம் வேர்களோடு இணைக்கும் பாலம். மண்ணின் மணமும், மரபின் பெருமையும் வாழும் வரை நாட்டுப்புறக்கலை என்றும் நிலைத்து நிற்கும்.