
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுற்று, அது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிய நிலையில், அமெரிக்கப் படையினர் ஜப்பானில் இருந்து அமெரிக்காவிற்குத் திரும்பிய போது நினைவுச் சின்னங்களாக வாங்கிச் சென்றதற்குப் பின்பு, அமெரிக்காவிலும், அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஜப்பானியப் பாரம்பரியக் களிமண் பொம்மைகளான ஹகடா பொம்மைகள் (Hakata Doll) புகழ் பெற்றன. குறிப்பாக, மென்மையான மேற்பரப்பும், அற்புதமான கலைத்திறனும் கொண்ட ஃபுமி என்ற அழகிய ஜப்பானியப் பெண் பொம்மைகளும், சாமுராய் வீரர் பொம்மைகளும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஹகடா பொம்மைகளாக இருக்கின்றன.
இந்த ஹகடா பொம்மைகளின்(Hakata Doll) தோற்றம் எப்படி என்று பார்க்கும் போது, பதினேழாம் நூற்றாண்டில், ஜப்பானில் இருந்த ஹகடா எனும் ஊரிலிருந்த கூரை ஓடு செய்யும் சவுஹிச்சி மசாகிதான் கைவினைக் கலைஞர்கள், ஹகடா பொம்மைகளைச் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இக்கலைஞர்கள் முதலில் அங்கிருந்த சில பௌத்த கோயில்களுக்கு அப்பொம்மைகளை அன்பளிப்பாக அளித்தனர். அதன் பின்னர், அந்தக் காலத்தில் ஹகடாவின் ஆட்சியாளராக இருந்த குரோடா நாகமசாவிற்கு அப்பொம்மைகளைப் பரிசாக அளித்தனர். அந்த பொம்மைகள் ஹகாடா சுயாகி நைங்கோ (Hakata suyaki ningyō) என்று அழைக்கப்பட்டன. காலப்போக்கில், ஜப்பான் பொதுமக்களிடையே இந்தப் பொம்மைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது என்று சொல்கின்றனர்.
ஆனால், ஜப்பானின் புகழ்பெற்ற திருவிழாவான ஹகடாஜியான் யமாகசாவின் போது கஜாரியமகாசா என்றழைக்கப்படும் சப்பரங்களில் ஒவ்வொரு தெருவிலும் ஹகடா பொம்மைகள்(Hakata Doll) கொலு போல் அடுக்கி வைக்கப்படுகின்றன. அண்மையில் ஹாகடாவில் மேற்கோள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளில் பொம்மைகளும் உள்ளடக்கியவையாக இருந்தன. இதன்படி ஹகடா பொம்மைகளின் தோற்றமானது சீனாவாக இருக்கலாம் எனப்படுகிறது.
அதிக வண்ணங்கள் இல்லாமல் எளிமையாக இருந்த ஹகடா பொம்மைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், வண்ணக் கலை படைப்புகளாக மாற்றப்பட்டன. ஹகடா பொம்மைகள் 1890 ஆம் ஆண்டு ஜப்பான் தேசிய தொழில்துறை கண்காட்சி மற்றும் 1900 ஆம் ஆண்டு எக்ஸ்போசிஷன் யுனிவெல்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்று, பெரும் விவாதப் பொருளாக மாறியது.
ஹகடா நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட "டால்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்" என்ற பொம்மைகள் பாரிஸ் வேர்ல்ட் எக்ஸ்போவில் பிரபலமானது, அது இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பொது ஆராய்ச்சி அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது. ஆடம்பர நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த "டால்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்" அந்த நாட்களில் 1 யென் மற்றும் 50 யென்களுக்கு விற்கப்பட்டன என்கின்றனர்.
பொதுவாக ஹகடா பொம்மை தயாரிப்பாளர்கள், நீர்விட்டு நன்கு பிசைந்த களிமண்ணில் கத்தி, கரண்டி ஆகியவற்றைக் கொண்டு இந்த பொம்மைகளைச் செதுக்குவார்கள். பொம்மையின் உட்புறத்திலுள்ள களிமண்ணை நீக்கி, அந்தப் பொம்மையின் எடையைக் குறைப்பார்கள். இந்த பொம்மைகளைப் பத்து நாட்கள் வெயிலில் காய வைத்து, அதன் பின்னர் சூளையில் 900 டிகிரி வெப்பநிலையில் 8 மணி நேரம் சுடுவார்கள்.
சூடு ஆறிய பிறகு எடுத்து காய்கறி, தாவரச் சாறுகளிலிருந்து எடுக்கும் இயற்கையான வண்ணங்களைப் பூசுவார்கள். ஹகடா பொம்மைகளைச் செய்வதற்கு நுட்பமான கைத்திறனும், பொறுமையும் தேவைப்படுகின்றன. இந்தப் பொம்மைகளை உருவாக்குவதற்கான அடிப்படைத் திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கு ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இதனால் தற்கால இளைஞர்கள் ஹகடா பொம்மைத் தயாரிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற குறைபாடும் இருக்கின்றன.
ஜப்பானிய அரசு ஹகடா பொம்மைகளின் பெருமைகளைக் காப்பாற்றும் வழியில், ஹகடா பொம்மை தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.