'சுதகதகோனே' கொண்ட குத்தூ வீடுகள் (Guthu Mane) தெரியுமா?

Guthu Mane
Guthu ManeImg Credit: Wikimedia Commons
Published on

முன்பு துளு நாடு என்றழைக்கப் பெற்ற தற்போதைய கேரளத்தின் ஒரு பகுதியையும், கர்நாடகத்தின் தென் கன்னட மாவட்டத்தையும் உள்ளடக்கிய பகுதியில் வசிக்கும் பந்த் சமூகத்தினரின் மரபு வழியிலான வீடுகளை குத்தூ வீடு அல்லது குத்தூ மனை (Guthu Mane) என்கின்றனர். இவ்வகை வீடுகள் கூட்டுக் குடும்பங்களுக்கு ஏற்றவாறு பெரியதாக கட்டப்பட்டவை ஆகும். பொதுவாக, இவர்கள் நிலக்கிழார்களாக இருந்ததால், இவர்களது வீடுகள் இவர்களின் தோட்டங்களுக்கு நடுவில் கட்டப்பட்டிருக்கின்றன.

மூங்கில் கம்புகளால் உருவாக்கப்பட்டுள்ள வீட்டின் முன் வாசலை ‘துடமே’ என்றும், வீட்டின் முன் பகுதியில் உள்ள வரந்தாவை ‘ஜால்’ என்றும், வீட்டின் நுழைவுப் பகுதியை ‘முகசாலே’ என்றும், வீட்டின் கதவுகளை ‘ஹெப்பகிலு’ என்றும் சொல்கின்றனர். இக்கதவுகள் தேக்கு அல்லது கருங்காலி மரப் பலகைகளைக் கொண்டு நுட்பமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருக்கும். முன்வாசலைத் தாண்டி உள்ளே நுழையும் பகுதி ‘அங்கலா’ என்று அழைக்கப்படுகிறது. அலங்காவைத் தாண்டினால் எதிர்ப்படுவது ‘சாவடி’ எனப்படும் அறையாகும். 

சாவடிதான் விட்டின் முதன்மைப் பகுதியாகும். இந்தச் சாவடி அறை மரத் தூண்களால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பகுதியில் உள்ள மரம் வேலைப்பாடுகள் கொண்டதாக, இந்து சமயப் புராணக் கதைகள், பறவைகள், விலங்குகள், துளு நாட்டுச் சிறப்புகள் போன்றவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்த அறையில் இருக்கும் கம்பீரமான மர இருக்கையை 'நியாயபீட' என்று அழைக்கின்றனர். இதுதான் அந்த வீட்டின் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள மூத்த தாய் அமருமிடம். ஏனென்றால், இச்சமூகம் ஒரு தாய் வழிச் சமூகமாகும்.

சாவடிக்கு அடுத்துள்ள பகுதி ‘நடுமனே’ என்பதாகும். இது பெண்கள் மட்டும் புழங்கும் பகுதி. இந்த அறையின் கதவுகள் பலா மரத்தால் செய்யப்பட்டவை. இந்த நடுமனையில்தான் பெண்கள் பயன்படுத்தும் பொருள்களான நகைகள் வைக்கும் அலமாரி போன்றவை இருக்கும். இதற்கு அடுத்தபடியாக ‘பண்டசால’ என்னும் கிடங்கு அறை உள்ளது.

சாவடி அறையின் மூலையில் மாடிக்குச் செல்ல படிக்கட்டுகள் இருக்கும். மாடியில் பல படுக்கையறைகள் கொண்டிருக்கும். மாடியில் தென் மேற்கு மூலையில்தான் குடு்ம்பத் தலைவியின் பெரிய படுக்கையறை இருக்கும். குளியலறை பெரும்பாலும் வீட்டின் பின்புறத்தில் அமைந்திருக்கும்.

இவ்வீடுகளில் வீட்டை விட்டுத் தள்ளி ஒரு அறை மட்டும் தனியாக இருக்கும். இது ‘சுதகதகோனே’ என அழைக்கப்படுகிறது. இந்த அறை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்குவதற்கான தனி அறையாகும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் 'கோட்டிபுவா' நடனம்!
Guthu Mane

வீட்டின் தலைவர் அமர்ந்திருக்கும் மர ஊஞ்சல்கள், மார்புப் பெட்டிகள், அலமாரிகள், நாற்காலிகள், எழுதும் மேசைகள், சாய்வு நாற்காலிகள் மற்றும் சிறந்த அமரும் பலகைகள் அனைத்தும் இந்த வீடுகளின் பகுதியாக இருக்கின்றன. சில வேளைகளில் இப்பொருட்களெல்லாம், தந்தத்தால் பதிக்கப்பட்ட அழகான நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தன.

வீட்டின் நடுப்பகுதி மேற்கூரையில்லாமல் திறந்த வெளி முற்றமாக இயற்கை வெளிச்சத்தையும் காற்றையும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். இந்தப் பகுதியில் துளசிச் செடி வளர்க்கும் வழக்கம் உள்ளது. மழை நீர் சேமிப்பதற்கான பாத்திரங்கள் இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

பந்த் சமூகத்தினரின் குத்தூ வீடுகள் கட்டிட அமைப்பில் ஏறக்குறைய கேரளத்து நாயர்களின் தரவாட்டு வீடுகளை ஒத்ததாக உள்ளன. ஆனால், கேரள வீடுகளை விட, இந்த குத்தூ வீடுகள் உயரமான கூரைகளைக் கொண்டவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com