இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வளமான கலாசாரப் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வண்ணம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது விவசாயச் செழிப்பு, சமூகப் பிணைப்பு மற்றும் இயற்கைச் சுழற்சிகளின் கொண்டாட்டத்திற்கான நன்றி உணர்வின் பிரதிபலிப்பாகும்.
தமிழ்நாட்டில் போகி பண்டிகையை தொடர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இங்கு புதுப்பானையில் புது பச்சரிசியில் பொங்கல் வைத்து மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் பொங்கல் பண்டிகை என்ன பெயர்களில் கொண்டாடப்படுகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் - மகர சங்கராந்தி: இந்த மாநிலங்கள் உட்பட, வட மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகையை மகர சங்கராந்தி திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். மகர சங்கராந்தி என்பது சூரியன் மகர ராசிக்கு மாறுவதைக் குறிக்கிறது. இது குளிர் காலத்தின் முடிவையும் நீண்ட நாட்களின் தொடக்கத்தையும் குறிக்கிறது. நம்பிக்கை மற்றும் செழிப்பை குறிக்கிறது.
கொண்டாட்டங்கள்: இந்த மாநிலங்கள் காற்றாடித் திருவிழாவுக்கு பெயர் பெற்றது. அங்கு மக்கள் வண்ணமயமான காற்றாடிகளைப் பறக்க விட்டுக் கொண்டாடுகிறார்கள். பாரம்பரிய தானியங்களை வைத்து இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்து உண்கிறார்கள்.
2. அஸ்ஸாம் - போகலி பிஹு: அறுவடைப் பருவத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் ஜனவரி மாதம் போகலி பிஹு அல்லது மார்க் பிஹு கொண்டாடப்படுகிறது. இது விருந்து மற்றும் விழாக்களுக்கான நேரம் ஆகும். இவர்களது கொண்டாட்டங்களில் சமூக விருந்துகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தீப்பந்தங்கள் ஆகியவை அடங்கும். மக்கள் அரிசி கேக்குகள் போன்ற சிறப்பு உணவுகளைத் தயாரித்து இசைக் கருவிகளை வாசித்து நடனமாடி மகிழ்கிறார்கள். இந்தத் திருவிழா சமூகப் பிணைப்பு மற்றும் அறுவடைக்கான நன்றியை வலியுறுத்துகிறது.
3. பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகள் - லோஹ்ரி: இந்த மாநிலங்களில் பொங்கல் பண்டிகையை லோஹ்ரி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அங்கே கரும்பு அறுவடை முடிந்து கொண்டாடப்படும் திருவிழாவாகும். விவசாயிகளுக்கு மிக முக்கியமான பண்டிகை. மாலையில் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி மக்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் கொண்டு பங்க்ரா மற்றும் கித்தா போன்ற நடனங்களை ஆடுகிறார்கள். எள், வெல்லம் பாப்கார்ன் போன்ற பாரம்பரிய உணவுகள் சூரிய கடவுளுக்கு காணிக்கையாக வழங்கப்படுகின்றன.
4. தமிழ்நாடு - தைப்பொங்கல்: தைப்பொங்கல் என்பது தமிழ்நாட்டில் தை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையைக் குறிக்கிறது. அறுவடை முடிந்து சூரியக் கடவுளுக்காக புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளை வெள்ளையடித்து, அரிசி மாவுக் கோலங்கள் போட்டு அலங்கரித்து, பல்வேறு பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய குடும்ப விருந்துகளுடன் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
5. மகாராஷ்டிரா - ஹடகா: இங்கு ஹடகா என்பது அறுவடைக் காலத்தையும் மழை மற்றும் நல்ல விளைச்சலுக்கான பிரார்த்தனைகளையும் குறிக்கிறது. இந்தத் திருவிழா ஏராளமான விளைச்சலுக்காக தெய்வங்களுக்குக் காணிக்கை செலுத்தும் சடங்குகளை உள்ளடக்கியது. உள்ளூர் விவசாயப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தந்து பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
6. மேற்கு வங்காளம் - பூஷ் பார்பன்: பூஷ் பார்பன் பெயரில் இங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பெங்காலி நாட்காட்டியின் பௌஷ் மாதத்தின்போது அறுவடைக்காலத்தை குறிக்கும் வகையில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அரிசி மாவு மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட பாரம்பரிய இனிப்புகளை தயாரித்து, இசை, நடனம் மற்றும் விருந்துகளுடன் கொண்டாடுகின்றனர்.
7. உத்திரப்பிரதேசம் - கிச்சடி மேளா: இங்கு கிச்சடி மேளா என்கிற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது மகர சங்கராந்தியுடன் ஒத்துப்போகிறது. நல்ல அறுவடைக்கான நன்றியை வலியுறுத்தும் நாளாக இது இருக்கிறது. மக்கள் அரிசி மற்றும் பருப்புக் கலவையில் கிச்சடி தயாரித்து வழிபடுகிறார்கள். இது மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. சமூகக் கூட்டங்களில் உள்ளூர் கைவினைப் பொருட்கள் உணவுக் கடைகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் கண்காட்சிகள் நடைபெறும்.