
இந்தியாவில் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான பணிகளில் ஒன்று காவல்துறை பணியாகும். இரவு பகல் பாராமல் காவல்துறையினர் தங்கள் பணியை சிறப்பாக செய்வதால்தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது. ஒருநாட்டில் காவல்துறையினர் இல்லாமல் பாதுகாப்பாக வாழ முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநில காவல் துறையிலும் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும் சீருடையின் நிறம் மட்டும் பொதுவானதாக இருக்கும். இந்தியாவில் கொல்கத்தாவை தவிர்த்து அனைத்து மாநில போலீசாருக்கும் காக்கியே சீருடையாக இருக்கிறது. போலீஸ் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது ‘காக்கி’ நிறம்தான். காக்கி நிற உடையை பார்த்தாலே, இவர் போலீஸ்காரர் தான் என்று நினைக்கும் அளவுக்கு காக்கி போலீசின் அங்கமாக இருக்கிறது. இந்த காக்கி நிறம் எப்படி போலீஸ்துறையின் சீருடையாக மாறியது தெரியுமா?
இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் அமைதிக்காகவும், மக்களை கண்காணிக்கவும் போலீஸ்துறை உருவாக்கப்பட்டது. அப்போது வெள்ளை உடைதான் போலீசாரின் சீருடையாக இருந்தது.
வெள்ளை உடை மண்ணும், தூசும் பட்டு சீக்கிரமாக அழுக்காகி அசிங்கமாக தெரிந்தது. இது மக்களிடையே போலீசாருக்கு இருக்கும் மரியாதையை குறைப்பதாக கருதினர். மேலும் போலீசாரை கிளர்ச்சியாளர்கள் தாக்கும்போது தங்கள் வெள்ளை உடையில் சேறு, சகதியை பூசிக் கொண்டு போலீசாரின் அழுக்கான வெள்ளை சீருடை போல் மாற்றி, போலீசாராக காட்டிக்கொண்டனர். இதனால் போலீசாரை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.
இந்த காரணங்களால் போலீசாருக்கு வேறு நிறத்தில் சீருடை தேவைப்பட்டது. பல வண்ணங்களில் சீருடையை முயற்சித்து பார்த்தும் சரியான தீர்வை காண முடியவில்லை. பின்னர் தேயிலை இலையை பயன்படுத்தி தனித்துவமான ‘காக்கி’ நிறத்தை உருவாக்கினர். இது வெளிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தின் கலவையாக இருந்தது. இந்த நிறத்தில் அமைக்கப்பட்ட சீருடையானது கறையையும், அழுக்கையும் அதிகளவு வெளியில் தெரியாதவாறு அமைந்திருந்தது. எனவே இந்த உடையையே சிறந்ததாகக் கருதினர்.
காவல்துறை, பெரும்பாலும் வெளிப்புறத்தில், சாலைகள், மக்கள் கூடும் இடங்களில் பணியாற்றுபவர்கள். எனவே, காக்கி நிறம், வெளிப்புற சூழலுக்கும், மண்ணுக்கும் பொருந்தி, அடையாளம் காணப்படாமல் இருக்க உதவுகிறது. 1847-ம் ஆண்டு ஆங்கிலேயர் காக்கி உடையை போலீஸ்துறையின் அதிகாரப்பூர்வ சீருடையாக அறிவித்தனர். அன்றில் இருந்து காக்கி சீருடை இந்திய போலீசாரின் அடையாளமாக இருந்து வருகிறது. பல நாடுகளில் போலீசாருக்கு வெவ்வேறு நிறத்தில் சீருடை இருந்தாலும் இந்தியாவின் காக்கி உடை தனி மரியாதையையும், கம்பீரத்தையும் போலீசாருக்கு அளிக்கிறது. காக்கி நிறம், இராணுவ சீருடையில் பயன்படுத்தப்பட்டதால், காவல்துறைக்கும் அதனுடன் தொடர்புடைய ஒரு தொடர்பு இருப்பது போல தோற்றமளிக்கிறது.
காக்கி சீருடை, முதன்முதலில் பிரிட்டிஷ் இராணுவத்தால் 1880-களில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, பல நாடுகள் காக்கி நிறத்தை தங்கள் இராணுவ சீருடையின் நிறமாகப் பயன்படுத்தின.