

சங்கு :
ஒரு போரை அறிவிப்பதென்றால் முரசு கொட்டுவார்கள். கூடவே சங்க நாதம் எழுப்புவார்கள். மகாபாரத போரில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது.
ஒவ்வொரு நாள் காலையிலும், சங்க நாதம் எழுப்பி போரை ஆரம்பித்து, மாலை சூரிய மறைவுக்கு முன்னர் அந்நாளைய போரை நிறுத்தி விடுவார்கள். எக்காரணம் கொண்டும் சூரிய மறைவுக்கு பிறகு போரை நடத்த மாட்டார்கள். அப்படி ஒரு கட்டுப்பாடும் நேர்மையும் கடைபிடிக்கப்பட்டது.
சங்கு போர்க்களத்தில் அறிவிப்பு கருவியாக மட்டுமல்லாது, அது புனிதமாக கொண்டாடப்பட்டது. அதிலிருந்து எழும் நாதம் இறைத்தன்மை உடையதாகவும் கருதப்பட்ட து.
ஆதலால் தான் இன்றும் ஆலயங்களிலும், இல்லங்களிலும் சங்கு வைத்து பூஜை மேற்கொள்கிறார்கள்.
தாமரை மலர்:
தாமரை மலர் சேற்றில் மலர்ந்தாலும், தெய்வீக தன்மையுடையதாக கருதப்படுகிறது. மகாபாரத கதையில் தாமரை மலர் சிறப்பாக வர்ணனை செய்யப்பட்டுள்ளது.
தெய்வீக உருவங்கள் எல்லாம் தாமரை மலரில் வீற்றிருப்பது போலவே ஓவியங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்றும் வழிபாட்டில் இறைவனுக்கு தாமரை மலர் சூட்டி மனதார வேண்டுகிறோம்.
வில்-அம்பு:
மகாபாரதம் என்றால் விஜயன் (அர்ஜுனன்) நினைவுக்கு வருவார். வில் என்றவுடன் அர்ஜுனன் முன்னே வந்து நிற்பார். வில் செலுத்துவதில் விஜயன் மிக சிறந்தவராக இருந்துள்ளார்.
ராமர் சீதையை மணமுடிக்க சிவதனுசு என்ற சிவனின் சக்தி வாய்ந்த வில்லினை முறித்து மணமுடித்து கொண்டார்.
தசரா பண்டிகை காலத்தில் சிறுவர்கள் வில் விளையாட்டு விளையாடி மகிழ்வது, ராமர் சிவதனுசு வில்லை முறித்த நிகழ்வை பாராட்டி மகிழத்தான்.
பகடை:
பகடை என்றவுடன் நம் கண் முன்னே சகுனிதான் நிற்பார். பகடை உருட்டி விளையாடுவதில் அவர்க்கு நிகர் அவரே. மகாபாரத போருக்கு வித்திட்டது இந்த பகடை விளையாட்டு தான்.
துரியோதன் தர்மனை பகடை விளையாட்டிற்கு அழைப்பிற்கு விடுக்கிறார். தர்மன் அதை மறுத்து இருக்கலாம். தமக்கும் பகடை விளையாட்டில் திறமை இருப்பதாக எண்ணி ஒப்பு கொள்கிறார். விளையாட்டின் போது, துரியோதனன் சாமர்த்தியமாக என் சார்பாக மாமன் சகுனி விளையாடுவார் என்று ஒதுங்கி கொள்கிறான்.
பகடைகள் எல்லாமே… சகுனி சொல்படி கேட்கும் என அறியாத தருமன்… ஒவ்வொரு பொருட்களாக சகோதரர்கள் அனைவரையும் வைத்து சூது விளையாடுகிறார். இந்த சூது விளையாட்டில் அனைத்தையும் தோற்ற பிறகு இறுதியாக பாஞ்சாலியை பணயமாக வைத்து விளையாடி தோற்று விடுகிறார் தர்மன்.
இன்றைய நாளிலும் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் பகடை விளையாடுகிறார்கள். விளையாடும் பொழுதே இந்த பகடை விளையாட்டுதான் ஒரு போருக்கே வித்தாக அமைந்து விட்டது. ஆகையால் அடிக்கடி விளையாடக் கூடாது என்று பேசிக் கொள்வார்கள்.