
முகலாயப் பேரரசர் அக்பரின் கட்டளையின்படி மகாபாரதம், பாரசீக மொழியில், இராஸ்நாமா (Razmnama) என்று மொழிபெயர்க்கப்பட்டது. பாரசீக மொழியில், "ராஸ்" என்றால் "போர்" என்றும், "நாமா" என்றால் "கதை" அல்லது "வரலாறு" அல்லது "காவியம்" என்றும் பொருள். அதாவது போர்க்கதை என்று பொருள் கொள்ளலாம்.
பதிவுகள் மற்றும் மொழிபெயர்ப்பிற்காக 1574-ம் ஆண்டில், பத்தேப்பூர் சிக்ரியில் மக்தாப் கானா என்கிற 'மொழிபெயர்ப்பு இல்லம்' ஒன்றைத் தொடங்கினார் அக்பர். இராஜதரங்கிணி, இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய சமஸ்கிருத புத்தகங்களை முகலாய அரசவையின் இலக்கிய மொழியான பாரசீக மொழியில் மொழிபெயர்க்க அவர் ஒரு குழுவையும் நியமித்தார். அக்பரின் அரசவை மொழிபெயர்ப்புகள் பல படிகளில் செய்யப்பட்டன. இதன் பொருள் இந்து அறிஞர்களால் விளக்கப்பட்டது.
1582-ம் ஆண்டில் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பு பணி 1584 முதல் 1586-ம் ஆண்டுக் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
பாரசீக மொழியிலான இராஸ்நாமா, முதல் வரைவு முஸ்லிம் இறையியலாளர் நகிப் கானால் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டது.
பின்னர், அது அக்பரின் அவையில் இடம் பெற்ற நவரத்தினங்களில் ஒருவரன பைசியால் நேர்த்தியான உரைநடை அல்லது வசனமாக மேம்படுத்தப்பட்டது.
இன்று இந்தப் படைப்பின் நகல் ஜெய்ப்பூர் நகர அரண்மனை வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் முஷ்பிக்கின் ஓவியங்களுடன் காணப்படுகின்றது. இந்த இராஸ்நாமாவுக்கு அபுல் ஃபசல் முன்னுரை எழுதியுள்ளார். இந்தப் பிரதியின் 11வது பதிப்பில் அபுல் ஃபசல் கி. பி. 1588-ம் ஆண்டு என தேதியைக் குறிப்பிடுகிறார்.
ஜெய்ப்பூர் இராஸ்நாமாவில் அக்பர், ஷாஜகான் மற்றும் சா ஆலாம் ஆகியோரின் முத்திரைகள் உள்ளன. இந்த கையெழுத்துப் பிரதியில், 169 அத்தியாயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பசவன், தஸ்வந்த் மற்றும் லால் ஆகியோர் இதனை நகலெடுத்த கலைஞர்கள் ஆவர். இக்கையெழுத்துப் பிரதியின் 147 மாதிரிகள் 1883-ம் ஆண்டில் டி.எச்.ஹென்ட்லியின் மெமோரியல்ஸ் ஆஃப் தி ஜெய்ப்பூர் எக்சிபிசன் என்ற புத்தகத்தில் மீண்டும் உருவாக்கப்பட்டன.
இராஸ்நாமாவின் இரண்டாவது நகல் 1598 மற்றும் 1599-ம் ஆண்டுகளுக்கு இடையில் முடிக்கப்பட்டது. முதல் பிரதியுடன் ஒப்பிடும் போது, இரண்டாவது பிரதியுடன் 161 ஓவியங்கள் மிகவும் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இவை இந்து மதத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்பதால் இந்தப் பிரதிகள் அரச குடும்ப உறுப்பினர்களுக்குப் பரிசுகளாக அனுப்பப்பட்டன.
அக்பரின் மத அலுவலகத்தில் உறுப்பினர் அப்துல் காதிர் பதாயுனியின் கூற்றுப்படி, அக்பர் தனது இராச்சியத்தின் அனைத்து அமீர்களுக்கும் பிரதிகளை அனுப்ப உத்தரவிட்டார் என அறிய முடிகிறது. அவற்றைக் கடவுளிடமிருந்து பெறப்பட்ட பரிசு எனவும் அறிவுறுத்தப்பட்டது. அக்பரின் அரசவையில் இடம் பெற்றிருந்த வரலாற்றாசிரியரான அபுல் ஃபசல் எழுதிய முன்னுரையின்படி, இந்தப் பரிசுகளின் பின்னணியில் உள்ள நோக்கமும் அவற்றின் விநியோகமும் மிகவும் புனிதமானவை.